ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 11 - கலாநிதி சேரமான்

சிறீலங்காவின் சீனக் காதலின் சூட்சுமம்

ஈழத்தமிழர் விவகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை 1983ஆம் ஆண்டு தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்தியா கொண்டிருந்தது என்பதை இப்பத்தியின் ஆரம்பத் தொடர்களில் குறிப்பிட்டிருந்தேன். இந்தியா என்ற நாட்டைப் பிரித்தானியர்கள் உருவாக்கிச் சென்ற நாள் முதல் அகன்ற பாரதக் கனவில் மிதக்கும் பாரதத்தின் கொள்கை வகுப்பாளர்களின் நீண்ட காலக் கனவாகத் திகழ்வது ஈழத்தீவை இன்னொரு இந்திய மாநிலமாக்குவது தான்.

இதற்கு இடையூறாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா விளங்கிய பொழுது தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்களையும், ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கி சிங்கள அரச இயந்திரத்தை ஆட்டம் காண வைப்பதற்கு இந்தியா முற்பட்டது. அதில் அது கணிசமான அளவு வெற்றியும் கண்டது எனலாம்.

ஆனால் அன்றைய காலத்தில் தமிழ்ப் போராளி இயக்கங்களைச் சுற்றி இந்தியா கிழித்திருந்த கோட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தாண்டிச் சென்று தமிழீழத் தனியரசை அமைக்கும் முனைப்புக்களில் இறங்கிய பொழுது, அதனை வைத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை மிரட்டி 29.07.1987 அன்று தனது ஆயுதப் படைகளைத் தமிழீழ தாயகத்தில் இந்தியா களமிறக்கியது. குள்ளநரி என்று பெயர் போன ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனாவிற்கு அக்காலகட்டத்தில் தமிழீழ தாயகத்தில் இந்தியப் படைகளை அனுமதிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அதே நேரத்தில் ஈழத்தீவின் வடக்குக் கிழக்கு மாநிலங்களில் இந்தியப் படைகள் காலூன்றுவதற்கு அனுமதித்தமைக்கான பிரதியுபகாரமாகத் தமிழர்களுக்கான சுயாட்சி அதிகாரங்களைக் கணிசமான அளவிற்கு வழங்காமல் தவிர்ப்பதற்கு ராஜீவ் காந்தியின் ஒப்புதலை ஜே.ஆர் பெற்றுக் கொண்டார். இதன் பிரதிபலிப்பாகவே உப்புச் சப்பற்ற பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறைப்பிரசவமாகப் பிறந்து, பிறந்த உடனேயே இறந்து போன பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் சொம்பி வடிவம் தான் இன்றைய மாகாண சபைகள். ஆங்கிலத் திகில் கதைகளிலும், திரைப்படங்களிலும் வம்பையேர்ஸ் எனப்படும் இரத்தக் காட்டேறிகளுக்கு அடுத்தபடியாகப் பிரசித்தபெற்ற அமானுசிய வடிவங்கள் தான் சொம்பிகள். இந்த சொம்பிகள் சாராம்சத்தில் இறந்து போன மனிதர்கள். இவற்றின் உடலில் உயிர் இருக்காது. பாரிசவாதம் வந்தது போல் சேடமிழுத்துக் கொண்டு தான் இந்த சொம்பிகள் நடக்கும். அப்படித்தான் ராஜீவ் காந்தியின் ஆசீர்வாதத்துடன் ஜே.ஆர். உருவாக்கிய மாகாண சபைகள் இருக்கின்றன.

4

இந்த மாகாண சபைகளுக்குப் பெரும்பாலான நாடுகளின் மாநில சுயாட்சிக் கட்டமைப்புக்களுக்கு இருக்கக் கூடிய சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் போன்றவை உள்ளன. ஆனால் இவ் அதிகாரங்களை மாகாணங்களில் வாழும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களோ, முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ கையாள முடியாது. மாறாக நாட்டின் அதிபரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு மட்டுமே இச் சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களைக் கையாளும் அதிகாரம் உண்டு. மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் ஒவ்வொரு நாளும் கூடிப் பேசலாம். விவாதிக்கலாம். வாக்குவாதப்படலாம். ஏன் தீர்மானங்களைக் கூட நிறைவேற்றலாம். ஆனால் அவை சட்டபூர்வ வடிவம் பெற வேண்டுமாயின் அதற்கு ஆளுநரின் அங்கீகாரம் வேண்டும். ஆளுநரும், அவரை நேரடியாக இயக்கும் நாட்டு அதிபரும் நினைத்தால் மாகாண சபைகள் எதையும் செய்யலாம். இல்லை எனில் கூடிக் கதைத்து விட்டு அவர்கள் கலைய வேண்டியது தான். இது தான் மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களின் நிலையும்.

