விடாது தொடரும்... விடுதலைக் கனவு!

சுளகு கொண்டு
புலியை விரட்டிய
கதையைக் கேட்டுப்
புல்லரிச்ச காலத்தில்
அடுப்படி தாண்டி
அவர்களின் உலகம்
இருந்ததா என்று
ஆரும் அப்போ
எண்ணியதே இல்லை
அடிமை எனச்
சொல்லாத வாழ்க்கை
அடிமைக்கு அதுவே
சொர்க்கம் என்றனர்

பாளாய்ப் போன
ஆதிக்க வெறிக்கு
சிறுபான்மை என்ற
இயலாமை மட்டுமே
இரையாக வேண்டும்
அடக்கி ஆழப்
பிறந்தவர் கூட
அடங்கிக் கிடந்த
காலம் அது...
வாங்கிக் கட்டியதை
வீட்டில் வந்து
கொட்டித் தீர்த்தனர்...
பார்த்தவன் ஒருவன்
பொங்கி எழுந்தான்

ஆயுதம் ஏத்திக்
காவல் இருக்கப்
புறப்பட்ட நேரம்
அவனின் மனதில்
அம்மாவும் அக்காவும்
கண்ணீர் விட்டனர்
தூக்கிப் போடு
அகப்பை என்றான்
வெற்றுக் கையில்
சுடுகலன் கொடுத்து
ஆதிக்க வெறியைச்
சுட்டுக் கொல்லெனப்
பயிற்சி கொடுத்துப்
பக்கத்தில் இருத்தி
அழகு பார்த்தான்

அடிக்க வந்தவன்
அடிவாங்கும் நிலை
அடக்க நினைச்சவன்
அடங்கிப் போனான்
கையை நீட்டியவன்
கும்பிட்டுக் குந்த
மண்ணோடு சேர்த்துப்
பெண்ணின் விடுதலையும்
வீரியம் கொண்டு
போரதைத் தொடுத்தது
விடுதலைப் போரில்
வித்துக்கள் பலது
விதைக்கப்பட்டது
மன்னாரில் பிறந்து
கோப்பாயில் விழுந்தது
முதல் வித்து
மாலதி அக்கா
அவளே இதுக்காய்
முகவரி எழுதினாள்...

அதனைத் தொடர்ந்து
சரிக்குச் சமனாக
எந்தக் களத்திலும்
இவர்கள் இன்றிக்
கனவு கூட
வரவே இல்லையே...
நந்திக் கடலும்
அமைதியாகவே
அன்று பார்த்ததை
இன்றும் மறக்காமல்
இதயத்தில் வைத்துப்
பூசிக்கும் காலம்
கார்த்திகை மாதம்
மண்ணுக்கு நிகராக
ஆணுக்குச் சமனாக
பெண்ணும் வந்தாள்
வரலாற்றை எழுதி
விடுதலை பெற்றதாய்
அறிவிக்க முன்னர்
அமைதியாகவே
அடங்கி விட்டனர்...

அத்தனை பேரும்
ஒன்றாய்ச் சேர்ந்து
ஒளியேற்றித் தொழுது
அடித்து எழுப்பினர்..
பாரடா ஊரையெனக்
கொதித்துப் போயினர்...
ஆதிக்க சக்திகள்
ஆட்டம் போடுதாம்
புதுமைப் பெண்கள்
பதுங்கிப் போனராம்
அடுப்படி மீண்டும்
அடைக்கலம் கொடுக்குதாம்
வன்கொடுமை கூட
வரம்பதை மீறி
வம்பு செய்யுதாம்
இதுக்காய்த் தான்
இத்தனை துன்பம்
சுமந்தோம் என்று
உலுப்பிக் கேட்டனர்...

என்ர மண்ணும்
அவர்கள் கண்ணும்
கண்ணீர் வடிக்க
அதனை எடுத்து
விற்பதற்காக
வந்து நின்றனர்
அரசியல் வாதியாம்
வெள்ளையும் சுள்ளையுமாய்
கதைச்சுப் பார்தனர்
விடுதலை வருமென
வாயால் வடைசுட்டு
வித்துப் பார்த்தனர்
எவரும் வாங்கியதாய்
காணவே இல்லை
இதயத்தில் இருப்பவர்
கார்த்திகை மாதக்
கடவுளாய் வந்து
காட்சி தந்தனர்...
மண்ணோடு சேர்த்துப்
பெண்ணுக்கும் இங்கே
விடுதலை வேண்டும்
நினைச்சுப் பார்க்கக்
கார்த்திகை மாத
நடுச்சாமக் கனவும்
கலைந்து போச்சே...

ஆனாலும் என்ன
அந்தக் காலம்
வருகின்ற வரைக்கும்
இந்தக் கனவும்
கலையாமல்த் தானே
என்றும் இருக்கும்
நினைச்சுப் பார்க்க
மண்ணோடு சேர்த்து
எந்தன் நெஞ்சும்
ஏக்கத்தோடுதான்
காத்துக் கிடப்பதாய்
எண்ணம் வந்தது
வந்த கனவுகள்
நிறைவேறும் நாள்வரை
விடாது தொடரும்...
விடுதலைக் கனவு

- றோய் (யோ்மனி)