சீனா - ரஷ்யா தலைமைகளில் அசைக்கமுடியாத பெரும் சக்திகள் சிறீலங்காவும் புதிதாக இணையுமா? - வெற்றிநிலவன்

ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ எனும் அதிகார பலத்தை கொண்ட உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் தமக்கான நிரந்தர அதிபர்களை நியமித்துள்ளனர். இதன்படி இனி வரும் 15 ஆண்டுகளுக்கு தற்போது அதிகாரத்திலுள்ள சீன அதிபரும், 16 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபரும் நிரந்தரமாக அந்நாட்டின் ஆட்சிப் பதவியைத் தொடரவுள்ளனர்.

இதனைபோன்ற ஒரு அதிகார பலத்துடன் நிரந்தர ஆட்சி அமைக்கும் திட்டத்தை சிறீலங்காவின் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களும் வகுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், ரஷ்யா, சீனா போன்று இவர்களின் ஆட்சி நீடித்து நிரந்தரமாக நிலைக்குமா?

இவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சீனா

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி ´ ஜின்பிங் மேலும் 15 ஆண்டுகள் (2035 வரை) ஜனாதிபதி பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கொம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. 2012ம் ஆண்டு சீன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ´ ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022 இல் முடிவடைய இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவில் தேசிய மக்கள் கொங்கிரஸ் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் காணப்பட்ட தடைகளை நீக்கி, அதிபர் ´ ஜின்பிங் வாழ்நாள் அதிபராகத் தொடர அனுமதித்தது. இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தன் ஆயுள் முழுவதும் அவர் தான் இப்பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும் போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு மேலும் பதவி நீடிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. அக் கட்சியின் முடிவுதான் இறுதிமுடிவு. அக்கட்சியின் தலைவராக  ´ ஜின்பிங்பே இருக்கின்றார்.

சீனாவில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர் மவோ சேதுங். சீன விடுதலையின் தந்தையான இவர் 1976ம் ஆண்டு உயிரிழக்கும் போது வயது 82. இப்போது ஜனாதிபதி ´ ஜின்பிங் 82 வயது வரை ஆட்சியில் இருப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் ஆட்சியில் தொடர்ந்தால் சீனாவில் அதிக வயதுவரை ஆட்சி செய்தவர் என்ற பெருமையையும் இவர் பெறுவார். அத்துடன், சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மா சேதுங்கிற்குப் பிறகு அக் கட்சியின் அதிகாரமிக்க தலைவராகவும் ´ ஜின்பிங் வளர்ந்துள்ளார். ஜனாதிபதி பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலார் பதவி, இராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார்.

5

சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நான்கு நாட்களாக நடைபெற்றது. இதில் கொம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்திய குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சார்பில் மத்திய குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி ´ ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ´ ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அத்துடன் மிக முக்கியமாக, சீனா குறித்து அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளில் வலுத்துவரும் எதிர்ப்பு மனப்பான்மையை முறியடிக்க உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடார்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021- 2025 வரை) ஒப்புதல் வழங்கப்பட்டது. இது சீனா முன்னெடுக்கும் 14வது ஐந்தாண்டு திட்டம். இத்திட்டங்களின்படி, ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன ஜனாதிபதி ´ ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரியவந்துள்ளது.

ரஷ்யா

இதேவேளை, ரஷ்ய அதிபர் பதவியில், 2036ம் ஆண்டு வரை நீடிப்பதற்கு அந்நாட்டின் அதிபர் விளாடுமீர் புட்டின் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளார். ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவின் அசைக்க முடியாத சக்தியாக இவர் உருவெடுத்துள்ளார். விளாடுமீர் புட்டின் கொண்டு வந்த அரசியல் சாசன திருத்தத்துக்கு, நடந்த வாக்கெடுப்பில் 78 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்தன் மூலம் இன்னும் 16 ஆண்டுகளுக்கு அதாவது தனது 84 வயது வரைக்கும் ரஷ்யாவின் அசைக்க முடியாத பலம்மிக்க சக்தியாக விளாடுமீர் புட்டின் இருக்கப்போகின்றார்.

ரஷ்ய அதிபர் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர் இரு முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2000 முதல் 2008 வரையும் அதிபராக இருந்த புட்டின், அதன் பின் பிரதமராக பதவி வகித்தார். பின் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்து 2012ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்தார். பின்னர் 2018 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை 3வது தடவையாகத் தக்க வைத்துக் கொண்டார். இவரது பதவிக் காலம் 2024ல் முடிகிறது. அதன் பிறகு பதவியில் தொடர சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது.

