அம்மானின் கடிதங்கள்...

திரு விசுவநாதன் உருத்திகுமாரன் அவர்கட்கு,

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை, நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டதாக 21.10.2020 புதன்கிழமை காலை கேள்வியுற்றதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், உங்களைப் பாராட்ட வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன்.

ஆனாலும் தமிழீழத்தின் கனவுலகப் பிரதமராக விளங்கும் உங்களை எப்படி விளிப்பது என்பதில் குழப்பமாக இருந்தது. ‘மாண்புமிகு பிரதமர்? என்று விளிப்பதா? ‘மேன்மை தங்கிய’ பிரதமர் என்று அழைப்பதா? ‘மேதகு’ என்று எழுதுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த பொழுது தடை நீக்கப்படவில்லை என்று அன்று மதியம் செய்தி வந்தது. அதற்குள் பலர் தாரை, தப்பட்டை அடித்து உங்களை வாழ்த்தி முடித்து விட்டார்கள்.

இலண்டனில் இருந்து இயங்கும் ஒரு கட்டாக்காலி இணையத்தளம் உங்களைத் தமிழீழத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழாரம் சூட்டியது. பாலியல் செய்திகள், கிசுகிசுக்கள் போன்றவற்றை வெளியிட்டுத் தனது வாசகர் வட்டத்தை வளர்த்துக் கொண்ட அந்த இணையத்தளம், உங்களைப் போற்றிப் புகழ்வதால் தமிழ் மக்களிடையே அதிர்வு ஏற்படும் என்று நினைத்ததோ தெரியவில்லை. பாவம் என்ன செய்வது? குரங்கின் கையில் பூமாலை சிக்கினால் அதே கதி தான்.

தமிழ்நாட்டில் இருந்து சிலர் உங்களைப் போற்றிக் கவிதை பாடினார்கள். இன்னும் சிலர் காவியம் எழுதுவதற்குத் தயாராகினார்கள். ஆனால் சில மணிநேரத்திற்குள் எல்லாமே புஸ்வாணமாகிப் போனது. ஆனாலும் நீங்கள் பலே கில்லாடி தான். நீங்காத ஒரு தடையை நீங்கி விட்டதாக உங்கள் மங்குனி அமைச்சர்களை வைத்துக் காலையில் பொய்ச் செய்திகளைப் பரப்பி விட்டு, மாலையில் ‘தடை நீங்கவில்லை, ஆனால் நீங்கி விடும்’ என்று ஒரு போடு போட்டீர்களே! இதையயல்லாம் எங்கிருந்து கற்றுக் கொண்டீர்கள்? உலக அரசியலின் கோமாளியாக விளங்கும் டொனால்ட் ரிறம்பிடம் இருந்து கற்றுக் கொண்டீர்களோ தெரியவில்லை.

என்ன தான் தமிழீழத்தின் கனவுலகப் பிரமராக நீங்கள் விளங்கினாலும் கூட டொனால்ட் ரிறம்ப் தானே உங்களுக்கும் ஜனாதிபதி. அதனால் தான் நீங்கள் பிரதமராக விளங்கும் உங்கள் கனவுலக அரசாங்கத்தின் அதிபர் யார் என்பதை மூடுமந்திரமாக வைத்துள்ளீர்களோ?

நிற்க, நீங்கள் வசிக்கும் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை நீக்கப்படாமல் இருக்கும் பொழுது எதற்காக பிரித்தானியாவில் தடை நீக்கத்திற்கான வழக்கைத் தாக்கல் செய்தீர்கள்? அது சரி, நடைமுறைச் சாத்தியமான விடயங்களைக் கிடப்பில் போட்டு விட்டு நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைக் கையிலெடுத்துக் கூத்தடிப்பதில் உங்களை விட விண்ணர்கள் இந்த உலகில் இருக்கின்றார்களா என்ன? இப்படிச் செய்வதெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா!

‘பாலசிங்கம் சமஸ்டியில் சறுக்கி விட்டார், அவரது ஆலோசனைப் படி பேச்சுவார்த்தையை நடத்தினால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்நோக்கிப் போய்விடும், இடைக்கால நிர்வாகத்தைக் கோரினால் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் ஆதரவுடன் தனித் தமிழீழத்தை அமைத்து விடலாம்' என்று இயக்கத்தின் தலையில் மிளகாய் அரைத்து முழு உலகையும் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பி விட்டுக் கடைசியில் அந்த இயக்கத்தையே அழித்த விற்பன்னர் அல்லவா நீங்கள்? அப்பப்பா, புதுப் புதுத் திட்டங்களை வகுத்துக் குழப்புவதில் உங்களின் ஆளுமையே தனி.

