இந்து சமுத்திரத்தின் ஆதிக்கப் போட்டியில் தமிழர்கள் எடுக்கவேண்டிய நிலையயன்ன? - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனித்துள்ள நிலையில், தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் அடையாளத்தை அழிக்கும் செயற்பாடுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இருந்து தங்களை மீட்பதற்கு யாரும் இல்லாத கையறு நிலையில் தமிழர்கள் துயரடைந்திருக்கின்றனர். யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஈழ தேசம் கபளீகரம் செய்யப்படுகின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சென்று வெறுமனே கத்துவதால் எதையும் சாதிக்கப்போவதில்லை. அவர்கள் செயற்பாட்டில் இறங்கவேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறீலங்கா நாடாளுமன்றம் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என முடிவெடுத்த பின்னரே தமிழீழ தேசியத் தலைவர் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதை யாரும் மறக்க முடியாது. இது வரலாறு. ஆனால், மீண்டும் தமிழ் மக்களின் தற்போதைய தலைவர்கள் நாடாளுமன்றின் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கோதாவில் அதற்கு போட்டியிடுவதும் அங்கே சென்று குந்தியிருந்துவிட்டு வருவதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

தமிழர்களின் இலட்சியத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் உள்ளக அரசியலை விடுத்து புறச்சூழலை நாடவேண்டும். சர்வதேச நாடுகளிடம் இராஜதந்திர ரீதியாக தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டிய பெரும் பங்கும் பொறுப்பும் இந்தியாவுக்கே உண்டு என்பதை ஈழத்தமிழர்களுக்கான தலைவர்கள் என தம்மை கூறிக்கொள்பவர்கள் ஏன் உணர்ந்துகொள்கின்றார்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஒருவர்.

2222

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவின் சிறிலங்கா வருகை தொடர்பாக ஈழத்தமிழர்கள் கரிசனை கொள்ள மறந்துவிட்டனர் என்கிறார் மேற்படி மூத்த எழுத்தாளர். தமிழ்த் தலைவர்களின் போக்கு தொடர்பாக மேற்படி எழுத்தாளர் போன்று பலரும் கவலை அடைந்திருக்கின்றனர். இவர்களால் எதுவும் ஆகாது, நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடப்போகின்றோம் என்ற கவலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் தமிழ்த் தலைவர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுதான்.

உலகளாவிய ரீதியில் கொரோனா அச்சம் தலைவிரித்தாடுகின்றது. இலங்கைத் தீவையும் அது விட்டுவைக்கவில்லை. இப்போது இங்கேயும் தீவிரம் பெற்றிருக்கின்றது. அமெரிக்க அதிபர் கூட இதன் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றார். அதி தீவிர நெருக்கடியான நிலையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்கு வந்திருக்கின்றார் எனில் அப்பயணத்தின் முக்கியத்துவத்தை தமிழ்த் தலைவர்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கி வருவதால் அது அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எந்தளவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவரது திடீர் வருகை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்து சமுத்திர பரப்பை ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பதற்கு பல நாடுகள் பெரும் முயற்சி எடுத்த போதிலும் அதில் சீனா வெற்றிகண்டிருக்கின்றது என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் யுத்தத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்த சீனா, தமிழர்களை அழித்தொழிப்பதற்கு பெருந்தொகை ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. சீனாவின் அள்ளிக்கொடுப்பை பார்த்த இந்தியாவும் ஏட்டிக்கு போட்டியாக சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்கியது. ஏனைய நாடுகளும் அதிகம் உதவின. இதனால் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டது. தமிழீழம் என்ற அழகிய திருநாடு எம் கண் முன்னே சிதைந்தது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் எவரின் கை மேலோங்குவது என சீனா, இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியே தமிழீழ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏன் சிதைத்தோம் என இன்று இந்தியாவும் அமெரிக்காவும் சிந்திக்காமல் இருக்கும் என எவராவது நினைப்பார்களாயின் அது அவர்களின் படு முட்டாள்தனம்.

55இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சீனா உட்பட எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கோ இந்தியாவுக்கோ அச்சமாக இருக்கவில்லை. 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளது பலம் சிதைக்கப்பட்ட பின்னரே சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை விஸ்தரித்தது. அதிக வலுக்கூடிய கலங்கள் அதன் பின்னரே அங்கு கொண்டுவரப்பட்டன.

கடற்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சமூட்டும் நகர்வை சீனா தீவிரப்படுத்தியது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் எவர் தம் பலத்தை தக்கவைத்திருக்கின்றார்களோ அவர்களே உலக வல்லாதிக்க சக்தியாக பரிணமிக்க முடியும் என்பது புவி ஒழுக்க விதிகள் தொடர்பாக கற்றறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அதனாலேயே இந்தியாவுக்கு அப்பால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்து சமுத்திரத்தில் அதிக போட்டி ஏற்பட்டிருக்கின்றது. இந்தியா தன்னை வல்லரசு  என பீற்றிக்கொண்டிருக்கின்றதே தவிர, இராஜதந்திர ரீதியாக சீனாவைத் தோற்கடிப்பதற்கான முனைப்புக்களில் தோல்வியடைந்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.

சிறிலங்கா விடயத்திலும் தமிழ் மக்கள் விடயத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்திலும் இந்தியா எடுத்த நிலைப்பாடே இன்று அவர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் புலிகளின் ஆட்சியை நசுக்க எடுத்த நடவடிக்கைதொடர்பாக இந்திய அதிகாரிகள் கவலை அடைந்திருக்கின்றனர் என அவ்வப்போது கசியும் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

ஆக, ஈழத்தமிழர்களை வைத்து அமெரிக்கா - இந்தியா - சீனா ஆடிக்கொண்டிருக்கும் விளையாட்டினுள் ஈழத்தமிழர்களின் தலைவர்களும் புகுந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகியிருகின்றது. சீனா ராஜபக்¼rக்களின் நெருங்கிய சகா என்பதால் அவர்களுடன் பேச்சு நடத்துவது சாதகமாக இருக்காது எனில், இந்தியா - அமெரிக்காவின் உதவியை நாடுவதைத் தவிர ஈழத்தமிழர்களுக்கு வேறு வழி இப்போது இல்லை.

66

இந்தியாதான் எம்மை தோற்கடித்தது எனக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர், எடுத்ததிற்கு எல்லாம் இந்தியா றோ தமிழர்களை நசுக்குகின்றது எனக் கூறிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்த ராஜபக்ச கூட்டத்துடன் ஒரே மேசையில் இருந்து தமிழர் நலன்சார் விடயங்களை பேச முடியுமாயின், தமிழர்களை நசுக்கிய இந்தியாவுடன் ஏன் பேச முடியாது என தமிழ்த் தலைவர்களைப் பார்த்து தமிழ் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

சீனாவின் துரித வளர்ச்சி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உணரப்படுகின்றது. தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள், தமிழர் நலன்சார் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இந்தியா, அமெரிக்கா அதிகாரிகளை சந்திக்க முடியும்.

ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழத்தமிழர்களின் நெருக்கடிகள் தொடர்பாக எடுத்துரைக்க வேண்டும்.தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழினத்திற்கு அழிவுதான். தமிழர் தாயகம் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றது. ஆகப்பிந்திய அபகரிப்பாக, நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகின்றது. கடந்த வாரம் அங்கு சென்ற பெளத்த பிக்குகள் குழுவொன்று நீண்ட நேரம் அங்கு நின்று ஆய்வுகளை மேற்கொண்டது.

இங்கு பெளத் விகாரை அமைக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாளுக்கு நாள் தமிழர்தாயகம் சிங்கள மயமாகிக்கொண்டிருக்கின்றது. தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ்த் தலைவர்களின் ஒவ்வொரு நிமிட தாமதிப்பும் தமிழர்களின் அழிவுக்கு வழிகோலும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.