எனவே, கடந்த ஜனவரியில் அரசியல்சாசன சட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதில் ரஷ்ய அதிபர் பதவிக்கால நீடிப்பு முக்கியமானது. மேலும் நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமிக்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்படும் வகையில் சீர்திருத்தங்களை அமைத்து சட்டங்களை தனக்கு சாதகமாக்கினார். நாடாளுமன்றத்தில் அசைக்கமுடியாத பெரும்பான்மை பலம் உள்ளதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் உடனடியாகக் கிடைத்தது. கடந்த யூன் மாதம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 77.93 வீதமான மக்கள் புட்டின் ரஷ்ய அதிபராக 2036ம் ஆண்டு வரை தொடர ஆதரவு அளித்துள்ளதாகவும், 21.6 வீதமானோர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையகம் அறிவித்து, புட்டின் 2036 வரை அதிபர் பதவியில் தொடர்வதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளதாக அறிவித்தது.

ஆனால் இந்த வாக்கெடுப்பு பொய்யானது என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்தன. ரஷ்யாவில் எதிர்க்கட்சி என்று சில கட்சிகள் இருந்தாலும் அதனை செயற்பட முடியாதளவிற்கே வைத்துள்ளனர். இதில் முக்கியமான எதிர்க்கட்சி ஒன்றின் தலைவராகவும் விளாடுமீர் புட்டினின் கடும் எதிர்ப்பாளராகவு அலெக்ஸி நவால்னிக்கு இருக்கின்றார். இவர் இந்த முடிவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இந்நிலையில்தான் இவர் மீது படுகொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ரஷ்யாவின் பாணியிலான நஞ்சு கொடுத்துக் கொல்லும் முயற்சி இவர் மீது மேற்கொள்ளப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் டோம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மொஸ்கோவுக்கு விமானம் மூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு பின்னர் கோமா நிலைக்கு சென்று உயிருக்குப் போராடி வந்தார். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நவால்னிக்கு ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நோவிசோக் என்ற நச்சுப் பொருள் இரகசியமாக அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு கோமா நிலையிலிருந்து மீண்ட நவால்னி, 32 நாள்களுக்குப் பிறகு மருத்துமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் விளாடுமீர் புட்டின் மீது கடும் எதிர்ப்பலையை தோற்றுவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆறு ரஷ்ய அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அந்த நபர்கள் பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சொத்துக்கள் இருந்தால் அவையும் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளாடுமீர் புட்டின் அலுவலகத்தைச் சேர்ந்த 2 உயரதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் 2 இணையமைச்சர்கள் ஆகியோருக்கே ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிறீலங்கா

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றகையுடன், சிறீலங்காவின் ஆட்சியை முழுமையாக தம் வசப்படுத்தும் நடவடிக்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் களமிறங்கிவிட்டார்கள். இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து இலங்கைத் தீவை நிரந்தரமாக தமது ஆளுகைக்குள் வைத்திருப்பதற்கான திட்டங்களையும் வகுக்கத் தொடங்கிவிட்டனர். அதன் ஒரு நடவடிக்கைதான் 20வது அரசியலமைப்பு திருத்த சட்டம். இந்தச் சட்டத்திற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதனை நிறைவேற்றுவதில் ராஜபக்ச ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நீதிமன்ற உதவியை நாடின. இறுதியில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்ப்புக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சிறீலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் 20வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஜனாதிபதியின் கைகளில் முழுமையாக அதிகாரம் குவிந்திருப்பதுபோல் தற்போது?இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சிறீலங்கா ஜனாதிபதியிடம் நிறைவேற்றத்தக்க அதிக அதிகாரங்கள் வந்து குவிந்துள்ளன.

ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமூலத்திற்கு முதலில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. சிறீலங்கா ஆட்சியை வழிநடத்தும் பெளத்த பேரினவாதத் தேரர்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். எனினும், 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று  20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிகளிலிருந்து 8 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்ததன் மூலம் இந்த வெற்றியை ராஜபக்ச ஆட்சியாளர்கள் பெற்றிருக்கின்றனர். அவர்களது வாக்குகள் இல்லையயன்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

மன்னராட்சிக்கு நிகரான வாய்ப்புக்களை இந்தச் சட்டமூலம் சிறீலங்கா ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் தான் விரும்பியதுபோன்று யாரையும் பதவியில் இருந்து தூக்கவும், அமர்த்தவும் முடியும். தான் விரும்பியதுபோன்று சட்டங்களை தனக்கு ஏற்றதுபோல் கோத்தபாயவினால் வளைத்தெடுக்கவும் முடியும்.

சர்வாதிகாரமும் கொம்யூனிசமும்ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உலகின் பொருளாதார வளத்தில் பலம்பொருந்திய நாடுகள். அவர்கள் யாரும் யாருக்கும் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையில் இல்லை. அந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளை அத்தனை எளிதில், வேறு நாடுகளால் முறியடித்துவிடவும் முடியாது.