‘இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு சிறீலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை, ஆனால் சமஸ்டித் தீர்வை இயக்கம் ஆராய்ந்து பார்ப்பதை உலகம் விரும்புகின்றது’ என்று எங்கள் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணை கூறிய பொழுது, உலக நாடுகளின் பொறிக்குள் பாலா அண்ணை இயக்கத்தைக் கொண்டு போகின்றார், இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு சிறீலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்றாலும், சர்வதேச சட்டத்தில் இடமுண்டு’ என்று ஆலோசனை வழங்கிய மகா மதி மந்திரி நீங்கள்! அதுவும் ‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் ஆகியவை தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாக ஆட்சியை வழங்கியது போல் தமிழீழத்திற்கும் இடைக்கால நிர்வாக ஆட்சியை வழங்கத் தயாராக இருக்கின்றன’ என்றும், இது பற்றி அன்றைய அமெரிக்க வெளியுறத்துறை துணை அமைச்சர் கிறிஸ்ரீனா றொக்கா உங்களுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் இயக்கத்திற்கு நீங்கள் சொன்ன கதைகள் ஒன்றா, இரண்டா? உங்கள் கதைகளை நம்பி சமஸ்டித் தீர்வை ஆராயும் மூலோபாயத்தைக் கைவிட்டு இடைக்கால நிர்வாக யோசனையைத் தயாரித்த இயக்கத்தைக் கடைசியில் நட்டாற்றில் கைவிட்டவர் தானே நீங்கள்?

உங்கள் ஆலோசனையைக் கேட்டு சமஸ்டித் தீர்வை ஆராயும் மூலோபாயத்தை இயக்கம் கைவிட்ட பின்னர் தானே ஆழ்கடலில் வேகமாக நகர்ந்து தாக்குதல் நடத்தக் கூடிய கப்பல் ஒன்றையும், கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும் சிங்கள அரசுக்கு வழங்கி இயக்கத்தின் இரண்டு ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா உதவியது? அத்தோடு நின்று விடாமல், போரைத் தொடங்கும் நோக்கத்துடன் தான் சமஸ்டித் தீர்விலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விலகுகின்றார்கள் என்று நினைத்து, சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்களையும், போர்ப் பயிற்சிகளையும் வழங்கி அதன் படை பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்கா உதவியது. அப்பொழுது கூட நீங்கள் என்ன உங்கள் வாயை சும்மாவா வைத்துக் கொண்டிருந்தீர்கள்? சிறீலங்கா அரசாங்கத்தைப் போல் உலகெங்கும் உள்ள திறந்த ஆயுதச் சந்தைகளில் இயக்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு சர்வதேச சட்டங்களில் இடமுண்டு என்று ஆலோசனை கூறியவர் அல்லவா நீங்கள்? அதற்கு பனிப்போர் காலத்தில் ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றையும் மேற்கோள் காட்டிய மகா மேதை நீங்கள்.

உங்கள் ஆலோசனையை நம்பி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த பையன்களை எப்.பி.ஐக் கொண்டு சிறையிலடைக்க வைத்ததைத் தவிர நீங்கள் சாதித்தது தான் என்ன? பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மக்களிடம் பணம் திரட்டி வழக்குப் போட்ட நீங்கள், கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் வாடும் அந்த இளைஞர்களை மீட்பதற்கு என்ன முயற்சிகளைத் தான் எடுத்தீர்கள்?

சரி அது தான் போகட்டும்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு ஒரு மில்லியன் டொலர் லஞ்சம் கொடுத்தால் அமெரிக்காவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கலாம் என்று நீங்கள் சொன்ன ஆலோசனையை நம்பித்தானே இலண்டனில் இருந்து ஒரு மருத்துவர் அமெரிக்கா வந்து கடைசியில் சிறையில் சில காலம் அடைபட்டுக் கிடந்தார்? அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது மனைவியும் மருத்துவராகப் பணிபுரிய முடியாது நெருக்கடிக்குள் வாடிய பொழுது உங்கள் சட்ட நுட்பங்கள் எல்லாம் மாயாவியின் கதை போல் மறைந்து போனது பெரும் மர்மம்தான்.

இதெல்லாம் போகட்டும். இயக்கத்தில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்ட பொழுதாவது நீங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே? 2002ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புப் பற்றிய சர்வதேச சட்டங்களின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் இயக்கத்தில் இணைக்க முடியும்? என்றும், ‘18 வயதுக்கு உட்பட்டவர்களை இயக்கத்தில் இணைத்தால் இயக்கத்தின் மீது ஐ.நா. தடைகளை விதிக்கும் அபாயம் உள்ளது’ என்றும் எங்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணை எச்சரித்த பொழுது, ‘இந்தக் கட்டுப்பாடுகள் ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், ஒரு நடைமுறை அரசான இயக்கத்திற்குப் பொருந்தாது’ என்று மாற்று ஆலோசனை வழங்கியவர் நீங்கள்.

