நிலை உயரும்போது பணிவு கொண்டதால்... - வெற்றிநிலவன்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் வசீகரக் குரலால் பலகோடி மனிதர்களைக் கட்டிப்போட்ட பாலா என்றும், எஸ்.பி.பாலு என்றும் எஸ்.பி.பி. என்றும் பல்வேறு வடிவங்களாக அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் தன் சாவை அணைத்துக்கொண்டுள்ளார்.

திரைத்துறைக்குள் நுழைய வேண்டும், பின்னணிப் பாடகர் ஆகவேண்டும் என எஸ்.பி.பி. நினைத்ததே கிடையாது. அவருடைய நோக்கம் தொழில்நுட்பவியலாளர் ஆகவேண்டும் என்பதுதான். ஆனால் கனவு எல்லாம் நல்லதொரு பாடகராக வேண்டும் என்பது. அப்போது எஸ்.பி.பி.க்கு 20 வயது கூட ஆகவில்லை. மேடையில் பாடிய அனுபவங்களை வைத்து இரண்டு வருடங்கள் திரைத்துறையில் முயற்சி செய்து பார்த்தார். எதுவும் நடக்கவில்லை.

அப்போதுதான், இசையமைப்பாளர் கோதண்டபாணி பாட்டுப் போட்டி ஒன்றில் எஸ்.பி.பி.யின் குரலைக் கேட்டு, நீ திரைப்படத்துறைக்கு வா என அழைத்து வந்தார். 1966 டிசம்பர் 15 தெலுங்குப் படத்தில் முதன்முதல் பாடினார். அப்போது கூட தான் பெரிய பாடகராக வருவோம் என்கிற நம்பிக்கை எஸ்.பி.பி.க்கு இல்லையாம்.

அழைத்தார், வந்து பாடினேன், அவ்வளவுதான். அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டேன் என்கிறார். சென்னையில் அப்போது வசித்தாலும் எஸ்.பி.பி.க்குத் தமிழ் தெரியாது. அப்போது எஸ்.பி.பி.க்குத் தெரிந்த மொழிகள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மட்டும்தான்.  முதல் பாடலைப் பாடும்போது ஒலிப்பதிவில் இசைக்கருவி வாசித்த வீணா ரங்காராவ் என்கிறவர், 10 நாட்களில் கன்னடத்தில் பாடவைக்கிறேன் என்று எஸ்.பி.பி.யிடம் கூறியுள்ளார். அப்போது எஸ்.பி.பி.க்கு கன்னடமும் தெரியாது. பிறகு 1969ல் தான் எஸ்.பி.பி.யால் தமிழுக்கு வரமுடிந்தது.

p

அதற்கு முன்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியிடம் சென்று பாடிக் காண்பித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி உச்சரிப்பு சரியாக இல்லாததால் அதனைத் திருத்திக்கொண்டுவருமாறு கூறி அனுப்பிவிட்டார். இதற்காக நன்கு தமிழில் பேசுபவர்களிடம் பழகியதுடன், தமிழில் எஸ்.பி.பி. எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். வாய்ப்பு தருவது எம்.எஸ்.வி என்பதால் முழு முயற்சி எடுத்தார். ‘ஹோட்டல் ரம்பா’ என்கிற தமிழ்ப் படத்தில் முதன் முதல் பாடினார்.

ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. பிறகுதான் சாந்தி நிலையம், அடிமைப் பெண் படங்களில் பாடினார். அடிமைப் பெண் படமும் அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடலும் பெரும் பிரபலமானது. அதனால் தமிழில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி. படிப்படியாக முன்னேறினார்.

இசை, இலக்கணம் எதுவும் எஸ்.பி.பி.க்குத் தெரியாது. 1970ல் இளையராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவின் மூவர் சகோதரர்களும் எஸ்.பி.பி.யும் சேர்ந்து ‘பாவலர் பிரதர்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற இசைக்குழுவை ஆரம்பித்தார்கள். கொல்கத்தா முதல் கன்னியாகுமர் வரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்றார்கள்.

1980களில் இளையராஜா - எஸ்.பி.பி. கூட்டணி தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தது. காலத்தால் அழியாத பாடல்களை இருவரும் அளித்தார்கள். இன்றைக்கும் எஸ்.பி.பி.யின் முக்கிய அடையாளங்களாக அந்தப் பாடல்கள் உள்ளன. 90களில் ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யா
சகர், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் அவர் ஏராளமான பாடல்களைப் பாடினார்.

