சர்வாதிகார நாடாக சிறீலங்கா மாறியது - ஆசிரிய தலையங்கம்

கடந்த வாரம் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அந்நாடு ஒரு சர்வாதிகார நாடாக மாற்றம் கண்டுள்ளது. இதுவரை சிறீலங்கா ஒரு சர்வாதிகார நாடாக இருந்ததில்லையா என்ற கேள்வி எழலாம். 1978ஆம் ஆண்டு அரசியல்யாப்பு முறையை மாற்றி, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்தபோதே அந்நாடு ஒரு சர்வாதிகார நாடாக மாற்றம் கண்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால், தற்போது சிறீலங்காவின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரங்களும் ராஜபக்ச என்ற குடும்பத்தவர்களின் கைகளில் மட்டுமே வந்தடைந்துள்ள நிலையில், அரசின் அதிகாரம் அத்தனையும் தனியயாருவரின் கைகளில் குவிக்கப்பட்டிருப்பதானது, சிறீலங்கா முழுமையான ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிட்டதையே உணர்த்தி நிற்கின்றது.

ராஜபக்ச ஆட்சியாளர்களின் இந்த நகர்வு தமக்கும் பாதகமானது என்பதைப் புரிந்துகொண்டு சிறீலங்கா எதிர்க்கட்சிகளும், பெளத்த மதவாதிகளும் எதிர்த்துக் குரல் எழுப்பியபோதும், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதை அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இத்தனைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ராஜபக்ச ஆட்சியாளர்கள் எதிரணியில் இருந்த 8 நபர்களை விலைக்கு வாங்கியே இதனைச் சாதமாக்கி, தமக்கான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு தங்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கிய சிங்கள மக்கள், இனி வரும் காலங்களில்தான் அதற்கான அறுவடையைப் பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் சிங்கள மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, இந்தச் சட்டமூலம் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போகும் பாதிப்பே முன்னரைவிட மிகமோசமானதாக எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது.

காரணம், நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டதே இலங்கைத் தீவை பெளத்த, சிங்கள தீவாக மாற்றுவதற்கான முன்னேற்பாடாகத்தான். இன்று ராஜபக்ச ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலமும் சிங்கள பெளத்த ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவே அன்றி வேறல்ல. அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் தமிழர்களின் தாயகக் கோட்பாடும், தன்னாட்சி உரிமையும் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்களும், சிங்களக் குடியேற்றங்களும் மிகமோசமாக இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படும்.

வெறும் பாதுகாப்புச் செயலராக இருந்துகொண்டே தமிழினத்தை அழிப்பதற்கு அத்தனை நாசகார வேலைகளையும் செய்தவர். இப்போது முழுமையான அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறான வெறியாட்டத்தைக் கோத்தபாய ஆடுவார் என்பது சொல்லித்தான் புரியவைக்கவேண்டும் என்பதல்ல.

இந்தப் புதிய சட்டமூலமானது ஒரு மன்னராட்சிக்கு நிகரான அதிகாரங்களை சிறீலங்கா ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. எவ்வாறு ஒரு மன்னர் எவருடையை கருத்தைçயும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தன் எண்ணம்போல் எதனை வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ, அதேபோன்ற ஒரு மகுடத்தைத்தான் இந்த 20வது திருத்தச்சட்டம் கோத்தபாயவின் தலையில் சூடியுள்ளது.

இந்த உலகத்தை மக்களாட்சியின் வழி நகர்த்திச் செல்வதற்கே மன்னராட்சி முறைகள் ஒழிக்கப்பட்டன. இன்று பூமிப் பந்தில் மன்னர்கள் இருந்தாலும், ஒருசில நாடுகளைத் தவிர இன்று உலகின் பெரும்பான்மை நாடுகள் மக்களாட்சி நாடுகளாகவே இருக்கின்றன, இயங்குகின்றன. ஆனாலும், நிரந்தரமாக ஆளுதல் எனும் மன்னராட்சிக் கனவுலகிலேயே சில நாடுகள் இன்னும் மிதக்கின்றன. சீனா, ரஷ்யா, மியன்மார், தாய்லாந்து போன்ற இந்த வரிசையில் இப்போது 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சிறீலங்காவும் இணைந்துகொண்டுள்ளது.

மன்னராட்சி என்பது இன்றைய உலகில் சர்வாதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது. சர்வாதிகார ஆட்சி என்பதற்கு கொடுங்கோன்மை ஆட்சி என்றும் அர்த்தம் உண்டு. சர்வாதிகாரம் இன்று உலகளவில் வெறுத்து ஒதுக்கப்படும் ஒன்றாகவும் இருக்கின்றது. இவ்வாறான கொடுங்கோன்மை மிக்க சர்வாதிகார ஆட்சிகளை அகற்றுவதே இன்றைய முற்போக்கான நாடுகளின் சிந்தனையாகவும், செயலாகவும் இருக்கின்றது.

ஜேர்மனியின் அடொல்ப் ஹிட்லர், இத்தாலியின் பெனிட்டோ முசோலி, லிபியாவின் முவம்மர் கடாஃபி, எகிப்தின் கோஸ்னி முபாரக், ஈராக்கின் சதாம் உசைன், கியூபாவின் பிடல் கஸ்ரோ, சிரியாவின் பrVர் அல் ஆசாத் என நீண்ட வரிசை கொண்ட சர்வாதி காரிகள் என வர்ணிக்கப்பட்டவர்கள் அழிக்கப் பட்டோ, அகற்றப்பட்டோ இருக்கின்றார்கள். இதில் பிடல் கஸ்ரோ, பrVர் அல் ஆசாத் போன்றவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும் முடியவில்லை என்பது வேறு. ஆனால், இவர்களையும் அகற்றுவதற்கோ அல்லது அழிப்பதற்கோ இந்த உலக வல்லா திக்கம் முயன்றுகொண்டிருந்தது, இன்னமும் முயன்று கொண்டிருக்கின்றது என்பது வர லாறு. சிரிய அதிபர் பrVர் அல் ஆசாத் அகற்றப்பட வேண்டும் என அமெரிக்காவும், மேற்கத்தேய நாடுகளும் அடம்பிடிப்பது அவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டித்தான்.

ஆனால், அதே சர்வாதிகாரப் போக்குடன் நகர்ந்துகொண்டிருக்கும் சிறீலங்காவிற்கு உதவி மேல் உதவிகளைப் புரிந்து சாமரம் வீசுவதும், அந்த ஆட்சியாளர்களை காப்பாற்றிவிடத் துடிப்பதும் மிகப்பெரும் முரண்தான்.