தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்காத தமிழ் அரசியல்வாதிகள் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆறு பிரதேச பிரிவுள் படுவான்கரை பக்கமாகவுள்ளது. எழுவான்கரையை விட படுவான்கரையில்தான் கூடுதலான வயல்களையும் காடுகளையும் கொண்ட நிலப்பரப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படைவசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமையினால் சனத்தொகை மிகவும் குறைந்த இடமாகக்காணப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் மொத்த வளத்தில் மூன்றில் இரண்டு பகுதி படுவான்கரையில்தான் உள்ளது.

2

விடுதலைப் புலிகளின் காலத்தில் காட்டுவளம் மிகவும் பெறுமதிமிக்கதாக காப்பாற்றப்பட்டது. சட்டவிரோத செயற்பாடுகள், அத்துமீறிய குடியேற்றங்கள் என அனைத்துவகையான நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அந்தகாலங்களிலும் சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை பகுதிக்கு அருகிலுள்ள வடமுனை, ஊத்துச்சேனை போன்ற பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை சிறீலங்காப்படைகளின் ஆதரவுடன் முன்னெடுத்தனர். எனினும் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

எல்லைப்பகுதியில் மட்டுமின்றி நகரத்திற்குள்ளும் குடியேற்றங்களை பல வடிவத்தில் முன்னெடுத்தனர். உதாரணமாக கல்குடாத் தேர்தல் தொகுதியில் பாசிக்குடா மற்றும் கல்மடு போன்ற பகுதிகளில் மீனவர்கள் என்றபோர்வையில் நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம், அம்பாந்தோட்டை போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் குடியேறினார்கள் அன்றைய காலகட்டத்தில் அரசியல் ரீதியான எதிர்காட்டப்படாலும், இறுதியில் விடுதலைப் புலிகளின் தலையீட்டினால் தடைசெய்யப்பட்டது.

$

ஆனால், தற்போது பாசிகுடாவில் சிறீலங்காப்படைகளின் ஆதரவுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இங்கு குடியேற்றம் செய்யப்படும் சிங்களவர்களுக்கு என தனியான சிங்களப் பாடசாலை அமைக்கப்படுகிறது. இதில் அயல் கிராமங்களில் உள்ள தமிழ் மாணவர்களையும் அழைத்து சிங்கள பாடம் கற்பித்துக் கொடுக்கப்படுகிறது. இதற்கு யாரும் இன்று எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

மாவட்டத்தில் ராஜாங்க அரசாங்கத்தில் அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் என ஆளும் கட்சியில் இருவர் உள்ள போதிலும் இதனைத் தட்டிக்கேட்ட முடியவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு அறிக்கையிடும் அரசியல் செய்யப்படுகிறது.

கடந்தவாரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்கொன ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதியில் சட்டவிரோத காடழிப்புக்கள் இடம்பெற்று அத்துமீறிய பயர்ச்செய்க்காக அம்பாறை மற்றம் பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாண ஆளுனரின் பின்புலத்தில் பெளத்த பிக்குவின் தலைமையில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுவருகிறது.

இதனை மாவட்ட அரசாங்க அதிபர் தனக்குள்ள அதிகாரங்களைப்பயன்படுத்தி இவ்வாறான குடியேற்றம் மேற்கொள்ள முடியாது என ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்து சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3

இலங்கைத்தீவு காலணித்துவ நாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்டுச்சொல்லக் கூடியளவுக்கு அம்பாறை கல்லோயா சிங்களக் குடியேற்றத்திட்டம், திருகோணமலையில் சேருநுகர குடியேற்றத் திட்டங்களை நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தனர். எனினும், அதற்கு பின்னரான காலங்களில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதியான விடுதலைப் புலிகள் உருவாக்கம் பெற்றபின்னர் சிங்களத்தின் இவ்வாறான குடியேற்றத்திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

வல்லிபுரம் நல்லையா மாஸ்டர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் தெரிவாகி சுகாதாரம் மற்றும் உள்ளுVராட்சி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். 1952 தேர்தலில் ஐ.தே.க வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்று டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். இந்தகாலத்தில் 1958ஆம் ஆண்டு கல்லோய சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆளும் கட்சியில் இருந்தாலும் மாவட்டத்தில் தென்னிலங்கை பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத்திட்டங்களை தடுக்க முடியவில்லை.

அதற்கு பின்னரான காலங்களில் கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றாலும், 1977ல் ஜயவர்தனாவின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் 1980களில்  உள்ளுVராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டங்களில் தென்பகுதி ஆட்சியாளர்களுடன் இணைந்து இருந்த போது, வடமுனை, கல்குடா, மட்டு நகர் பகுதிகளில் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், தேவநாயம் தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் விட்டாலும், சிங்கள பேரினவாத அரசியுடன் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகம், முறக்கொட்டான்சேனையில் அரிசி ஆலை கும்புறுமுலை அச்சகம், செங்கலடி வைத்தியசாலை தபால் நிலையம் பிரதேச செயலகம் இன்னும் பல அபிவிருத்திகளை கூறலாம்.

மட்டக்களப்பு அரசியல் வரலாற்றில் 1952 - 1989 ஆண்டு வரை கெளரவ வ.நல்லையா, கெளரவ. கே.டபிளியு. தேவநாயகம், கெளரவ. செ.இராசதுரை ஆகியோர் சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து கூட்டு அரசியல் செய்து மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்த, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக, பதவி வகித்த காலப்பகுதியிலே, பாரிய அபிவிருத்தித்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இவர்களின் பின்னரான காலப்பகுதி மிகவும் யுத்தம் நிறைந்த காலமாக இருந்து. இனவாதம் அதிஉச்சமாக தலைதுர்க்கியது, அபிவிருத்தி அல்ல உரிமை அரசியல் என தடம்புரண்ட போட்டம், சகோதர இனத்தவர்களின் அரசியல் வருகை போன்ற பல்வேறு காரணங்களில் மாவட்டத்தின் தமிழ் பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கை மாத்திரமல்ல அனைத்து நடவடிக்கையும் பின்னடைவைக்கண்டதுடன், யுத்தகாலத்தில் தமிழர் இளைஞர்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதுதான் உண்மை.

குறிப்பாக கடந்த பத்தாண்டு காலங்களில் வந்த தேர்தலில் போது தமிழ்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் பல்வேறு பொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மாவட்டத்தில் பல அபிவிருத்தித்  திட்டங்களை செய்வோம் என வாக்குறுதியளித்துள்ளார்கள். இறுதியில் கால்நடைகளை மேய்ப்பதாகன நிலத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை.

அதேபோன்று, மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் தமிழ் இனத் துரோகிகளான மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் விநாயகமூர்த்தி முரளிதரன்,  முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சரும் கொலைக்குற்றவாளியுமான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பல போலி வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளி அரசிக்கு தமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது, தமிழர்களின் இருப்புக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் மாவட்டத்தில் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளைப் போன்று தற்போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் தரப்புக்களினால் இனவாத அரசாங்கத்தில் சாத்தியப்படுமா? ஆளும் கட்சியில் சாVந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் நிச்சமாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசதான்முடியுமா? மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் எண்ணில் அடங்காது இவற்றையாவது இவர்களினால் நிறைவேற்றிக் கொடுக்க முடியுமா?