ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 9 - கலாநிதி சேரமான்

தம்மால் இனம்காணப்படும் எதிரி அமைப்புக்களுக்குள் ஊடுருவல்களை மேற்கொள்வதில் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் உளவாளிகளை ஆழமாக ஊடுருவ வைப்பதிலும் இந்தியப் புலனாய்வாளர்கள் கைதேர்ந்தவர்கள். தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த இப்படியான ஊடுருவல் நடவடிக்கை ஒன்றை இங்கு பதிவு செய்கின்றோம்.

அது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராமம். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் போன்று தான் அந்தக் கிராமமும் இருந்தது. புவியியல் ரீதியில் அக்கிராமம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

ஆயினும் அதனை அண்டிய கடலோரப் பகுதிகள் 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. 10.10.1987 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் மத்தியில் யுத்தம் வெடித்த பின்னரும் அக் கிராமத்தை அண்டிய கடலோரப் பகுதிகளைத் தமது நடவடிக்கைகளுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் குறித்த கிராமம் அடிக்கடி இந்தியப் படைகளின் சுற்றிவளைப்பிற்கு ஆளாகத் தொடங்கியது.

kk

அக் கிராமத்தில் ஒரு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் நிகழ்ந்தால் போதும். மறுநாள் அக்கிராமம் இந்தியப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு சல்லடையிடப்படும். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தங்கியிருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படும் வீடுகளில் உள்ள ஆண்கள் இந்தியப் படைகளின் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதனால் நாய்கள் குரைக்கத் தொடங்கினால் போதும், உடனேயே அந்தக் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் கொல்லைப் புற வேலிகள் மீது ஏறிப் பாய்ந்து தப்பியோடுவார்கள்.இப்படியே நாட்கள் போகப் போக தங்களின் மத்தியில் இந்திய உளவாளி ஒருவன் மறைந்திருப்பதை அக் கிராமத்து மக்கள் உணரத் தொடங்கினார்கள். ஆனால் யார் அந்த உளவாளி என்பது தான் அக் கிராமவாசிகளுக்குத் தலையிடியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அந்த ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும், யுவதி ஒருவரும் போராளிகளாக இருந்தார்கள். அவர்களை விட ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய அமைப்புக்களில் அங்கம் வகித்துப் பின்னர் தேச விரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அவ் அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்ட பொழுது அவ் அமைப்புக்களில் இருந்து விலகிய மூன்று நபர்களும் அக் கிராமத்தில் இருந்தார்கள்.

ரெலோவில் இருந்து விலகியவர் வெளிநாட்டில் இருந்தார். அவரது சகோதரரோ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார். எஞ்சியிருந்தவர்கள் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் இரண்டு பேர். இவர்களில் ஒருவர் 25 வயது நிரம்பிய இளைஞர். முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்ததை அடுத்து அவ் அமைப்பில் இருந்து விலகிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக மாறினார்.

நல்லூரில் ஈகச்சுடர் லெப்.கேணல் அவர்களின் உண்ணாவிரதம் இடம்பெற்ற பொழுது அவருக்கு ஆதரவாக தமிழீழ தாயகம் தழுவிய ரீதியில் இந்தியப் படைகளுக்கு எதிராக நிகழ்ந்த மறியல் போராட்டங்களில் அவரும், பின்னர் அவ்வூரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட யுவதியுமே முன்னின்று செயற்பட்டார்கள். இந்தியப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் 1988ஆம் ஆண்டு அக் கிராமத்தின் சந்தியயான்றில் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்தை வைத்து, அவருக்கான வீரவணக்க நிகழ்வையும் அவரே ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இருந்து விலகிய மற்றைய நபரின் கதையோ அப்படி அல்ல. அவர் ஒரு நடுத்தர வயதினர். குடும்பத்தவர். அதேநேரத்தில் ஒரு போக்கானவர். பெரும்பாலான கிராமவாசிகள் அந்த நபரோடு கதைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் காலையிலும், மதிய நேரத்திலும், மாலையிலும் அவரது வீட்டில் ஆகாசவாணி தான் அலறும். மற்றைய உள்நாட்டு வானொலிகள் அவரது வீட்டில் ஒலிப்பது அரிது.

அதை விட அக்கிராமத்தில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளும் பொழுது அவரது வீட்டில் பெரிதாக இந்தியப் படையினர் தேடுதல்களை மேற்கொள்வது கிடையாது. ஏதோ கடமைக்குச் சென்று வருவது போல் வீட்டில் நுழைந்து விட்டு வெளியேறுவார்கள். இதனால் அவர் தான் இந்திய உளவாளி என்ற சந்தேகம் அக்கிராமவாசிகளின் மத்தியில் வலுவுற்றது.

