என் பிள்ளையை நினைப்பதை யார் தடுப்பது? - உ.சாளின்

மாவீரர்தினத்தை தாயகத்தில் நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை மக்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.  சிதைக்கப்பட்ட கல்லறைகளை பற்றைகளால் நிறைந்து போயிருக்கும் துயிலுமில்லங்களை தாமாகவே சென்று தூய்மை செய்கின்றார்கள். இளைஞர்களும் இராணுவத்தால் இடிக்கப்பட்ட கல்லறைகளை தூக்கி நிமிர்த்தி அதற்கு எழுச்சியின் வடிவம் கொடுக்கின்றார்கள். தமிழின அழிப்பு குற்றவாளி கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகியிருந்தாலும், அதன்பின்னர் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகளை கருத்தில் எடுக்காது மக்கள் துயிலுமில்லங்களை நோக்கி செல்வது ஒரு எழுச்சியின் அடையாளமாக தான் இருக்க முடியும்.

கோத்தபாயவின் வருகைக்கு பின்னர் வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் உடனடியாகவே அதிகரித்திருக்கின்றன. இது தவிர இராணுவ கட்டமைப்பில் உடனடி மாற்றங்களும் கொண்டுவரப்படுகின்றது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அதிகாரத்தில் இருந்த இராணுவ அதிகாரிகள் மீள அதிகாரத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றார்கள். வடக்கில் உள்ள மாவட்ட படையதிகாரிகளும் விரைவில் மாற்றப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இந்த படை தரப்பின் திடீர் மாற்றம் எதோ ஒரு காரணத்துக்காக தான் இடம்பெறுகின்றது என்பதனை ஊகிக்க முட்கின்றது.

கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போதே வடக்கில் உள்ள இராணுவத்தின் முன்னாள் போராளிகளின் பெயர்விபரங்களை சரிபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர சட்ட வைத்திய அதிகாரி சிவரூபனின் கைது, என பல திடீர் கைதுகளையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டிருந்தது.

மேலும் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்தமை குறித்தும் இது வரை ஐந்து பேரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றது. ஐந்து மாதங்கள் கடந்து தற்போது மாவீரர் தினம் நடைபெறவிருக்கும் வேளையில் இந்த விசாரணை இடம்பெறுகின்றது என்றால், இந்த விசாரணையின் உள்நோக்கம் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இந்த விசாரணைக்கு கொழும்பு நாலாம் மாடிக்கு சென்று வந்த ஒருவர் கூறுகையில்,  ‘முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளையும் யுத்தத்தில் இறந்த தங்களுடைய பிள்ளைகளை நினைவு கூருவதற்காக கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினையும் கொண்டாடுகின்றனர். இவ்வாறான நினைவு நாட்களை கொண்டாடுவதற்கு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டு எங்களை அச்சுறுத்தி அவற்றை ஏற்பாடு செய்யாமல் தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றது. 

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கப்பலடிபகுதி தற்போது இராணுவத்தினரால் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தடைகளை கடந்த வருடம் நினைவு தினம் ஒன்றையும் செய்திருந்தோம், அது தொடர்பிலும் எங்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள். இந்த விசாரணையின் நோக்கம் மாவீரர் தினத்தை நாங்கள் முன்னின்று நடாத்துவதை தடுப்பதே உள்நோக்கம் என்று கூறினார்.

கோத்தபாய ஜானதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது நடைபெற்ற சம்பவங்கள் இவை, கோத்தபாய ஜனாதியானதும், திருகோணமலையில், மற்றும் முல்லைத்தீவில் படையினரின் வீதி தடைகள் அதிகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழமையாக மாவீரர் வாரம் ஆரம்பமாகின்ற போதே தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே நினைவு நிகழ்வுகள் நடைபெறுவது வழமை ஆனால் இம்முறை இது வரை எந்த வகையான நிகழ்வுகளும் நடைபெறவில்லை. அச்சம் காரணமாக யாழ்.பல்கலை மாணவர்களும் இதனை தவிர்த்திருக்கிறார்கள்.

வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தை அவ்வூர் மக்கள் துப்பரவு செய்து கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிசார் அதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறான அச்சமான ஒரு சூழலில் தான் மாவீரர் தினத்தை மக்கள் அனுஷ்டிக்க போகின்றார்கள். கடந்த வருடங்களின் போதும் இவ்வாறன அச்சுறுத்தல்கள் காணப்பட்ட  போதிலும் மக்கள் துணிந்து செய்திருந்தார்கள். ஆனால் இம்முறை ஜனாதிபதியாக இருப்பது 2009  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றவர்.

ஆயிரக்கணக்கான மக்களை காணாமல் ஆக்கியவர். நூற்றுக்கணக்கான இளைஞர்களை கடத்தி சுட்டு கொன்றவர். இவ்வாறான ஒருவர் மீதே தமிழ் மக்கள் அச்சம் கொள்கின்றார்கள். இந்த அச்சத்தை தேர்தலின் போதும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். எனினும் தங்கள் மாவீரர்களை அனுஷ்டிப்பதிலும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த வருடங்களை போன்றே இம்முறையும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் அடுத்துவருகின்ற நாட்களில் சிறிலங்கா இராணுவம் எவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க போகின்றது என்பது தெரியவில்லை. சிறீலங்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலை போராட்டமும், எங்கள் மாவீரர்களை நினைவு கூருவதும் தொடரும், எனது மகன் சாதரணமாக இறந்து போகவில்லை ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவு எய்தியவன், அவனை நினைவு கூறுவது தொடர்பில் நானும் எனது தேசமும் தான் தீர்மானிக்க முடியுமே அன்றி யாரும் தீர்மானிக்க முடியாது என்று அந்த தாய் கூறுகின்றார். இந்த தாயின் மனோ நிலையோடு தான் தமிழர் தேசம் இந்த முறையும் தன்னை உருவகித்து கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் போராடினார்கள், அவர்கள் மீண்டும் போராடுவார்கள்.