நாட்டு அதிபர் நினைத்தால் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ஆளுநர் ஊடாகக் கையாளும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கலாம். இல்லையயன்றால் இலவு பார்த்த கிளி போல் மாகாண சபை உறுப்பினர்களும், முதலமைச்சரும், அமைச்சர்களும் தமக்கு என்றோ ஒரு நாள் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் கிடைக்கும் எனக் கனவில் மிதந்து கொண்டிருக்கலாம்.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் கையயழுத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 1.4 சரத்தை ஈழத்தீவின் வடக்குக் கிழக்கு மாநிலங்களை ஈழத்தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக வரையறுப்பதோடு, அதன் 1.5 சரத்து முழு நாட்டையும் பல்லினங்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும், பல மதங்கள் பின்பற்றப்படும் நாடாக குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியிலும் வடக்குக் கிழக்கு மாநிலங்களைத் தமது வரலாற்று வாழ்விடமாகக் கொண்ட ஈழத்தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண சபைகள் மூலம் எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது வரையறுக்கவில்லை.

இதனால் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் பொழுது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஏற்க மறுத்தார். தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையில் புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இது பற்றி விடுதலை என்ற நூலில் எழுதியிருக்கின்றார். 

இந்தியப் படைகளைத் தமிழீழ தாயகத்தில் களமிறக்க அனுமதித்தமைக்காக ஈழத்தமிழர்களின் உரிமைகளை ராஜீவ் காந்தி அடகு வைத்தார் என்பதற்கும், இந்தியாவின் படைபல மேலாதிக்கத்திற்கு ஜே.ஆர். அடிபணிந்தமைக்கான பிரதியுபகாரமாகத் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அதிகாரங்களைக் கணிசமான அளவிற்கு வழங்காமல் ராஜீவ் காந்தி தவிர்த்துக் கொண்டார் என்பதற்கும் வேறு எங்கும் ஆதாரங்களை நாங்கள் தேடத் தேவையில்லை.

ராஜீவ் காந்தியின் தாயாரான இந்திரா காந்தி அம்மையாரின் சிறப்புத் தூதுவரான ஜி.பார்த்தசாரதி அவர்களால் 1983ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனெக்ஸ் சீ எனப்படும் அதிகாரப் பரவலாக்க யோசனையைப் படித்துப் பார்த்தாலே இதற்கான ஆதாரத்தைத் திரட்டலாம்.

இலங்கைக் குடியரசின் இறையாண்மை, நில ஒருமைப்பாடு, ஐக்கியம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவை தவிர்ந்த ஏனைய சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் மாநில சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பார்த்தசாரதியால் சமர்ப்பிக்கப்பட்ட அனெக்ஸ் சீ திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத் திட்டத்தில் ஆளுநர் என்ற பதவிநிலை இருக்கவில்லை. மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநில சபை உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர் மற்றும் அவரின் கீழ் இயங்கும் அமைச்சர்கள் ஆகிய பதவிநிலைகள் மட்டுமே இத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்தோடு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்கான கணிசமான அதிகாரங்களையும், வரியிறுப்பு அதிகாரங்களையும் மாநில சபைகளுக்கு வழங்கும் அதிகாரத்தையும் இத் திட்டம் கொண்டிருந்தது.

இவை தவிர இலங்கை ஆயுதப் படைகளில் தமிழ் மக்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவமும், ஒவ்வொரு மாநிலங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர், அம் மாநிலங்களில் வாழும் இனங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றும், இவற்றோடு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்கள், காணிப் பகிர்வுகள் போன்றவை மாநிலங்களின் இனப்பரம்பலைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் இத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்து.

அதாவது இந்திரா காந்தி அம்மையாரின் ஆசீர்வாதத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டுத் தான் ஜே.ஆரின் உப்புச் சப்பற்ற பதின்மூன்றாம் திருத்தம் என்ற மாகாண சபைத் திட்டத்திற்கு அன்று ராஜீவ் காந்தி பச்சைக் கொடி காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் அடிநாதமாக விளங்கும் தமிழ்த் தாயகம், தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசத்தின் தன்னாட்சியுரிமை ஆகியவற்றைப் பார்த்தசாரதியின் தீர்வு யோசனை பிரதிபலிக்காத பொழுதும், இந்தியாவின் மாநில அரசுகள் கொண்டிருக்கும் அதிகாரங்களுக்கு ஒப்பான அதிகாரப் பரவலாக்கத்தைத் தமிழர்களுக்கு வழங்கும் திட்டத்தை அது கொண்டிருந்தது என்பது மறுப்பதற்கில்லை.

