அம்மானின் கடிதங்கள்...

கெளரவத்திற்குரிய தமிழ்த் தலைவர்களுக்கு,

எங்களுக்காகத் தன்னையே உருக்கி ஈகச்சாவை எய்திய தியாக தீபம் திலீபனை நினைவுகூர்வதற்கு சிங்களம் விதித்த தடையை எதிர்த்து, நீங்கள் எல்லோரும் வெகுண்டெழுந்து உண்ணாவிரதமும், ஒரு நாள் கடையடைப்பும் ஏற்பாடு செய்த செய்தி கேட்டு பெருமிதமடைந்தேன்.

இவ்வளவு காலமும் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்ட உங்கள் அனைவரையும் திலீபனின் ஆன்மா ஓரணியில் இணைய வைத்ததை நினைக்கும் பொழுது, அவனும், அவன் வழியில் வீழ்ந்த மாவீரர்களும் செய்த தியாகங்கள் ஒரு நாளும் வீண்போகாது என்பது புரிகின்றது.

உங்களுக்காக, எங்களுக்காக பன்னிரண்டு நாட்கள் ஒரு துளி நீர் கூட அருந்தாமல், ஒரு பருக்கை சோறு கூட உண்ணாமல் பட்டினிப் போர் புரிந்த மாவீரன் திலீபன். தனது உடல் இறக்கத் தொடங்கும் தறுவாயில் தான் தண்ணீர் கேட்டாலும் தனக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று தனது தோழர்களுக்குக் கண்டிப்பாக உத்தரவிட்ட கர்ம வீரன் அவன்.

g

திலீபன் பட்டினிப் போர் புரிந்த பன்னிரண்டு நாட்களையும் நினைவுகூர்வதற்கு சிங்களம் விதித்த தடையை எதிர்த்து அவனின் வழிநின்று பன்னிரண்டு நாட்கள் உங்களால் பட்டினிப் போர் புரிவது இயலாத காரியம் தான். உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுக்களுக்கு மத்தியில் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு எப்படி நீங்கள் பன்னிரண்டு நாட்கள் பட்டினி கிடக்க முடியும்? அது போக வேளைக்கு வேளை விதம் விதமாக விருந்துண்டு, கொக்கக் கோலாவும், நெக்ரோவும் குடித்து இராஜதந்திரப் போராட்டம் நடத்தும் உங்களால் பன்னிரண்டு நாட்கள் நீராகாரமின்றி இருப்பது என்ன சாத்தியமான காரியமா?

அப்படி இருக்கும் பொழுது திலீபன் ஈகச்சாவைத் தழுவிய நாளில் காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து நீங்கள் புரிந்த பட்டினிப் போராட்டத்தை இமாலய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். இதற்காக வரலாற்றின் பொன்மகுடத்தை உங்களுக்கு சூட்ட வேண்டும்.

என்ன, ஒரேயயாரு நெருடல் தான். மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழ மலரட்டும் என்று முழங்கி வீழ்த்த திலீபனின் நினைவு நாளில், தமிழீழ தாயகம் முழுவதும் மக்களை அணிதிரட்டித் தாயகம் தழுவிய ரீதியில் முழு அளவிலான ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை நீங்கள் நடத்தியிருந்தால் அது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனாலும் அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே கால அவகாசம் கிடைத்தது? திலீபனின் நினைவு நாளில் மக்கள் மத்தியில் முழு அளவிலான எழுச்சியைக் கொண்டு வருவதென்றால் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு அவற்றை வீடு வீடாக எடுத்துச் சென்று மக்களிடம் வழங்கி அவர்களை அணிதிரட்ட வேண்டும். அதற்குள் எந்தக் கட்சியின் பெயரில் துண்டுப் பிரசுரங்களை அச்சிடுவது என்று பிரச்சினை. அப்படித் தான் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்தாலும், எந்தக் கட்சி அவற்றை விநியோகிப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினை.

6

எல்லாம் போகப் புலம்பெயர் தேசங்களில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் இருந்து பணம் வர வேண்டும். நான் ஏ.ரி.எம். இயந்திரங்கள் என்று கூறுவது நீங்கள் பணம் கேட்கும் பொழுதெல்லாம் பணம் தந்தவாறு உங்களிடம் கேள்வி கேட்காமல் இருக்கும் புலம்பெயர் தமிழர்களைத் தான். அவர்கள் கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் கொடுக்கவா போகின்றீர்கள்? பணம் தருவது மட்டும் தானே அவர்களின் வேலை. கேள்வி கேட்பது புலம்பெயர் தமிழர்களின் வேலை அல்லவே.

