தமிழ் இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்களிப்பு! அம்பலத்திற்கு வந்த ஆதாரங்கள்

சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் நேரடி தொடர்பு குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பில் மில்லர் மற்றும் லூ மெக்னமாரா ஆகியோரால் இயக்கப்பட்ட, ‘கீனி மினி (KEENIE MEENIE)’ திரைப்படத்தில் இந்த ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

நான்கு வருட கடின உழைப்புக்குப் பிறகு, இந்த திரைப்படம் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புப் படையான SAS சிறப்பு விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட KMS அல்லது கினி மினி சேவை கூலிப்படை பற்றி ஆராய்கிறது.

சிறீலங்காவின் காவல்துறை விசேட அதிரடிப்படைக்கு ஆரம்ப பயிற்சியை KMS வழங்கியுள்ளது. அத்துடன் மட்டும் KMS கூலிப்படையினர் பயிற்சியை நிறுத்தவில்லை, கிழக்கு மாகாணத்தில் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் படம் வெளிப்படுத்துகிறது.

வைன் போத்தல்களில் வைக்கப்பட்டிருந்த கைக் குண்டுகள் சாதாரண மக்களை கொலை செய்வதற்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை, இலங்கையில் இருந்த பிரித்தானிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹோல்வார்டி விளக்கியுள்ளார். கடந்த 35 ஆண்டுகளில் இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு எதிரான அரச வன்முறைகளில் பிரித்தானியாவிள் பங்களிப்பைப் புரிந்துகொள்ள கீனி மீனி உதவும் என பில் மில்லர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சேமிப்பக காட்சிகள், பிரித்தானிய உளவுத்துறை கோப்புகள், ஓய்வு பெற்ற தூதுவர்கள், முன்னாள் KMS கூலிப்படையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோரும் படத்தை ஆராய பயன்படுத்தப்பட்டுள்ளனர். பில் மில்லர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானிய காவல்துறை போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்துள்ள அதேவேளை, கீனி மின்னி நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரித்தானிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேவேளை, இந்த முக்கியமான மற்றும் அச்சுறுத்தும் திரைப்படம் கட்டாயம் பார்க்கப்பட வேண்டியது என உலகின் மிக வெற்றிகரமான விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கென் லோச் தெரிவித்துள்ளார்.