முரளிதரனின் முகத்திரை கிழித்த விஜய் சேதுபதி - வெற்றிநிலவன்

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறியது என்பது 800 திரைப்படத்திற்கு நன்கு பொருந்தும். சிறீலங்காவின் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை, நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து ‘800’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தார்கள்.

முரளிதரன் விளையாடிய போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்ததால் இந்தப் படத்திற்கு ‘800’ என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால், அப்படம் இப்போது அது கடும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.

தமிழகம் முதல் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முரளிதரன் கதையை தமிழகத்தில் திரைப்படமாக்க முயல்வதற்கும், அப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உடன்பட்டமைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில விடயங்களில் சும்மா மாடு சொன்னால் கேட்கமாட்டார்கள். மணி கட்டின மாடு சொன்னாத்தான் கேட்பார்கள் என்று சொல்வார்கள். முத்தையா முரளிதரன் விடயத்தில் இது நன்றாகப் பொருந்தியுள்ளது.

சிறீலங்காவின் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழினத்திற்கு புரிந்த மன்னிக்கமுடியாத துரோகத்தனங்கள் குறித்து ஏற்கனவே தமிழ் தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.  ‘விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கவேண்டும்’ என்ற சில பிரகிருதிகளின் கருத்துக்கள், முத்தையா முரளிதரனின் தமிழின விரோதப் போக்கை அம்பலப்படுத்துவதில் தடையாக இருந்துவந்தது. இதனால், தமிழ் தேசிய ஊடகங்களினதும், தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துக்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமைந்திருந்தன.

ஒரு தமிழனாக இருந்துகொண்டு சிங்களப் பேரினவாதத்துடன் கைகோர்த்து நின்று அரசியல் புரியும் முரளிதரனை தமிழர்கள் வெறுக்கவேண்டிய அவசியம் இல்லைத்தான். முரளிதரன் போன்று தமிழர்கள் சிலரும் இவ்வாறு இனப்படுகொலை புரிந்த ராஜபக்ச குடும்பத்துடன் ஒட்டிநின்று தங்கள் சுயநலன்களை அடைந்துகொண்டிருக்கின்றபோது, முரளிதரனை மட்டும் மாறுபட்டுப் பார்க்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவை இன்றுவரை மறக்கமுடியாத பெரும் துயரமாக சுமந்து கொண்டிருக்கின்றது. இரத்தமும் சதையுமாக தமிழின் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அந்த ஆண்டையே தமிழினம் தங்கள் இனத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆண்டாகப் பார்க்கின்றது. இந்நிலையில், விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட அந்த ஆண்டைத் தனது வாழ்நாளின் மிகச்சிறந்த ஆண்டு என முரளிதரன் அறிவித்திருக்கின்றார். அதுவும் பிரித்தானியப் பிரதமர் டேவின் கமரூன் உட்பட பலரும் அமர்ந்திருந்த மேடையில் வைத்து இவ்வாறான ஒரு அறிவிப்பை அவர் செய்தார். அந்த ஆண்டை மிகச்சிறந்த ஆண்டு என சிங்களப் பேரினவாதிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், ஒரு தமிழன் என்ற முத்திரையுடன் நின்றுகொண்டு, தமிழ் மக்களின் பேரழிவை உலகச் சமூகத்திடம் மறைக்க முயன்றதை தமிழ் மக்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள். இதனைவிட தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளித்துவிட்டு கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். அவர்கள் நடத்தும் போராட்டத்தை, நாடகம் என வர்ணித்ததுடன் 20, 30 பெண்கள் போராடினால் அது உண்மையாகிவிடுமா என்றும் கொச்சைப்படுத்திய இவரை தமிழ் மக்களால் எப்படி மன்னிக்கமுடியும்.

வரலாறு குறித்த கொஞ்சம்கூடப் படிப்பினையின்றி இலங்கைத் தீவை சிங்கள பெளத்த நாடென்று கூறினார். இதனைவிட தமிழன் என்ற முகத்திரையுடன் தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும், இனஅழிப்பை மறைக்கவும் இவரைச் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்தியிருக்கின்றது.