இப்படி ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் இருக்கும் பொழுது எப்படி இரண்டு வாரங்களுக்குள் தமிழீழ தாயகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அணிதிரட்டித் தாயகம் தழுவிய ரீதியில் ஒரு முழு அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நீங்கள் நடத்தியிருக்க முடியும்.

ஏதோ, உங்களால் முடிந்ததைத் செய்திருக்கிறீர்கள். காலை ஆகாரம் உண்டு, மதிய ஆகாரம் உண்வதற்குள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் கட்டில் போட்டு, தலைமாட்டில் ஒரு மனைவியும், கால்மாட்டில் இன்னொரு மனைவியுமாக வள்ளி, தெய்வானைக் கோலத்தில் சிறிது நேரம் அனந்த சயனம் புரிந்து விட்டு, மதிய போசனத்திற்கு நேரமாவதற்குள் ஈழத்தில் போர் நின்று விட்டது என்று கூறிப் பட்டினிப் போர் புரிந்த கட்டுமரம் கருணாநிதியின் பாணியில் செப்படிவித்தை காட்டாமல் நீங்கள் அனைவரும் ஒரு நாள் அடையாள உண்ணாநோன்பிருந்தது என்றும் தமிழர் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

நிற்க, இரண்டு நாட்கள் கழித்து தமிழீழ தாயகம் தழுவிய ரீதியில் நீங்கள் ஏற்பாடு செய்த கடையடைப்புப் போராட்டத்தையும் லேசாகக் கணிப்பிட முடியாது. வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கவரத்தியின் தலையை நசித்த திருமாலின் உக்கிரத்தோடு அன்றைய நாளில் உங்கள் பலத்தை சிங்களத்திற்குக் காண்பித்தீர்கள். கண்டங்கள் கடந்து தமிழீழம் அமைத்துக் களமாடும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தனது அரசவையைக் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றும் ஒவ்வொரு தடவையும் அச்சத்தில் நடுநடுங்கும் சிங்களம், நீங்கள் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தால் தொடை நடுங்கியது என்றால் பாருங்கள்.

அன்றைய நாளில் திலீபனுக்காகத் தமது கடைகளைப் பூட்டித் தமது இனவுணர்வை வெளிப்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதையிட்டு நீங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? தன் இனத்திற்காகத் தன்னையே இழந்த திலீபனுக்காக கடையடைப்புச் செய்து ஒரு நாள் வருமானத்தை இழந்ததையிட்டு அவர்களே கவலைப்படாத பொழுது, அவர்கள் மீது அக்கறை கொள்ள உங்களுக்கு என்ன பைத்தியமா? அப்படி அக்கறை கொண்டாலும், உங்கள் வருமானத்தை அவர்களுக்குக் கொடுக்கவா முடியும்? பிறகு உங்கள் வீட்டுத் தேவைகளுக்கும், சுற்றுப் பயணங்களுக்கும் பயன்படுத்துவதற்கான சொகுசு வாகனங்களை எப்படி நீங்கள் கொள்வனவு செய்வது? ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. கொழும்பில் ஒரு மாடமாளிகையும், நான்கு சொகுசு வாகனங்களு
மாவது தந்திருப்பார்.

அதை விட 1961ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்தியது போல் தமிழீழ தாயகத்தில் சிங்கள அரச இயந்திரத்தைத் தமிழீழ தாயகத்தில் முற்றாக முடக்கும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதற்கு உங்களுக்கு என்ன பைத்தியமா? அதற்கு எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டும்!

இருபத்து நான்கு மணிநேரமும் அரச அலுவலகங்களை முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டும். காவல்துறையினர் கொட்டாந்தடிகளால் அடித்தாலும், மண்டையை உடைத்தாலும் இருந்த இடத்தை விட்டு நகரக் கூடாது. காவல்துறையினர் காலைப் பிடித்து இழுத்துச் சென்றாலும், கைகளை முறித்தாலும், காற்சட்டை கிழிந்தாலும், மேற்சட்டை சுக்குநூறாகப் பிய்ந்து தொங்கினாலும் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்தக் கூடாது. இராணுவம் வந்து நெஞ்சில் துப்பாக்கியை வைத்தாலும் இருந்த இடத்தை விட்டு நகரவே கூடாது. அப்படியயல்லாம் செய்து தந்தை செல்வாவைப் போல் பானாகொடை முகாமில் ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்கு உங்களுக்கு என்ன பைத்தியமா? வேட்டியின் மடிப்புக் கலையாமல், மேற்சட்டையில் ஒரு கறைகூட படியாமல் நீங்கள் நடத்தும் இராஜதந்திரப் போராட்டத்தைப் பிறகு யார் முன்னெடுத்துச் செல்வது?

