காலத்தைவென்ற நாயகர்களின் நினைவு சுமந்த மாதம் கார்த்திகை - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

காலத்தைவென்ற நாயகர்கள் எமது மாவீரர்களின் நினைவு சுமந்த இந்த கார்த்திகை மாதம் முழுவதும் தமிழர்களின் தேசிய மாதமாக அனுஸ்ட்டிக்கப்பட வேண்டும். என்ன நோக்கத்திற்காக அவர்கள் தமது உயிர்களை பிரிந்தார்களோ அவர்களை நினைப்பது அவர்களின் அர்ப்பணிப்பிற்கு மதிப்பளிப்பதாகும்.

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், விடுதலைப் புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரச்சாவடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக்கொண்ட அதேநாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. 1990ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது.

1995ம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27ம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன. 1991ல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ம் ஆண்டின் ஐப்பசி - கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள்.

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கெளரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின் சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகளினால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர் நாளான நவம்பர் 27ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

‘உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்,

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காதுஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்

அதை நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாழ்வோம்.


தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம்


எந்த நிலைவரும் போதிலும் நிமிர்வோம் உங்கள் நினைவுடன் வென்றிடுவோம்.’

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்போம் என்று உறுதியயடுத்துக்கொள்ளவும் வேண்டும். அவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கமுடியும்.