அப்படிப்பட்ட ஒரு அதிகாரப் பரவலாக்கத் திட்டத்திலிருந்து பல படிகள் கீழிறங்கிப் போய் ஜே.ஆரின் சொம்பித் தீர்வுத் திட்டத்திற்கு ராஜீவ் காந்தி இணங்கினார் என்றால் அதற்குக் காரணம் இருந்தது. அன்று இந்தியாவின் வைரி நாடுகளாக விளங்கிய அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் ஒட்டியுறவாடிக் கொண்டிருந்த சிறீலங்கா அரசாங்கத்தையும், ஈழத்தீவையும் தமது ஆதிக்க வலயத்திற்குள் கொண்டு வருவதற்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடகு வைப்பதே ஒரே வழி என்று அன்று ராஜீவ் காந்தி கருதியது தான் அக் காரணம்.

இப்பொழுதும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அதைத் தான் இந்தியா செய்கின்றது. இனியும் அதைத் தான் இந்தியா செய்யப் போகின்றது. 05.12.2002 அன்று மேற்குலகின் அனுசரணையுடன் ஒஸ்லோவில் சமஸ்டித் தீர்வை ஆராய்ந்து பார்ப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகளும், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் இணங்கிய பொழுது அதைத் திரைமறைவில் இந்தியாவே எதிர்த்தது. அப்பொழுது அதை ஆட்சேபித்துக் கருத்து வெளியிட்ட அன்றைய சிறீலங்கா அதிபர் சந்திரிகா அம்மையாரின் வலது கையான லக்ஸ்மன் கதிர்காமர், சமஸ்டி ஆயினும் சரி, கூட்டுச் சமஸ்டி ஆட்சியாயினும் சரி, இந்தியாவின் அனுமதியற்ற எந்தத் தீர்வும் நடைமுறைக்கு வராது என்று அடித்துக் கூறினார். அப்படியே பின் நடந்தது.

அதன் பின்னர் 25.07.2006 அன்று மாவிலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா படைகளுக்கும் மத்தியில் நான்காம் கட்ட ஈழப் போர் வெடித்த பொழுது, பதின்மூன்றுக்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைத் (பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலானது) தமிழர்களுக்கு ராஜபக்ச அரசாங்கம் வழங்க வேண்டும் என்று அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறி வந்த பொழுதும், அதற்கான அர்த்தம் என்னவென்று அவர் கூறவுமில்லை: அதனை செயற்படுத்துவதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் இந்தியா எடுக்கவுமில்லை.

ஏன் யுத்தம் முடிந்த பின்னர் கூட இதற்கான காத்திரமான முயற்சிகள் எவற்றிலும் இந்தியா ஈடுபட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதானால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறீலங்கா அரசாங்கம் அழித்தமைக்கான பிரதியுபகாரமாகத் தமிழர்களுக்கான சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வு வழங்கப்படுவதை வலியுறுத்துவதை இந்தியா கைவிட்டுள்ளது எனலாம். அதனால் தான் பதின்மூன்றுக்கு அப்பால் என்று பேசுவதைக் கைவிட்டுக் கழுதை தேயந்து கட்டெறும்பான கதையாக இப்பொழுது பதின்மூன்றை அமுல்படுத்துவது பற்றி இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அடிக்கடி கருத்து வெளியிடுகிறார்.

அதாவது இந்தியாவின் பனிப் போர்க்கால வைரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடன் ஜே.ஆர் ஒட்டியுறவாடிய இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய மாநிலங்களுக்கு ஒப்பான மாநில சபைகளை உருவாக்குதில் தொடங்கிய ஈழத்தமிழர்களுக்கான இந்தியாவின் அரசியல் தீர்வு முயற்சி, இந்தியப் படைகளைத் தமிழீழத்தில் ஜே.ஆர். அனுமதித்த ராஜீவ் காந்தியின் ஆட்சியில் உப்புச்சப்பற்ற மாகாண சபைகளாகத் தரம் குறைந்து, பின் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த மன்மோகன் சிங்கின் ஆட்சியில் சற்றுச் சுரத்தை உயர்ந்து பதின்மூன்றுக்கு அப்பாலான கோசமாக எழுந்து, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டகடந்த பதினொன்றரை ஆண்டுகளில் பதின்மூன்றை அமுல்படுத்துவதில் மேலும் தரம் குறைந்துள்ளது. இப்பொழுது இந்தியாவின
தும், அதன் காவலனாக விளங்கும் அமெரிக்காவினதும் வைரி நாடாக வளர்ந்து வரும் சீனாவுடன் ராஜபக்ச சகோதரர்கள் ஒட்டியுறவாடும் பின்புலத்தில், சிறீலங்காவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மேலும் அடகு வைக்க இந்தியா தயங்காது.

அதாவது, எந்த அளவிற்குச் சீனாவின் பக்கம் சிறீலங்கா சாய்கின்றதோ, அந்த அளவிற்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இந்தியா அடகு வைக்கும். இதைத் தெரிந்து தான் சீனாவின் பக்கம் சாய்வது போன்று சிறீலங்கா நாடகமாடுகின்றது என்றே கொள்ள வேண்டியுள்ளது.  

(தொடரும்)