இப்படியான பின்புலத்தில் ஒரு நாள் இரவு அவரது வீட்டிற்குச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், அவரது வீட்டின் முன்காணியில் பொதுமக்களுக்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குறித்த நபரைப் பொறிவைத்துப் பிடிப்பதற்கான ஏற்பாடாகவே அது நடந்தது. ஆனால் அன்று இரவு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. வழமை போல் மறுநாள் தான் அக்கிராமத்தை இந்தியப் படைகள் சுற்றிவளைத்தார்கள். அதுவும் மறுநாள் மாலை வேளையில் தான் சென்றார்கள். குறித்த நபர் இந்தியப் படைகளின் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்றவர் சில மணிநேரத்தில் திரும்பி வந்து விட்டார்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அக்கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. அப்பொழுது தான் முதற்தடவையாக அக்கிராமத்திற்குள் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பல் நுழைந்தது. அன்று அவர்களின் குறி தமது அமைப்பில் இருந்து விலகித் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக மாறிய இளைஞர்.
மறுநாள் அவ் இளைஞர் விடுதலை செய்யப்படாத நிலையில், அவரை விடுவிப்பதற்காக அவரது தாயும், தந்தையும் நகர்ப் புறத்தில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் முகாமிற்குச் சென்றார்கள். அங்கிருந்த முகாம் பொறுப்பாளர் மசியவில்லை. குறித்த இளைஞர் இந்தியப் படைகளால் உருவாக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இராணுவத்தில் இணைந்து விட்டதாகவும், அவர் இனி வீட்டிற்கு வர மாட்டார் என்றும் அவர் கூறினார்.

கடைசியில் தமக்குத் தெரிந்த பிரபல சட்டத்தரணி ஒருவரை அணுகி, அவர் மூலம் குறித்த இளைஞனை விடுதலை செய்வதற்கு அவரது பெற்றோர் முயற்சித்தார்கள். யாழ் நகரில் உள்ள இந்தியப் படைகளின் தலைமையகத்திற்குச் சென்ற குறித்த சட்டத்தரணி, அங்கிருந்த இந்தியப் படைத் தளபதியை சந்தித்து நிலைமையை விளக்கியிருக்கிறார். சிறிது தயக்கத்தின் பின்னர் இரண்டு நாள் கழித்து குறித்த இளைஞரின் பெற்றோருடன் தன்னை வந்து மீண்டும் சந்திக்குமாறு அந்தச் சட்டத்தரணியிடம் குறித்த இந்தியப் படைத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து சட்டத்தரணியும், இளைஞனின் பெற்றோரும் சென்ற பொழுது குறித்த இளைஞரை அவர்களிடம் ஒப்படைத்த இந்தியப் படைத் தளபதி, அவரைக் காலம் தாழ்த்தாமல் இந்தியாவிற்கு அனுப்புமாறு அறிவுரை கூறியிருக்கிறார். அதன்படி ஓரிரு நாட்களில் குறித்த இளைஞனும் கடல் வழியில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ஓராண்டு காலம் இந்தியாவில் தங்கியிருந்து விட்டுக் குறித்த இளைஞர் அங்கிருந்து யேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார். இது இப்படி இருக்கையில், 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் தமிழீழ தாயகத்தை விட்டு இந்தியப் படைகள் வெளியேறியதை அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இருந்து விலகிய மற்றைய நபரைக் கைது செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர், இந்தியப் படைகளின் உளவாளி என்ற சந்தேகத்தில் அவரை ஏறத்தாள ஓராண்டுகள் தடுத்து வைத்து விசாரணை செய்தார்கள். கடைசியில் அவர் உளவாளி அல்ல என்பது நிரூபணமாக, அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆக, தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் அக்கிராமத்தில் இந்தியப் படைகளுக்குத் தகவல் கொடுப்பவராக இயங்கிய நபர் யார் என்பது பெரும் மர்மமாகவே இருந்தது. ஆண்டுகள் நகர்ந்தன. 1997ஆம் ஆண்டு. தமிழ்த் தேசிய இராணுவத்தில் இணைப்பதற்காக 1989ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலால் பிடித்துச் செல்லப்பட்ட இளைஞரை, அவரை விடுவிப்பதற்கு உதவிய சட்டத்தரணி ஐரோப்பிய நாடொன்றில் எதேச்சையாகச் சந்திக்க நேரிடுகின்றது.

பல தரப்பட்ட விடயங்களை இரண்டு பேரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, குறித்த இளைஞரை விடுவித்து அவரை இந்தியாவிற்கு அனுப்பிய பின்னர் தனது தாய் நோய் வாய்ப்பட்டமை பற்றிக் குறித்த சட்டத்தரணி கூற, அந்த இளைஞர் வாய் தவறி ஒரு உண்மையைக் கூறுகிறார். குறித்த சட்டத்தரணியின் தாய் நோய்வாய்ப்பட்டது தனக்குத் தெரியும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந் பொழுது அவரைத் தான் சென்று பார்த்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இதனால் அதிர்ந்து போன குறித்த சட்டத்தரணி, அக்காலப் பகுதியில் குறித்த இளைஞன் இந்தியாவில் அல்லவா தங்கி இருந்தார் என்று வினவ, இல்லை தான் இந்தியா செல்வது போல் பாசாங்கு செய்து யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளுடன் தங்கியிருந்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பெருமிதத்துடன் குறித்த இளைஞன் ஒப்புதல் வாக்குமூலமளிக்கின்றார்.

ஆம். சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் மண்டையன் குழுவில் தான் ஒரு முக்கிய உறுப்பினர் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்த பின்னர் தமிழீழ தாயகத்தில் உறங்குநிலையில் இருந்த றோ நிறுவனத்தின் உளவாளிகளில் தானும் ஒருவர் என்றும் அவ் இளைஞர் கூறுகின்றார். இதைக் கேட்டதும் குறித்த சட்டத்தரணிக்குத் தலைகிறுகிறுத்து விட்டது.

(தொடரும்)