சிங்கள தேசமாக இலங்கைத் தீவு மாறுமா? ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

போரும் அதன் விளைவுகளும் தமிழ் இனத்தை பன்னாட்டு ரீதியாக அடையாளப்படுத்தியுள்ள போதிலும் தாயகத்தில் தமிழர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழர்களின் எதிர்கால இருப்பு சந்தேகமாக மாறியுள்ளது. தமிழர்களின் போராட்டம் வீண் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. சிறீலங்காவின் அண்மைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பின்னரே இந்த நிலை உணரப்படுகின்றது.

தனித்தமிழ் பூமி என இதுவரை பெருமை பறைசாற்றிக்கொண்டிருந்த வடக்கு மாகாணம் மிகவும் நயவஞ்சகமாக சிங்கள தேசத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றது. நகர்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் தமிழினத்திற்கு பெரும் ஆபத்தாக மாறிவருகின்றது.

இலங்கைத்தீவின் முதற்குடிமக்கள் தமிழர்கள் எனவும் இவர்களின் தாய்மொழி தமிழ் எனவும் அந்த மொழியில் பேசுவதில் பெருமைகொள்கிறேன் எனவும் நாடாளுமன்றில் கன்னி உரையாற்றி, உண்மையைக் கூறியமைக்காக வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருக்கின்றார். அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக இடத்தை ஆக்கிரமித்து எல்லையிட முயன்ற சிங்கள மக்களிடம் இருந்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முனைந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பதவி நீக்கப்பட்டிருக்கின்றார். இதேபோல கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தவுடன் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மட்டக்களப்பில் தமிழர் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் அம்பிட்டிய தேரரால் மிரட்டப்பட்டனர். இவ்வாறாக தமிழ் மக்களுக்கு சார்பாக எவர் செயற்பட்டாலும் அவர்கள் பதவி, அந்தஸ்து பார்க்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தமிழர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது. தமிழர்களின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கவேண்டும் என சிங்கள தேசம் எதிர்பார்க்கின்றது. குந்தி இருக்க ஒரு குடிநிலம் கேட்டு போராடிய தமிழினம் இன்று கொல்லைப்புறத்திற்குள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தாயகத்தில் உள்ள தமிழர்களோ, புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்களோ அவ்வளவு அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் எனக்கூறி போராட்டத்தை ஆரம்பித்தார்கள் தமிழர்கள்.

ஆனால், போராட்டம் மெளனிக்கப்படுவதற்கு முன்னரே கிழக்கு கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. இங்கு சரிபாதி தேசம் சிங்களவர் வசமாகிவிட்டது. எஞ்சியிருப்பது வடக்கு மட்டுமே. வடதமிழீழத்தில் இனக்கலப்பு செய்துவிட்டால் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற பேச்சுக்கூட இல்லாமல் போகும் என்பது சிங்களத்தின் நம்பிக்கை. இதற்காக வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகளை கோட்டபாய அரசு இலக்குவைத்திருக்கின்றது.

வடக்கே, யாழ்.மாவட்டமே அவர்களின் முதல் இலக்காக மாறியிருக்கின்றது. யாழ். மாவட்டத்தில் ஏறக்குறைய 1100 யஹக்ரயர் அரச காணி உள்ளது. இக்காணியில் தென்னை, மரமுந்திரிகை, தேக்கு போன்ற வருமானம் தரக்கூடிய மரங்களை நாட்டி நீண்ட கால பயன்பெறுவதற்கு யாழ். மாவட்ட செயலகம் திட்டமிடலை மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் 900 யஹக்ரயர் அரச காணியை தங்களிடம் வழங்குமாறு படைத்தரப்பு யாழ். மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இவ்வளவு காணியில் சிங்கள தேசம் என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. இங்கேதான் பொதிந்திருக்கின்றது அவர்களின் திட்டம்.

இலங்கைத் தீவில் கொழும்புக்கு அடுத்ததாக மதிப்புமிக்க இடம் யாழ்ப்பாணம். இதுவே தமிழரின் தற்போதைய தலைநகரம். இதனால், கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளுடனும் கூடிய படை முகாம்களை அமைத்து படையினரை இங்கே தங்கவைக்க கோட்டபாய அரசு திட்டமிட்டிருக்கின்றது. அத்துடன், படையினரின் குடும்பங்களை இங்கு குடியேற்றுவது, பெளத்த விகாரைகள், சிங்கள பாடசாலைகள், நிர்வாக மையங்கள் போன்றவற்றை அமைப்பது போன்று பாரிய திட்டமிடலுடன் கோட்டபாய அரசு 900 யஹக்ரயர் காணியை கபளீகரம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே, வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களினதும் பொது நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின்  காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில காணிகளின்  உரிமையாளர்களிடம் பணம் கொடுத்து வாங்கிய படையினர் உறுதி எழுதியிருக்கின்றனர். சில காணிகள் குத்தகை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலாகவே மேற்படி 900 யஹக்டயர் காணியை படையினர் அபகரிக்க திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் காணி அற்றவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் அரசினாலோ தொண்டு நிறுவனங்களாலோ வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை. இரவல் வீடுகளிலும் கிடுகுக் கொட்டகைகளிலும் வாழும் இவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அக்கறைப்படுவதில்லை. இவர்கள்  ஒரு பரப்பு அரச காணியில் சிறு கொட்டகை அமைத்தால் சட்டம் அவர்கள் மேல் பாயும். ஏதும் அறியாத அப்பாவிகள் மேல் எந்தக் கரிசனையும் இன்றி நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரிகள், பெரும் வல்லமை பொருந்திய அரச இயந்திரம் ஆக்கிரமிப்பைச் செய்யும்போது வெறுமனே வெள்ளைக் காகிதத்தில் ஒப்பமிட்டுவிட்டு வாழாவிருக்கின்றனர்.

