எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?

வணக்கம் பிள்ளையள்.

எல்லோரும் சுகமாகவும், பத்திரமாகவும் இருக்கிறியள் தானே?

உலகம் முழுக்கத் திரும்பவும் கொரோனோ கொல்லுயிரி வேகமாகப் பரவுது. இப்பத் தான் நாங்கள் எல்லோரும் விழிப்பாக இருக்க வேணும் பிள்ளையள்.

ஆனால் வெறும் கொரோனா கொல்லுயிரியின்ரை விசயத்திலை மட்டுமில்லாமல் எல்லா விசயங்களிலும் நாங்கள் கவனமாக இருக்க வேணும். இந்தக் காலத்திலை எந்தப் புற்றுக்குள்ளை எந்தப் பாம்பு இருக்குது எண்டு கண்டு பிடிக்கிறது இயலாத காரியம் பாருங்கோ. இப்ப பார்க்கயில்லையே, விஜய் சேதுபதி எண்டு ஒரு பாம்பு புற்றுக்குள்ளை இருந்து வெளியில் வந்து முத்தையா முரளீதரனின்ரை வாழ்க்கை வரலாற்றை நடிக்கப் போகிறேன் என்று படமெடுத்து ஆடுது.

ஆனால் எனக்கு உண்மையிலை விஜய் சேதுபதியிலை எந்தக் கோபமும் இல்லை பிள்ளையள். முதலிலை அவர் ஒரு தமிழன் இல்லை. அவரின்ரை சொந்தப் பெயரே விஜய் குருநாத சேதுபதி காளிமுத்து தான். காளிமுத்து என்கிறது தமிழ்நாட்டிலை இருக்கிற தெலுங்கு ஆட்கள் கனபேருக்கு இருக்கிற பெயர். ஒரு தெலுங்கரான விஜய் சேதுபதி என்றைக்காவது தமிழ்நாட்டுக்குக் காவிரி நதி நீர் கிடைக்கிறதுக்காகக் குரல்கொடுத்திருப்பாரோ? ஒண்டி வாழ்கிறது தமிழ்நாட்டில், குளிக்கிறதும், குடிக்கிறதும் தமிழ்நாட்டுத் தண்ணீரை, ஆனால் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டுக் காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்று மட்டும் அவர் குரல் கொடுக்க மாட்டார்.

அப்படிப்பட்ட ஒருத்தர் எங்கடை ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுப்பாரே? அல்லது தனக்கு முரளீதரனின்ரை படத்தில் நடிக்கிறதாலை கிடைக்க இருக்கிற வருமானத்தை ஈழத்தமிழனுக்காக இழப்பாரே? நீங்களே நினைச்சுப் பாருங்கோ.

சரி, அது தான் வேண்டாம். முள்ளிவாய்க்காலில் எங்கடை சனம் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்படேக்குள்ளை விஜய் சேதுபதி எப்பவாவது எங்களுக்காகக் குரல் கொடுத்தவரே? பிறகென்ன பிள்ளையள்? அந்த நாளில் எங்கடை ஆச்சி அடிக்கடி கேட்பா, ‘எருதின்ரை நோய் காக்கைக்கு தெரியுமே?’ என்று.

ஒரு தமிழனான முத்தையா முரளீதரனே ராஜபக்சாக்களுக்குப் பரிவட்டம் கட்டேக்குள்ளை, ஒரு தமிழன் அல்லாத விஜய் சேதுபதியிட்டை நாங்கள் அனுதாபத்தை எதிர்பார்க்க முடியுமே? நீங்களே சொல்லுங்கோ.

இதிலை என்ன பகிடி என்றால், முத்தையா முரளீதரனின்ரை படத்திலை நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதியிட்டை எங்கடை ஆட்கள் கொஞ்சப் பேர் மன்றாட்டமாகக் கெஞ்சுகிறது தான். முள்ளிவாய்க்காலில் எங்கடை ஒன்றரை இலட்சம் சொந்தங்கள் பலிகொள்ளப்படக்குள்ளையே நாங்கள் யாரிட்டையும் மன்றாடவில்லை.

நீங்களே சொல்லுங்கோ, அண்டைக்கு ஐ.நா. செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ-மூனிட்டை நாங்கள் மடிப்பிச்சை கேட்டனாங்களோ? இல்லை பராக் ஒபாமாவிட்டைப் போய் ஒப்பாரி வைச்சனாங்களோ? இல்லையே.

நாங்கள் மானத் தமிழர்கள் பிள்ளையள்.

