உலகில் 4 கோடியைக் கடந்தது கொரோனா!

பலி எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டுகின்றது


உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் (40 மில்லியன்) கடந்தது. அதேவேளை, உலகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 12 இலட்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உலகை அச்சுறுத்தத் தொடங்கி வரும் டிசம்பர் மாதத்துடன் ஓராண்டை எட்டப்போகின்றது. சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் சுமார் 210 நாடுகளுக்குப் பரவிவிட்டது.

ஆனால் இந்த நோயை முறியடிக்கும் உறுதியான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 இலட்சத்து 513 பேர் என ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியாகியது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,345,317 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7,494,551 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 11 இலட்சத்து 15 ஆயிரத்து 775 பேர் இந்த நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அந்த நாட்டில் 224,824 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், பிரான்ஸ் கொரோனா  பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பிரான்சில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, இல் டு பிரான்ஸ், ரூவான், லீல், சென் எத்தியன், லியோன், கிரனோபில், மோன்பெலியே, மார்சைய், துலூஸ் ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் நான்கு வாரங்களுக்கு (15.11.2020 வரை) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 135 ஈரோ அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்சில் இதுவரை 9 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் 8வது இடம். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், ஆர்ஜென்ரீனா, கொலம்பியா முதல் ஏழு இடங்களை வகிக்கின்றன. பிரான்சில் இதுவரை 34 ஆயிரத்து 477 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக அளவில் 9வது இடம். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்சிக்கோ, பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின், பெரு முதல் எட்டு இடங்களில் உள்ளன.

இதேவேளை, பாதிப்பு எண்ணிக்கை குறையாவிட்டால், ஊரடங்கு உத்தரவை டிசம்பர் முதலாம் திகதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலியும் அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா உயிரிழப்பில் பிரித்தானியா முதலிடத்திலும் இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக மக்கள் தொகையில் 10 வீதம் பேருக்கு கொரோனா

உலக மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவர் மைக்கேல் ரையன் தெரிவித்தார். தற்போதைய உலக மக்கள் தொகை சுமார் 760 கோடி. இதில் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின்படி 76 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. உலகின் பெரும் பகுதி அபாயத்தில் இருப்பதே இதன் அர்த்தமாகும். கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிர்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலர் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 10 வீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பா, கிழக்கு தரைக்கடல் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனினும் ஆபிரிக்காவிலும், மேற்கு பசிபிக் பகுதிகளிலும் நல்ல சூழல் நிலவுகிறது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

பதப்படுத்தப்பட்ட சீன உணவில் கொரோனா!

சீனாவின் கிங்டாவோ என்ற துறைமுக நகர நிர்வாகம், அங்கு வாழும் 1 கோடியே 10 இலட்சம் மக்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தியது. அந்த பரிசோதனைக்கு பின்னர் அங்கு பரவல் இல்லை. ஆனால் தற்போது அங்கு பதப்படுத்தி, உறைய வைக்கப்பட்ட உணவுப் பொதியின் மேற்பரப்பில் கொரோனா உயிருடன் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி உணவுப்பொருள் பொதியின் மேற்பரப்பில் வாழும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல் முறை. இதை சி.டி.சி. என்று சொல்லப்படுகிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது.

சீனாவில் கடந்த யூலை மாதம், ஒரு கொன்டெய்னரின் உள்சுவரிலும், பொதிகளிலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறைந்த இறால் இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கிங்டாவோ நகரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு பொதியின் மேற்பரப்பில் கொரோனா வாழும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பொதியைத் தொடுகிறவர்களை கொரோனா தொற்றிக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.