இலங்கைத் தீவினதும், ஈழத் தமிழினத்தினதும் வரலாறு தொடர்பான அடிப்படை அறிவுகூடத் தெரியாமல், சிங்களத்தின் ஏவுதல்களுக்கு எல்லாம் இவர் செவிசாய்த்து தமிழினத்திற்கு எதிராக, தான் முதலில் ஒரு சிறீலங்கன் அதன் பின்னரே தமிழன் என்று கூறிக்கொண்டு செயற்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் இவரை ஒரு பெரும் கதாநாயகனாக்கும் முயற்சியில் சிலர் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர் மீது விழுந்துள்ள கரும்புள்ளிகளை களைந்து இவரைப் புனிதராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தினை எடுக்கப்படப்போவதாக தகவல்கள் வெளியானபோதே அதற்கு எதிராக சில பதிவுகள் வெளியாகின. சிலர் விஜய் சேதுபதியிடம் தொடர்புகொண்டு இந்தப் படத்தைத் தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். ஆனால், அதனையும் மீறி கடந்த வாரம் அந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியதுடன், அதில் தான் நடிக்கப்போவதாகவும் விஜய் சேதுபதி அறிவித்த பின்னர்தான் இந்த விவகாரம் பெரும்பிரளயமாக மாறியது.

 

கடந்த ஆண்டினைப் போலவே ஒரு சில சலசலப்புக்களுடன் இதுவும் கடந்துபோகும் என்றுதான் படத்தை எடுக்க முனைந்தவர்கள் நினைத்திருந்திருப்பார்கள். அதன் எதிரொலி இத்தனை அளவிற்கு கடுமையாக இருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முத்தையா முரளிதரனுக்கு ஆங்காங்கே எஞ்சியிருந்த கொஞ்ச மரியாதையையும் இது தகர்த்தெறிந்துள்ளது.

தமிழக அமைச்சரில் இருந்து பல்வேறு கட்சிகளும் தலைவர்களும், திரைத்துறைப் பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், தமிழ்த் தேசியச் சிந்தனைவாதிகளும் என பல்லாயிரக்கணக்கானவர்கள் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பல நூற்றுக் கணக்கான காணொளிகள் இது குறித்து பதிவேற்றப்பட்டுள்ளன. சமூகவலைத் தளங்களில், மென்பொருள் தொடர்பாடல்களில் முரளிதரன் - விஜய் சேதுபதிற்கு எதிரான கருத்துக்களே குவிந்து வருகின்றன.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்தால் இதுவே அவருக்கு கடைசிப் படமாக இருக்கும் என எச்சரிக்கின்ற அளவிற்கு நிலைமை சென்றிருக்கின்றது. மிகப் பெரும் பிரபலங்கள் கூட முத்தையா முரளிதரனை தமிழினத்தின் துரோகி என்று நேரடியாகக் குற்றம்சாட்டும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கின்றது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தாலும் நடிக்கைவில்லை என்றாலும் இனிப்பிரச்சனையில்லை. காரணம், இப்போது முத்தையா முரளிதரன் என்ற சிங்கள விசுவாசியின் முகத்திரை சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டுள்ளது. இவரின் முகமூடி கிழிவதற்கு விஜய் சேதுபதியே மிகப் பெரும் பேருதவியைப் புரிந்துள்ளார். இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே நடிக்கமாட்டேன் என்று விஜய் சேதுபதி ஒதுங்கிக் கொண்டிருந்தால் முரளிதரனின் உண்மையான முகத்தை இந்த உலகமும், அவருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகமும் கண்டிருக்காது.

ஆனால், இப்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முடிவெடுத்ததால் எழுந்த சர்ச்சை, முத்தையா முரளிதரனின் தமிழினத்தின்று எதிரான முகத்தை உலகளவில் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது.