ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 10 - கலாநிதி சேரமான்

காகிதப் புலிகளும், அம்புலி மாமா கதையும்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றது. தமிழகத் தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதி அது. நேரம் இரவு 7:00 மணியிருக்கும். ஈழத்தமிழர் ஒருவரின் வீடு அது. அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்தார். இறுதி யுத்தத்தின் முடிவில் சிறீலங்கா படைகளிடம் சரணடைந்து, இரண்டரை ஆண்டுகள் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் அவர். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக தமிழகம் சென்ற அவர், சென்னையின் புறநகரில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்த பொழுது அது நிகழ்ந்தேறியது.

திறந்த வீட்டில் நாய் புகுந்தது போல் திடீரென வீட்டிற்குள் மூன்று பேர் நுழைகின்றார்கள். மூவரும் வாட்டசாட்டமானவர்கள். ‘யாரையா நீங்கள்?’ என்று அவர்களிடம் சற்றுக் கடுமையான தொனியில் வீட்டு உரிமையாளர் கேட்க, அதனை அலட்சியம் செய்தவாறே அவர்களில் முதலாவது நபர் ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொள்கின்றார். வந்திருந்தோரில் ஒருவர் தங்களின் அடையாள ஆவணத்தை வீட்டு உரிமையாளரிடம் காண்பிக்க, மற்றவரோ, அவ்வீட்டில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை அழைக்கின்றார்.

இதனால் வீட்டு உரிமையாளர் பதற்றமடைய, அவரை சாந்தப்படுத்தும் முதலாவது நபர், தாங்கள் மூவரும் தமிழக காவல்துறையின் கியூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்றும், ஒரு சினேகபூர்வ உரையாடலுக்காகவே அங்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். ஆனால் அங்கு தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரின் பதற்றமோ தணியவில்லை. சிறீலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் தான் இயக்க செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி விட்டதாகவும், இனி ஐரோப்பா சென்று தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கவனிப்பது மட்டுமே தனது எண்ணம் என்றும் குறித்த காவல்துறை அதிகாரிகளிடம் சத்தியம் செய்யாத குறையாக அவர் கூறுகின்றார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு அவரிடம் தூக்கி வாரிப் போடும் கேள்வி ஒன்றை முதலாவது காவல்துறை அதிகாரி கேட்கின்றார்: ‘ஒங்களைப் போன்றவங்கள் எல்லாம் வெளிநாடு போனால் ஒங்கடை மக்களை யார் கவனிப்பானுகள்? மக்களைப் பற்றி நீங்க யோசிக்கலையா?’ வெள்ளாடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதையைப் படித்திருந்த அந்த முன்னாள் போராளி, தன்னிடம் இப்படி ஒரு கேள்வியை இந்தியப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

3

ஆனால் இப்படி நடப்பது இது மட்டும் முதற் தடவை அல்ல. இப்படியான பல சுவாரசியமான சம்பவங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதற்காகத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பல முன்னாள் போராளிகள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அப்படி இந்தியப் புலனாய்வாளர்களை சந்தித்து விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த சில முன்னாள் போராளிகள், தமிழீழத்தை அமைப்பதற்காகப் புதிய ஆயுதப் போராட்டம் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாகக் கூறித் திரியும் அளவிற்கு இவ்வாறான சந்திப்புக்கள் இருந்தன எனலாம்.

இது போதாதென்று கொரோனா கொல்லுயிரியின் பரம்பல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வீடுகளுக்குள் மக்கள் முடக்கப்பட்ட பொழுது, சூம் ஊடாக முன்னாள் போராளிகள் சிலரால் அரசியல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. இவ்வாறான வகுப்புக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கி வரும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்வாறான அரசியல் சந்திப்புக்களில் தற்பொழுது இந்தியாவில் வசித்து வரும் யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான மு.திருநாவுக்கரசு அவர்களும் உரையாற்றியிருந்தார். இவ்வாறான அரசியல் வகுப்புக்கள் அனைத்திலுமே வெளியிடப்பட்ட முக்கிய கருத்து யாதெனில், இன்றைய பூகோள அரசியல் சூழலில் ஈழத்தீவில் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடங்குவதற்கு இந்தியா விரும்புகின்றது என்பது தான்.

அதாவது கடந்த காலத்தில் தாம் விட்ட தவறை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், ஆட்சியாளர்களும் உணர்ந்திருப்பதாகவும், ஈழத்தீவில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தொடங்கப்படுமானால், அதற்குத் தேவையான ஆயுத மற்றும் பின்தள உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் இவ் அரசியல் வகுப்புக்களில் கூறப்பட்டிருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்த யாரும் இனித் தாம் வாழும் ஐரோப்பிய நாடுகளை விட்டு வெளியேறித் தாயகம் திரும்பப் போவதில்லை: அங்கு போய் போராடும் எண்ணமும் அவர்களுக்குக் கிடையாது. மாறாக ஏறத்தாழ பதினொன்றரை ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாமல், இத்தனை ஆண்டுகளாகத் தம்மை போராளிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள். 

சரி, ஒரு கதைக்கு ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதனடிப்படையில் எப்படித் தமிழீழத்தை அமைப்பது? இதற்குக் குறித்த முன்னாள் போராளிகள் கூறும் கதை மிகவும் விசித்திரமானது. ஒரு விதத்தில் அம்புலி மாமாவில் வாசித்த சிறுவர்களின் கதைகள் போன்றது.

முதலாவதாக தமிழீழ தாயகத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்திருக்கும் தமிழ் இளைஞர்களை தமிழகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி வழங்குவது. புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் (ஆனால் இந்தியாவின் அனுசரணையுடன்) ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரகசிய இடங்களில் பதுக்கி வைப்பது. சமநேரத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் மூலம் சீமான் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தேவையான நிதியை வழங்குவது.

சீனாவிற்கு சாதகமான போக்குடன் நடந்து கொள்ளும் ராஜபக்ச சகோதரர்கள், இன்னும் சில ஆண்டுகளில் சீனா இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றுவதற்கு இடமளிப்பார்கள். அப்பொழுது இலங்கையில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு இந்தியா பச்சைக் கொடி காட்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் சீமான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பார். அப்பொழுது இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளை இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கையில் இறக்கித் தாக்குதல் தொடுப்பது. இதனால் ஆத்திரமடையும் சிறீலங்கா இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லத் தொடங்கும். உடனே தமிழினப் படுகொலையைத் தடுப்பதற்கு இலங்கையில் இந்தியப் படைகள் களமிறங்கும். இந்தியப் படைகளோடு புதிய போராளிகளும் இணைந்து தமிழீழத்தை விடுவிப்பார்கள். பின்னர் இந்தியாவின் ஏற்பாட்டில் ஐ.நாவின் அனுசரணையில் ஈழத்தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பொழுது சுதந்திரத் தமிழீழத்தை அமைக்கத் தமிழர்கள் ஆணை கொடுப்பார்கள். உடனேயே கிழக்குத் தீமோர் உருவாகியது போன்று தமிழீழமும் உருவாகும். அது இந்தியாவின் நிரந்தர அரணாக இருக்கும்.

இந்த அம்புலி மாமா கதையால் புல்லரித்துப் போனவர்களும் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் இருக்கத் தான் செய்கின்றார்கள். இந்தக் கதையைக் கேட்டு கொரோனா நெருக்கடி காலத்தில் தலைமைச் செயலகம் என்ற கும்பலுக்குப் பணம் கொடுத்தவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் இதில் இன்னுமொரு வேடிக்கையும் உள்ளது.

அது என்னவென்றால் இதே அம்புலி மாமா கதையைத் தான் தமிழீழத்தின் அமைச்சர்கள் என்று கூறிக் கொள்ளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலகக் கும்பலின் பிரமுகர்கள் சிலரும் கூறிக் கொண்டு திரிகின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை கடந்த பத்து ஆண்டுகளாக புலம்பெயர் தேசங்களில் தாம் இயக்கி வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தான் இந்தியாவின் ஆதரவுடன் தமிழீழம் உருவாகும் பொழுது அதன் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கப் போகும் கட்டமைப்பாக மாறுமாம்.

சரி, இப்பொழுது சீரியசான, காத்திரமான விடயங்களுக்குள் நுழைவோம்.

உண்மையில் முன்னாள் போராளிகளுடன் தமிழ்நாட்டில் இந்தியப் புலனாய்வுத்துறையினர் நடாத்தி வரும் சந்திப்புக்களின் சூட்சுமம் என்ன?

சீனாவிற்கு சார்பான போக்குடன் ராஜபக்ச சகோதரர்கள் நடந்து கொள்ளும் நிலையில் ஈழத்தமிழர்களை எவ்வாறு கையாளும் எண்ணத்துடனும், நிலைப்பாட்டுடனும் இந்தியாவும், அதன் புலனாய்வுத்துறையும் உள்ளன? 

(தொடரும்)