கோட்டபாய அரசாங்கம் செய்யும் அடாவடிகளையும் ஆக்கிரமிப்புக்களையும் சுட்டிக்காட்டவோ தட்டிக்கேட்கவோ முடியவில்லை. மீறி களத்தில் இறங்குபவர்கள் பதவி பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இதற்கு உதாரணம். இதனால் இனிமேல் அரசின் அடாவடிகளுக்கோ ஆக்கிரமிப்புகளுக்கோ எதிராக எந்த அரச அதிகாரியும் குரல்கொடுக்க முன்வரமாட்டார்கள். அந்தளவிற்கு சிங்கள தேசம் அவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்திருக்கின்றது.

ஈழ யுத்தம் ஆரம்பமானதில் இருந்து எக்காலத்திலும் - எந்த ஜனாதிபதியின் கீழும் - நடைபெறாத ஆக்கிரமிப்பு கோட்டபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்று வருகின்றது. நாட்டு மக்கள் ஒருபுறம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அச்சமடைந்திருக்கின்றனர். மக்கள் ஒன்று கூடத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, எந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் சிங்கள அரசு தமிழரின் காணிகளை சத்தம் சந்தடி இன்றி ஆக்கிரமிக்கின்றது. 20 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டில் மீண்டும் முடியாட்சியை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மேற்படி காரணங்களால் சிங்கள மக்
களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழர் நிலங்களை (யாழ்ப்பாணத்தை)  அபகரிக்கும் அவர்களின் கனவு நிறைவேறும். ஆனால், தமிழ் மக்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாவர். நாடு முழுவதையும் சொந்தமாக கொண்டிருந்த தமிழினம் நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் நிலை குறித்து யாரும் அக்கறைப்படுவதாக தெரியவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழினத்தின் காவலர்களாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டு, அவர்களின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழினம் எதிர்நோக்கியுள்ள இழி நிலைக்கு தீர்வு காணப்போவது யார்? இனிமேல் தமிழினத்திற்கு விடிவே இல்லையா? தமிழீழ மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி மலருமா? தமிழரின் தேசியக்கொடி மீண்டும் பட்டொளி வீசிப் பறக்குமாறு? தெருக்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் தாயக எழுச்சிப் பாடல்கள் மீண்டும் ஒலிக்குமா? கல்லறைகள் உயிர்பெறுமா? தேசத்திற்காக காவியமானோரின் தினத்தன்று தேசியத் தலைவரின் கம்பீரக் குரலை மீண்டும் கேட்க முடியுமா? எமது மண், எமது கடல் சிங்களக் காடையரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுமா? இவை தமிழ் மக்களின் நியாயமான கேள்விகள்.

மேற்படி கேள்விகளுக்கு பதில் கூறப்போவது யார்? தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்பதற்கு தாயகத்திலோ புலம்பெயர் தேசத்திலோ பலம்மிக்க அமைப்புகள் ஏதும் உள்ளனவா? அன்றுதொட்டு இன்றுவரை தமிழர்களுக்கு தமிழர்களே சாபக்கேடாக இருக்கின்றனர். தமிழர்களுக்கான அரசுகளில் அவ்வப்போது ஏற்பட்ட துரோகங்களும் காட்டிக்கொடுப்புக்களுமே தமிழர்களுக்கு நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய தலைமையை இல்லாமல் போகச் செய்திருக்கின்றது. இப்போதாவது தமிழர்களுக்கு என இயங்கும் அமைப்புகள் தாம் ஒன்றுபடுவது குறித்து சிந்திக்கவேண்டும்.

நிலத்திலும் புலத்திலும் தமிழர் நீடித்து வாழவேண்டுமாயின் பலமாகக் குரல்கொடுக்கக்கூடிய அமைப்பு ஒன்று அவசியம். அதன் உருவாக்கம் தொடர்பாக விரைந்து சிந்தித்து முடிவெடுக்கவேண்டும். இல்லையேல், தாயகத்தில் தமிழர்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்படுவதை யாரும் தடுக்க முடியாமல் போகும்.