பிறகு கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என 16 மொழிகளில் 45,000ற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக கின்னஸ் சாதனையையும் புரிந்துள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாகத் தேசிய விருதைப் பெற்றார். 1981ல் ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காக தனது 2வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்குப் படப் பாடல்களுக்காகவும், ஒரு தேசிய விருதை தமிழ், இன்னொரு தேசிய விருதை கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார்.

2001ல் பத்மசிறீ, 2011ல் பத்மபூrன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. தமிழில் எம்.ஜி.ஆருக்காக முதலில் பாடிய எஸ்.பி.பி., சமீபத்தில் ரஜினிக்காக அண்ணாத்த படத்துக்காகப் பாடியுள்ளார். எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இதனைவிட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கூட இவர் மிளிர்ந்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதனைவிட சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இவர் இருந்துள்ளார். கமல் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தை தெலுங்கில் மாற்றியபோது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாபாத்திரம் உள்பட) பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை ‘அன்னமயா’ மற்றும் ‘சிறீ சாய் மகிமா’ திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார்.

இவற்றையயல்லாம் விட ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலும் இவரது குரல் ஒலித்திருக்கின்றது. 10ற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் பாடல்களை எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறிய பின், அந்த வெற்றியை மகிந்த அரசு தமிழ் நாட்டிலுள்ள பாடகர்களையும் சில நடிகைகளையும் அழைத்து பெரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட ஏற்பாடு செய்தது. தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆவலர்கள் பாலசுப்பிரமணியத்திடம் சென்று ஈழத் தமிழரின் அவலத்தையும் நிகழ்ச்சியின் உள் நோக்கத்தையும் எடுத்துரைத்தபோது, எஸ்.பி.பி. அவர்கள் உடனடியாக முழு மனதாய் ஏற்றுக்கொண்டு தானே தன் சக கலைஞர்களுக்கும் எடுத்துக்கூறி நிகழ்வுக்கு போகால் தடுப்பதார்.

எனினும் நடிகை அசின் மட்டும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வோடு அவர் திரையுலகை விட்டும் காணாமலே போனார். எனினும், அதன் பின்னர் நடந்த நிகழ்வொன்றிற்காக தமிழீழம் சென்றிருந்த எஸ்.பி.பி, யாழில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது, மாவீரர்களுக்கும் தனது வணக்கத்தை தெரிவித்துவிட்டே பாடலக்களைப் பாடத் தொடங்கினார். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது அவருக்கு இருந்த பற்றினை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மீதும் ஈழத் தமிழர்கள் மீதும் என்றும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர். அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகின் பல நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தபோதும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தன் குரலை ஒலித்தது மட்டுமல்ல, தமிழீழத்தில் நின்றுகொண்டும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த முடிந்துள்ளது.

எஸ்.பி.பியின் குரல் எவ்வளவு இனிமையோ அதனைவிட அவரது குணம் அத்தனை மென்மையானது. தன்னுடன் பாடும் போட்டியாளர் யாராக இருந்தாலும் அவர் புதியவரோ, பழையவரோ என்ற எந்த வேறுபாடுமின்றி எள்ளவும் குறை சொல்லாமல் இணைந்து பாடல்களைப் பாடுவதுடன், தன்னை விமர்சிப்பவர்களைக்கூட நட்போடு அரவணைக்கும் குணம், வயதில் குறைந்தவர்களைக் கூட ஒருமையில் அழைக்காத பண்பும் படைத்தவர். எத்தனையோ பாடல்கள் பாடி உலக சாதனையாளராகவும் மாறிவிட்டார்.

ஆனால், கர்வம் பிடித்ததில்லை, தலைக்கனம் ஏறியதில்லை. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்... என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எஸ்.பி.பி மிக மிக நன்றாகவே பொருந்திவரும். அதனால்தான் அவரது இழப்பைக் கேட்டு அவரைத் தெரிந்த அத்தனை மனிதர்களும் கலங்கிநின்றார்கள். ஆனாலும் காலத்தால் அழியாத குரல்களோடு சோகமாகவும், சுகமாகவும், காதலாகவும், கண்ணீராகவும் அவர் நம்கூட வாழ்ந்துகொண்டே இருப்பார்...

- வெற்றிநிலவன்