1961ஆம் ஆண்டு தந்தை செல்வா நடத்திய ஒத்துழையாமை இயக்கம் பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். வெறும் நாற்பது பேரோடு 20.02.1961 அன்று காலை யாழ்ப்பாணம் கச்சேரியை தந்தை செல்வாவின் தலைமையிலான அறப்போராளிகள் முற்றுகையிட்ட பொழுது, போராட்டம் பிசுபிசுக்கப் போகின்றது என்று தான் அன்றைய யாழ்ப்பாண அரச அதிபர் சிறீகாந்தாவும், காவல்துறையினரும் நினைத்தார்கள்.

ஆனால் தந்தை செல்வா அறப்போரில் குதித்த செய்தி கேட்டு அங்கு அலையயனத் திரண்டு தமிழர்கள் செய்த கிளர்ச்சி சிங்கள அரச இயந்திரத்தை ஆட்டம் காண வைத்தது. கச்சேரி வாசலில் குந்துமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அறப்போராளிகளை அப்புறப்படுத்தச் சிங்களக் காவல்துறை எடுத்த முயற்சி மண்கவ்வியது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிலாபத்திலிருந்து வந்திருந்த பிரான்சிஸ் பெரேரா என்ற தமிழர் ஐம்பது தடவைகளுக்கு மேல் காவல்துறையினரால் தூக்கி எறியப்பட்டார்.

தனது காற்சட்டையும், மேற்சட்டையும் கிழிந்து தொங்கிய பொழுதும், ஒவ்வொரு தடவையும் தான் தூக்கியயறியப்பட்ட இடத்திற்கு வந்து அவர் அமர்ந்து கொண்டார். பிரான்சிஸ் பெரேரா போன்ற அறப்போராளிகளை எல்லாம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். அந்த நாட்களில் இளைஞனாக இருந்த மாவை சேனாதிராஜாவிற்கு அவரைத் தெரிந்திருக்கலாம். அவருக்குத் தெரியாவிட்டால், கனடாவில் வசிக்கும் ரெலோ பிரமுகர் கரிகாலனிற்காவது பிரான்சிஸ் பெரேராவின் கதை தெரிந்திருக்கும்.

வேறு என்ன? இனி மாவீரர் நாள் வரப் போகின்றது. அதற்கும் சிங்களம் தடை விதிக்கப் போகின்றது. அதற்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்தி உங்கள் மண்டைகளை உடைப்பதற்கு நீங்கள் என்ன முட்டாள்களா?

புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களே சூம் என்ற போர்க்களத்திற்கு நகர்ந்து விட்டன. அப்படியிருக்கும் பொழுது நீங்கள் மட்டும் எதற்காக சிங்கள அரச இயந்திரத்தை முடக்கும் அறப்போரில் குதிக்க வேண்டும்? ஏதோ கடமைக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் செய்யலாம் தானே. அப்படிச் செய்வதால் குருதிக் கொழுப்புக் குறையும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இன்சுலீன் சுரக்கும். தேவைப்பட்டால் ஒரு நாள் நடைப்பயணம் செய்யலாம். அல்லது சைக்கிள் ஓடலாம். ஆனால் மாவீரர் நாளுக்கு முதல் கந்த சட்டி விரதம் வருவதால், அதுவும் தேவையில்லை. ஏனென்றால் ஆறு நாள் பாலும், பழமும் உண்டு உங்கள் உடல் எடை குறைந்திருக்கும்.

பிறகெதற்கு நடைப்பயணம், சைக்கிள் ஓட்டம்? கடமைக்கு அடையாள உண்ணாவிரதம் இருந்தாலே போதும் தானே? வேண்டுமென்றால் மாவீரர் நாளில் இன்னொரு கடையடைப்பை ஏற்பாடு செய்யலாம். கடையடைப்பு செய்வதால் தமது வருமானத்தை இழக்கும் கடைக்காரர்களிடம் கட்சிச் செலவுகளுக்கு சில நாட்களுக்கு நன்கொடை வாங்காமல் விடலாம். தங்கள் இனத்திற்காகத் தங்களையே இழந்த மாவீரர்களுக்காகத் தமது ஒரு நாள் வருமானத்தை இழப்பதை ஒரு பொருட்டாகக் கடைக்காரர்களில் பலர் கருத மாட்டார்கள் என்பது உங்களுக்கு என்ன தெரியாத ஒன்றா? எப்படியோ, உங்கள் வருமானத்தில் மட்டும் சேதாரங்கள் ஏற்படாமல் இருந்தால் சரி. அது தான் முக்கியமானது.

இப்படிக்கு,
உங்கள் அம்மான்.

பி.கு.: வரிக்கு வரி ‘தம்பியின் வழி தன் வழி’ என்று கூறும் விக்னேஸ்வரன் ஏன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேவில்லை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் பொழுது வழிதவறி அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுலானைக்கு போய்விட்டாரோ?