ஆசிரியர் படுகொலை - ‘பயங்கரவாதிகள் நிம்மதியாக உறங்கமுடியாது’ பிராஞ்சு அதிபர் எச்சரிக்கை

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மக்களின் ஆதரவு பெருகி வருகின்றது. பிரான்சின் பரிஸ் புறநகரான இவ்லின் பகுதியில் (Conflans-Sainte-Honorine (Yvelines) பாடசாலை ஒன்றில் வரலாறு - புவியியல் கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலை முடிந்து வந்துகொண்டிருந்தபோது வீதியில் வைத்து 18 வயது மாணவர் ஒருவரால் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

சாமுவேல் பட்டி (Samuel Paty) என்ற 47 வயதான ஆசிரியர் கடந்த ஒக்டோபர் 12ம் திகதி தனது பாடத்தின்போது, முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் இதனைப் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக்கி காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்திருந்தனர். அத்துடன் அந்த ஆசிரியருக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புரைகளையும் செய்தனர். இந்நிலையில் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குறிப்பிட்ட ஆசிரியர் பாடசாலையால் வந்துகொண்டிருந்தபோது வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் படுகொலை செய்த மாணவனையும் அவரது குடும்பத்தினரைர் உட்பட 11 பேரைக் கைது செய்துள்ளனர். ஆசிரியர் கொலை பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ள பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன், ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் இனி நிம்மதியாக உறங்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விடயம் குறித்து ஆராய பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நிலைமைகள் குறித்தும் அதிபர் ஆராய்ந்துள்ளார். இதன்போது, நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையயடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தப் படுகொலை அதிபர் மக்ரோனை கடுமையாக சினமடைய வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கொல்லப்பட்ட சாமுவேல் பட்டியின் குடும்பத்தினரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சந்தித்து தனது கவலைகளையும் ஆறுதலையும் வெளிப்படுத்திய அதிபர், வழமைக்கு மாறாக இந்தச் சந்திப்பில் அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா ஆபத்துக்களுக்கும் மத்தியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர். ‘நாங்களும் சாமுவேல், நாங்களும் ஆசிரியர்கள்’ என்று பதாதைகளை தாங்கியவாறு இந்தப் பேரணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட கடந்த திங்கட்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ‘எங்கள் எண்ணங்கள் சாமுவேல் பட்டியின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும், பிரான்சிலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து கற்பித்தல் ஊழியர்களுக்கும் செல்கின்றன’ என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி நடந்த அமர்வின் தொடக்கத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 2002ம் ஆண்டில் மொஸ்கோவில் பிறந்த 18 வயது மாணவன் செச்சனியாவைச் சேர்ந்தவர் என்றும் அவரது குடும்பம் பிரான்சில் அகதி உரிமை பெற்று வாழ்ந்து வந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.