ஆனால், பொருளாதார வளமுமின்றி, பலமுமின்றி உலகம் வழங்கும் கடன்களை மட்டுமே நம்பி நாட்டை வழிநடத்தும் நிலையில் இருக்கும் சிறீலங்கா ஆட்சியாளர்களால் நிரந்தரமான ஆட்சியைத் தக்கவைத்துவிட முடியுமா? புலியைப் பார்த்து பூனையும் தனக்கு சூடு வைத்துக்கொண்டது போன்றுதான் சிங்களப் பேரினவாதிகளின் இன்றைய நிலையும். தங்கள் கட்டுப்பாடுகளுக்கு வளைந்துகொடுக்க மறுத்தால், அதிகாரத்தில் இருந்து அவர்களை அகற்றுவதற்கு எந்த ஆயுதத்தையும் கையிலெடுக்கத் தயங்காது இந்த உலகம். இதற்கு கியூபா முதல் லிபியா வரை ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறான ஒற்றையாட்சி நாடுகளை இந்த உலகம் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளாகவே வரையறுக்கின்றன. சர்வாதிகாரம் என்பதற்கு இன்னொரு பெயர் கொம்யூனிசம் என்றும் கூறப்படுகின்றது.

‘கொம்யூனிசத்தில் இருந்து சர்வாதிகாரத்தையும், சர்வாதிகாரத்தில் இருந்து கொம்யூனிசத்தையும் பிரிக்க முடியாது’ என்பது உலகின் பொதுக் கருத்து. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உண்மையாகவே இருந்து வந்துள்ளது. லெனின் தலைமையில் ரஷ்யாவிலும், மாவோ சேதுங் தலைமையில் சீனாவிலும் மட்டுமல்ல உலகின் கொம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியில் இருந்த நாடுகள் அனைத்திலும் சர்வாதிகார ஆட்சிகளே நடைபெற்றன, இப்போதும் நடைபெறுகின்றன.

இதனால் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளை கொம்யூனிச நாடுகளாக பார்க்கின்ற நிலைமையும் இருக்கின்றது. சர்வாதிகாரிகள் தங்களை மன்னர்கள் போன்று எண்ணிக்கொண்டு, மன்னராட்சிக் கனவுலகில் மிதப்பதனால், தாங்கள் மட்டும்தான் மக்களை ஆளும் தகுதி பெற்றவர்கள், தாங்கள்தான் நிரந்தர ஆட்சியாளர்கள் என்று கருதிக் கொள்வதனால் ஏற்படும் விபரீதத்தின் முடிவு இது. மன்னராட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தாத வகையில், மக்களாட்சி என்ற பெயரில் இந்த அவலம் இப்போது உலகின் சில நாடுகளில் நிகழ்ந்தேறி வருவதுதான் கொடுமை. அவ்வாறான கொடுமைதான் சிறீலங்காவிலும் நடந்தேறியுள்ளது.  

20வது திருத்தச் சட்டத்தால் நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகரத் தொடங்கியுள்ளதெனவும், ஹிட்லர் ஆட்சி மலர்ந்துவிட்டதெனவும் சிங்களப் பேரினவாத சக்திகள் இப்போதுதான் அச்சப்படுகின்றன. எதிராகக் கத்திக் கூச்சலுமிடுகின்றன. கண்கெட்ட பின்னர் சூரியனை வணங்குவதுபோல்தான் இதுவும். அவர்கள் நினைப்பதுபோல் அத்தனை இலகுவில் இனி ராஜபக்ச ஆட்சியாளர்களை சிறீலங்காவின் அதிகாரங்களில் இருந்து அகற்றிவிடமுடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் நிரந்தரமாக ஆட்சியில் அமர்ந்திருக்க இந்த வல்லாதிக்க உலகம் அனுமதிக்குமா..?

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதுபோல் ராஜபக்ச ஆட்சியாளர்களால் நீண்ட காலத்திற்கு எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியாது. ஏமாற்ற முனைந்ததால்தான் உலகின் பல நாடுகளின் சர்வாதிகாரிகள் மிக மோசமான அனுபவத்தைச் சந்தித்தார்கள். இவ்வாறான சர்வாதிகாரிகளை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் சொந்த நாட்டு மக்களே அந்நிய நாடுகளுக்கு துணை நின்றார்கள் என்பதும் உலகறிந்த வரலாறு. இந்த வரலாற்றுப் பாடத்தை ராஜபக்ச ஆட்சியாளர்கள் மிக விரைவிலேயே படிக்கப்போகின்றார்கள் என்பதைத்தான் இலங்கைத் தீவிற்குள் நேரடியாக மோதிக்கொள்ளத் தொடங்கியுள்ள சீனா - அமெரிக்க முரண்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றன.