உங்களுக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது பிள்ளையள் ஆனால் 2009 தை மாதமே எங்கடை போராளிகள் எல்லோரையும் சரணடையச் சொல்லி அமெரிக்காவும், நோர்வேயும், ஐரோப்பிய ஒன்றியமும், ஜப்பானும் கேட்டவையள். ‘உங்கடை ஆயுதங்களை எல்லாம் ஐ.நா.விட்டை ஒப்படையுங்கோ, அதை அவையள் பத்திரமாகப் பூட்டி வைப்பீனம். பிறகு உங்கள் எல்லாரையும் அமெரிக்க கப்பல் வந்து பத்திரமாக ஏற்றிக் கொண்டு போய் ராஜபக்சாவிட்டை கையளிக்கும். அதை இணைத்தலைமை நாடுகள் மேற்பார்வை செய்யும். தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், மற்றது உயர் நிலைத் தளபதியள், பொறுப்பாளர்களைத் தவிர ஏனைய எல்லாப் போராளிகளுக்கும் அரசாங்கம் பொதுமன்னிப்புக் குடுக்கும். தலைவரும், தளபதிமாரும், பொறுப்பாளர்களும் மட்டும் நெல்சன் மண்டேலா மாதிரி சிறையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடலாம். சிறையில் இருந்து கொண்டே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ராஜபக்சாவோடை பேசலாம்’ என்றெல்லாம் அப்ப உந்த எரிக் சுல்கைமும், ரொபேட் ஓ பிளேக்கும் கே.பி மாத்தையாவிட்டையும், உருத்திரகுமாரனிட்டையும் மலேசியாவில வைச்சுச் சொன்னவையள்.

உதைக் கேட்டுப் போட்டு உவையள் இரண்டு பேரும் அப்படியே செய்யுங்கோவன் என்று தலைவருக்கு செய்தி அனுப்பினவையள். அதுக்கு எங்கடை தலைவர் உடனே தளபதி சூசை மூலமாகச் சொன்னவர், ‘சரணடைகிறது விடுதலைப் புலிகளின்ரை அகராதியில் இல்லை. விருப்பம் எண்டால் கே.பியை சீலையைக் கட்டிக் கொண்டு போய் அரசாங்கத்திட்டை சரணடையச் சொல்லுங்கோ’ எண்டு.

மண்டியிடுகிறது, சரணடைகிறது, கெஞ்சுறது எல்லாம் விடுதலைப் புலிகளின்ரை அகராதியில் இல்லை பிள்ளையள்.  அது எங்கடை விடுதலைப் புலிகளின்ரை காலத்திலை மட்டுமில்லை, சங்க காலத்திலை இருந்தே எங்டை இனத்தின்ரை மாண்பு குஞ்சுகள்.

எதிரியிட்டை மண்டியிட்டு, உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடின ஒரு தமிழ் அரசனைப் பற்றியாவது புறநானுVற்றில் படிச்சிருப்பியளே பிள்ளையள்? எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்டால் நீராகாரம் அருந்தாமல் பட்டினி கிடந்து சாகிறது தான் எங்கடை சங்கத் தமிழரின்ரை மாண்பு பிள்ளையள். அதுக்கு ஒரு படி மேலே போய் நஞ்சு தின்று மரணத்தைத் தழுவினவையள் தான் எங்கடை விடுதலைப் புலிகள். அப்படிப்பட்ட மரபிலை வந்த நாங்கள் எதுக்காக விஜய் சேதுபதி என்ற ஒரு ஈனப்பிறவியிட்டைப் போய் மன்றாட வேணும்?

எங்கடை ஆட்களில் கொஞ்சப் பேர் அவரிட்டை மன்றாட்டமாகக் கடிதம் எழுதுகீனம். கொஞ்சப் பேர் கவிதை பாடுகீனம். இன்னும் கொஞ்ச விசைப்பலகை வீரர்கள் முகநூலிலும், ருவிட்டரிலும், வட்ஸ் அப், வைபர் குறூப்புகளிலும் சுழன்று சுழன்று களமாடுகீனம். உது போதாதென்று கொஞ்சப் பேர் தமிழ்நாட்டிலை அவரிட்டை பூங்கொத்துக் கொடுத்துப் போராட்டம் நடத்துகீனமாம்.

எனக்கு வருகிறது ஆத்திரத்துக்கு...

விரும்பினால் முத்தையா முரளீதரனின்ரை படத்திலை விஜய் சேதுபதி நடித்து விட்டுப் போகட்டும். அவரின்ரை படங்களை ஒட்டுமொத்த தமிழினமும் பார்க்காமல் விட்டால் அவர் தானாகவே காணாமல் போய் விடுவார்.

‘கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி’ என்று சும்மாவே அந்த நாட்களில் என்ரை ஆச்சி சொல்கிறவா? உந்தப் பழமொழியை உங்கடை ஆச்சிமாரும் சொல்கிறதை நீங்களும் கேட்டிருப்பியள் தானே?

விஜய் சேதுபதியைக் கண்டியுங்கோ. ஆனால் அவரிட்டை கெஞ்ச வேண்டாம். அவரிட்டை மன்றாட வேண்டாம். உங்கடை கண்டனத்தை மீறியும் அவர் முத்தையா முரளீதரனின்ரை படத்தில் நடிப்பாராக இருந்தால் அவரின்ரை எல்லாத் திரைப்படங்களையும் புறக்கணியுங்கோ.

வேறை என்ன பிள்ளையள்? வரட்டே?