நிரந்தர வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்கள் எப்போது குடியிருப்பர்? - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உறையுள். அதுகூட வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற குறிப்பாக யுத்த சூழல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிரந்தர வீடு இல்லாது பெரும் அல்லல்படுகின்றனர். பாதிக்கப்படும் மக்களின் அவலங்களை கண்டுகொள்வதற்கு அரச அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ தயாரில்லை என்பது நிதர்சனம்.

கொழுத்திய கற்பூரத்தில் கும்பிடுவது போன்று கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜங்க அமைச்சர் வீடு திறப்பு விழா செய்தார். மாவட்டத்தில் நிரந்தர வீடுயின்றி அரசாங்கத்தனால் வழங்கப்பட்ட வீடும் பூர்த்தி செய்யப்படாது அரைகுறையாக உள்ள வீடுகளை கண்டுகொள்ளாது, மக்கள் எப்பாடுபட்டாவது ஒரு வீட்டைக்கட்டினால் அவற்றை திறப்பு விழா செய்து கொண்டாடுவதற்கு முன்னுக்கு நிக்கின்றார்கள்.

நாட்டின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒவ்வொரு பெயர்களை சூட்டிக்கொண்டு வறியவர்களுக்கான வழங்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், புதிய வீட்டுத் திட்டங்களையம் அறிமுகப்படுத்தி நிரந்தர வீடு ஒன்றைக் கட்டிக்கொள்ள முடியாதவர்களின் வீட்டுக்கான கனவை நனைவாக்கியது. ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் கனவு இன்னும் நிறைவேறவில்லை என்பது கவலையளிக்கிறது.

4

தேசிய வீடமைப்பு அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடத்துடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் எட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று ஐக்கிய தேசிய கட்சி அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சி என ஆட்சிகள் மாற்றம்பெற்ற போதிலும், மக்களின் நலன்கருதி ஏற்படுத்தப்பட்ட தேசிய கொள்கைக்கான வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக முன்னாள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மகிந்த சிந்தனைக்கு அமைவாக குறிப்பாக சசுனென் செவன தேசிய வீடமைப்பு நிகழச்சித்திட்டம் ஒரு கிராமதத்திலிருந்து பன்சாலைககும் பன்சாலையிலிருந்து கிராமத்திற்கும் என்ற தொனிப்பாருளை நிறைவேற்றிக்கொள்வதை நோக்கமாக்கக் கொண்டு சிறீலங்காவில் காணப்படும் 10210 பனச்சாலைகள் மற்றும் புண்ணிய தலங்களைச் சார்ந்து வாழ்கின்ற மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீடுகள் அமைத்து சிங்கள இனத்தவர்களுக்கு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதேபோன்று ‘ரணவிரு’ கிராமம் தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் பத்து இலட்சம் வீடுகளைக் கொண்ட 2011 ஜனசெவன வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தித் தொழிற்பாட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் போரில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கான இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத்திட்டங்கள் அனைத்தும் சிங்கள இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் சஜித் பிரேமதாச ‘அனைவருக்கும் ஒரு வீடு’ என்ற திட்டத்தை முன்மொழிந்தார். இதில் ‘செமட்ட செவண’ 50000 வீட்டுத்திட்டம், ‘செமட்ட செவண’ 50,000 வீட்டுத் திட்டத்துடன் தொடர்பான செவண கருத்திட்டம் ‘செமட்ட செவண’ மாதிரிக் கிராம 25,000 வீடுகள் புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறீலங்காவின் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட காலம் முடிவடைந்த நிலையில், 1 இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம், 10 இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம், 15 இலட்சம் குடும்பங்களுக்கான வீட்டு வசதிகள் வழங்கும் வேலைத் திட்டம் என பல வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இத்திட்டங்களினுடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவில் காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று, ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர ஏனைய 12 பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வறிய மக்களுக்கு வழங்குவதற்காக நிர்மாணிக்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 2020 ஜனவரியில் ஆட்சி மாற்றம் பெற்ற பின்னர் இத்திட்டத்திற்கான நிதியும் நிறுத்தப்பட்டது.

33

மாவட்டத்தில் இவ்வாறான திட்டங்களுடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் இன்று அரைகுறையில் காணப்படுகிறது. இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இடங்களில் ஒன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரம்படித்தீவு, முறுக்கன்தீவு, சாராவெளி போன்ற இடங்களில் வாழ்கின்ற மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 118 வீட்டுத்திட்டம் இன்று
வரைக்கும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இதில் பயனாளிகள் தெரிவு செய்வதில் கிராம சேவகரில் இருந்து பிரதேச செயலாளர் வரை பல மோசடிகள் இடம்பெறுகின்றன. அதுமாத்திரமல்ல பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது பல்வேறு குழறுபடிகள். குற்றங்களை தடுக்கும் பிரிவினரே தவறுகளை இழைக்கும் போது அதற்கு எதிராக மக்கள் எங்கு போய் முறையிடுவார்கள். அவ்வாறு அனைத்துத் தடைகளையும் மீறி உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றால், பயனாளிகள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கப்படுவார்கள்.

முதல்கட்டமாக இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ஊடாக பயனாளிகளின் பங்களிப்புடன் அத்திவாரம் போடுவதற்கு பணம் வழங்கப்படுகிறது. இரண்டாம் கட்டமான வேலையை தொடங்குவதற்கு வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றால் இன்னும் உங்களுக்கான பணம் வரவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். பணம் வந்துசேரும் என்ற நம்பிக்கையுடன், தொடங்கிய வேலையை எப்படியும் முடிக்க வேண்டும் என்பதற்காக கடன்பட்டு அல்லது தங்களிடமிருக்கும் நகைகளை அடகுவைத்து பணத்தைத் திரட்டி தங்கள் வீட்டைக்கட்டுவதற்கான நடவடிக்கையில் பயனாளிகள் ஈடுபடுகின்றனர்.

இரண்டாம் கட்டவேலை முடிந்த பின்புதான் பயனாளிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய பணம் வழங்கப்படவில்லை. கையிலிருந்ததையும் போட்ட பின்னர் எதுவும் இல்லாத நிலையில் பயனாளிகள் நடுக்கடலில் தத்தளிப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. அவ்வாறான நிலையில்தான் இந்தகிராமங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். இப்பகுதி கடந்த யுத்த காலங்களில் மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் சொத்துக்களை இழந்து, உயிர்களை இழந்து வாழ்ந்த மக்கள். இன்றும் கூலித் தொழில் செய்துதான் தங்கள் வயிற்றை கழுவுகின்றனர்.

இந்த இடத்தில் கடந்த 2019 ஆண்டு மிகவும் பரிதாபமிக்க செயற்பாடு இடம்பெற்றது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இறந்தவரின் உடலை வைப்பதற்கு ஒரு வீடுல்லை. சிறிய கூடாரம் ஒன்றை அமைத்துதான் உடலம் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவ்வாறு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமாத்திரமல்ல வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் இப்பகுதி வெள்ளப்பெருக்கு ஏற்படடு மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.

இப்பகுதி மக்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது மழைக்காலம் மீண்டும் ஒரு பெரும் அவலம் ஒன்றைச் சந்திக்க இப்பகுதிகள் உள்ளார்கள். அதற்குள் இவர்களின் நிரந்தர வீட்டில் வாழும் கனவு நிறைவேறுமா? இவ்வாறு பாதிக்கப்படும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மக்களின்  வாக்குகளினால் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளும் கவனத்தில் கொள்வதில்லை எனவும் இவர்கள் தங்கள் மனகுமுறலை வெளிக்காட்டுகின்றனர்.