சிங்கள மாயமாகப்போகும் தமிழர் தாயகம் - ஆசிரிய தலையங்கம்

இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள வலயமாக்கி, தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாகத் தகர்த்தழிக்கும் நடவடிக்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.  இனப்படுகொலையில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள இந்த ஆக்கிரமிப்பு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் கைகளுக்கு அதிகாரங்கள் சென்றடைந்தன் பின்னர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதிகளை கபளீகரம் செய்துவிட்ட சிங்களப் பேரினவாதம், தற்போது வடக்கிலும் கிழக்குக்கு இணையான ஆக்கிரமிப்பைத் தொடுத்துள்ளது. மணலாற்றை முழுமையாக ஆக்கிரமித்து வடக்கிற்கும் ‡ கிழக்கிற்குமான தரைவழித் தொடர்புகளை துண்டித்த பேரினவாதம், 2009 பாரிய இனஅழிப்பின் பின்னர் நாவற்குழியில் பாரிய சிங்களக் குடியேற்றத்தை நிறுவி வடக்கில் யாழ்குடாவிற்கும் ஏனைய பிரதேசங்களுக்குமான தொடர்பை துண்டிக்க முனைந்துள்ளது. தற்போது நாவற்குழியில் 300ற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு பாரிய பெளத்த விகாரையும் கட்டப்பட்டு சிங்களக் குடியேற்றத் திட்டம் விரிவாக்கப்பட்டு வருகின்றது.  இதேபோன்று மாதகல் சிங்களப் பெயர் மாற்றப்பட்டு முழுமையான சிங்களப் பிரதேசம் போன்று அந்த இடத்தின் தோற்றமும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கின் பல பகுதிகளும் மெல்ல மெல்ல சிங்கள மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடக்கிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு அங்கெல்லாம் சிங்களக் குடும்பங்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கான திட்டத்தை சிங்களப் பேரினவாத அரசு வரைந்துள்ளது. அதேவேளை, தமிழர்களின் நிலங்களை சிங்களவர்கள் விலை கொடுத்து வாங்கும் வேகமும் தற்போது வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வடக்கில் தமிழர்களின் நிலங்களைப் பறித்தெடுக்கும் வேலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிழக்கிலும் இந்த நிலப்பறிப்பு மேலும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு தடையாக நிற்கும் அதிகாரிகளையும் உடனடியாகத் தூக்கியயறிந்து, அந்த இடத்திற்கு நிலப்பறிப்பிற்கு உடந்தையாக இருக்கக் கூடியவர்களை பதவியில் அமர்த்தியும் வருகின்றது.

கடந்த வாரம் மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, உடனடியாக சிறீலங்காப் பேரினவாத ராஜபக்ச குடும்ப அரசினால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின்  அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை, சிறீலங்கா வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்துவைத்துள்ளது. அப்பகுதியில் தற்போது சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு சகல திணைக்களங்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். ஆனால் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரை நிலத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் தமிழ் மக்கள் ஈடுபட்டனர். அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அங்குவந்த சிறீலங்கா இராணுவ மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் தனித்தனியாக நிழற்படங்கள் எடுத்துள்ளனர்.

இதேவேளை, மேய்ச்சல்தரை விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடமும் சென்று முறையிட்டவேளை, சிங்களவரான அப்பெண்மணி ‘காணி அற்ற சிங்கள மக்கள் வாழக்கூடாதா? நீங்கள் மேய்ச்சல் தரை கோருகின்றீர்கள் அவர்களோ வாழ்நிலம் கோருகின்றனர். அதனைத் தடுக்க முடியாது’ என அதிகாரத் தோரணையில் பதிலளித்திருந்தார்.

இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரான திருமதி கலாமதி பத்மராஜா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பர்வையிட்டதோடு, அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடம் ஆவணங்கள் ரீதியிலும் பரீட்சித்தமையால், சிங்கள மக்கள் மாவட்ட அரச அதிபருடன் முரண்பட்டனர். அவரும் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளை அவர்களிடம் எடுத்துரைத்தார். தன் பணியை முடித்துக்கொண்டு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி. காரணம் சிறீலங்கா அரசினால் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் உடனடியாகவே பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்கள் தமது பாரம்பரிய காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்போது சிறீலங்காவின் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அங்கும் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்து அவற்றை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.

இதேபோன்று, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பெளத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளது.

கடந்த மாதம் 24ம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை கற்கள் இடப்பட்டு வருவதை அறிந்து அப்பகுதிக்கு சென்ற தென்னமரவடி மக்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அரிசிமலை பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் பிரதேசமாக அடையாளப் படுத்தபட்டு எல்லை கற்கள் இடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு அபகரிக்கபட்ட 358 ஏக்கர் பரப்பில் தென்னமரவடி கிராமத்தின் ஆரம்பத்தில் பெளத்த விகாரை ஒன்று கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கும் ஆரம்பிக்கபட்டுள்ளதுடன், அவற்றுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தபட்டுள்ளனர். தென்னமரவாடியில் பாரிய அளவிலான நிலம் கையகப்படுத்தபட்டுள்ளமை சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான திட்டமாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தவேளையில், தாயகத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்களும், சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பில் இருந்து தாயகக் கோட்பாட்டை வ்வாறு தக்கவைக்கப் போகின்றார்கள் என்ற பெரும் கேள்வியே எழுந்துள்ளது.