இது பவோலாவின் தாய் அல்ல, சந்திரனின் தாய்!

இந்திய இராணுவம் வெளியேறியபின் ஒருநாள் வரி உடையுடன் சந்திரனைக் கண்டபோது (கப்டன் வெண்
ணிலவன்)  ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பயிற்சி எல்லாம் முடித்துவிட்டாயா என்று கேட்டபோது, பலாலி இந்திய இராணுவப் படைத்தளத்தில் உடற்பயிற்சி எல்லாம் முடிந்து, இப்போது ஆயுதப் பயிற்சியும் முடிந்து
விட்டது என்றான்.

இந்திய இராணுவத்தின் பலாலி சிறைக்குள், போராளிகள் தினமும் இந்திய இராணுவத்திற்கும் தெரியாமல்  பயிற்சி பெற்றார்கள் என்பதை அவன் சொன்னபோது உண்மையில் புல்லரித்தது. கப்டன் சந்திரனைப் பற்றி இங்கு சொல்லும்போது அவனது தாயைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும். சந்திரனின் தயாரை அறியாதவர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கமுடியாது. அவரின் நடையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர் நடக்கத் தொடங்கினால் அவரது நடைக்கு ஈடாக மற்றவர்களால் ஓடித்தான் செல்லமுடியும். அவ்வளவு வேகமாக நடப்பார்.

இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்திரன், பலாலிப் படைத்தளத்தில் இருந்த இந்திய முகாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு சந்திரனின் தாயார் அடிக்கடி செல்வார். இத்தனைக்கும் சுமார் 10 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட அந்தத் தூரத்திற்கு அவர் நடந்துதான் செல்வார். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் அளவிற்கு கூட அந்தப் பெற்றோரிடம் வசதியில்லை. ஆனால் தாயகத்தை நேசித்த ஒரு பிள்ளை அவர்களிடம் இருந்தது.

அந்த முகாமில் சந்திரனுடன் வேறும் சில முக்கிய போராளிகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.  முகாமிற்கு அடிக்கடி செல்லும் சந்திரனின் தாயாரிடம் வெளியிலிருந்த போராளிகள் சில உதவிகள் கேட்டிருந்தார்கள். பிடிபட்டால் ஆபத்து என்பதை அறிந்தும், அந்த உதவியைச் செய்வதற்கு அந்தத் தாய் முன்வந்தார். சந்திரனுக்குக் கொண்டுபோகும் சாப்பாட்டுப் பாசல்களின் பேப்பர்களிலும், சவர்க்காரங்களுக்குள் துளையிட்டும் தேவையான விடயங்களும் முகாம் சிறைக்குச் சென்றடைந்தன. சிறைக்குள் இருந்த போராளிகளுக்கும் வெளியில் இருந்த போராளிகளுக்கும் இடையில் தகவல் பரிமாற்றங்கள் எந்தத் தங்குதடையுமின்றி நடந்ததற்கு சந்திரனின் தாயார் ஒரு முக்கிய காரணம்.

ரஷ்ய எழுத்தாளர் மார்ச்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்தபோது, அதில்வரும் பவோலாவின் தாயரைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோது முதலில் என் நினைவுக்கு வந்தவர் சந்திரனின் தாயார்தான். இப்படி எத்தனையோ தாய்கள் எங்கள் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்னமும் வாழ்கின்றார்கள்.

- நிலவன்