நெருடிக்கடியான ஒரு காலகட்டத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்று ஆட்சேர்ப்புக்கான வயதை 17 வயதாக இயக்கம் குறைத்ததும், அதனால் சிறுவர் ஆட்சேர்ப்பில் இயக்கம் ஈடுபடுவதாக ஐ.நா. உட்பட சர்வதேச சமூகம் இயக்கத்தைக் கண்டித்ததும் உலகறிந்த கதை.

கடைசியில் இயக்கத்தின் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா.வின் சிறுவர் விவகாரப் பொறுப்பதிகாரி ராதிகா குமாரசுவாமி பரிந்துரை செய்த பொழுது, சிறிது காலம் காணாமல் போனவர் தானே நீங்கள்?

உங்கள் முட்டாள்த்தனமாக சட்ட ஆலோசனைகள் இயக்கத்தை சர்வதேச சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்துவதை உணர்ந்து தானே உங்களை 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் வன்னிக்குத் தேசியத் தலைவர் அழைக்கவில்லை. அதன் பின்னர் தானே உங்களை எங்கள் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணையும், பின்னர் எங்கள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் ஒதுக்கி வைத்தார்கள். பின்னர் கே.பியை வளைத்து சில காலம் அவருக்கு நீங்கள் வால்பிடித்துக் கொண்டு திரிந்ததும், நோர்வே தூதுவர் ஹட்ரூமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்திப்பதற்காக ‘தலைநகருக்கு வாங்கோ’ என்று 2009 தை மாதம் உங்களைக் கே.பி அழைத்த பொழுது, தாய்லாந்து தலைநகர் பாங்கொக் போய் அங்கிருந்தவாறு கே.பிக்கு தொடர்பெடுத்து, ‘நான் தலைநகருக்கு வந்து விட்டேன், ஆனால் இங்கு எங்களின் ஆட்கள் ஒருத்தரையும் காணவில்லை’ என்று நீங்கள் சொன்னதும், அதைக் கேட்டு கே.பி தலையில் அடித்துக் கொண்டதும், அதனால் ஹட்ரூமுடனான அன்றைய சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதும் பலரும் அறியாத கதை தான்.

அப்படி எல்லாம் சாதனைகள் செய்து, கடைசியில் வன்னியில் உள்ள போராளிகளையும், மக்களையும் மீட்பதற்காக அமெரிக்கக் கடற்படையினரின் கப்பலை ஒபாமா அனுப்பத் தயாராக இருக்கிறார் என்று கபிலம்மானின் பையன்களிடமும், நடேசன் அண்ணையிடமும் கதையளந்து கடைசியில் முழு இயக்கத்தையுமே கழுத்தறுத்தவர் நீங்கள்.

இப்பொழுது என்ன வில்லங்கத்திற்காகப் பிரித்தானியத் தடையைக் கையில் எடுத்துள்ளீர்களோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகின்றது. உங்கள் நடவடிக்கைகளால் கடைசியில் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இன்னும் இறுக்கமடையப் போகின்றது.

எப்படியோ, அது தானே உங்களின் இலக்கு? அது தானே உங்களை இயக்கும் இந்திய உளவுத்துறையின் இலக்கும் கூட? திட்டமிட்டு இயக்கத்தின் தலையில் மிளகாயை அரைத்து, இயக்கத்திற்கு எதிராக சர்வதேச சமூகத்தைத் திருப்பி விட்டுக் கடைசியில் இயக்கத்தை நம்ப வைத்துக் கழுத்தறுத்து அழித்த சாணக்கியரான உங்களுக்கு இது என்ன பெரிய விடயமா?

சரி, அடுத்த கட்டமாக தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை முடக்க நிலையிலும், மாயையிலும் வைத்திருப்பதற்கு எப்படியான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

தயவு செய்து விரிவான பதில் போடவும்.

இப்படிக்கு,
அம்மான்.

பிற்குறிப்பு: 18.05.1983 அன்று சிறீலங்கா அரசாங்கம் நடாத்த இருந்த மாநகர சபைத் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு எமது இயக்கம் விடுத்த அழைப்பை நிராகரித்து உங்கள் தந்தை விசுவநாதன் யாழ்ப்பாணத்தில் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டம் தளபதி சீலன் தலைமையிலான எமது போராளிகளால் கலைக்கப்பட்டது. அப்பொழுது முரண்டுபிடித்த உங்கள் தந்தையும் தாக்குதலுக்கு உள்ளானார். தளபதி சீலனை எமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்று தவறாகப் புரிந்து கொண்ட உங்கள் தந்தை, ‘என்னைப் பிரபாகரன் அடித்தார்’ என்று நீண்ட காலமாகக் கூறி வந்தார். அதற்காகத் தான் ஒட்டுமொத்த இயக்கத்தையும் காத்திருந்து பழிவாங்கினீர்களா? இதையும் உங்கள் பதில் கடிதத்தில் விளக்கவும்.