தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாவீரர் கல்லறை 1989ல் வீரச்சாவடைந்த போராளி போசனுடையது!

தமிழகத்தின் தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர் ஒருவரின் கல்லறை இருப்பது 2018ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு வாசலைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதிக்குச் சென்றபோது காற்றின் அசைவில் முட்புதர் செடிகளுக்கிடையே விடுதலைப் புலி என்ற வாசகம் பொறித்த கல்லறையைக் கவனித்துள்ளார். உடனே முட்செடிகளை அகற்றி படித்துள்ளார்.

அதில்,

தமிழீழ விடுதலைப் புலி போசன் நினைவு கல்வெட்டு.

மறைவு 27-06-1989

திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல்  
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)

நகர திராவிடர் கழகம்.தஞ்சாவூர்.

என்றிருந்துள்ளது.

^ù

அதை அவர் கண்டதும். அந்த ஊரில் வசிக்கும் தமிழர் நலப்பேரியக்கத் தோழர் ஒருவரிடம் மேற்கண்ட விடயங்களை விவரித்துள்ளார். உடனே தமிழர் நலப் பேரியக்கத்தோழர் இயக்குநர் மு.களஞ்சியத்திற்கு இதுபோன்ற ஒரு கல்லறை இருக்கும் செய்தியை சொன்னதும், மு.களஞ்சியம் அவர்கள் விமானம் பிடித்து உடனடியாக தஞ்சைக்கு சென்று அதனைப் பார்வையிட்டுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் நீண்டகாலமாக இருக்கும் இடுகாட்டின் பெயர் நாத்திகர் இடுகாடு. இந்த இடுகாட்டில் பட்டுக்கோட்டை அழகரி உள்ளிட்ட பலரின் கல்லறை உள்ளன. பல கல்லறைகளின் கல்வெட்டில் ஈ.வெ.ரா.பெரியாரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா அவர்கள் பல கல்வெட்டுகளை அவர் காலத்தில் திறந்துள்ளார் என்பது அக்கல்லறையை பார்க்கும் போது நமக்குத் தெரிகிறது. அந்த கல்லறையில்தான் மாவீரர் போசன் கல்லறையும் உள்ளது. ஆனால் பாரமரிப்பின்றி அடர்ந்த புதராக அக்கல்லறை காட்சியளிக்கிறது. பராமரிப்பின்றி கிடந்த போசன் கல்லறையை தானே இறங்கி சுத்தப்படுத்தி, மாவீரர் நாள் நிகழ்வை போசன் துயிலுமில்லத்தில் தொடங்குவதாக இயக்குநர் மு.களஞ்சியம் அறிவித்துள்ளார்.

4

இந்திய இராணுவம் தமிழின அழிப்பில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் போரில் காயமடைந்த போசன், மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையினருக்கு தகவல் தெரியவந்தமையால், போசனை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது.

இதை அறிந்த போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே அணிந்திருந்த சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவியுள்ளார். அக்காலகட்டத்தில் திராவிட கழகத்தினரால் அக்கல்லறை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. கிட்டத்த 29 ஆண்டுகளாக தஞ்சை மண்ணிலே மாவீரர் போசன் விதையாக உறங்குகிறார்.

இத்தனை ஆண்டு காலம் இப்படி ஒரு கல்லறை இருக்குமென்று யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கல்லறையின் முன்பாக 27ம் திகதி மாவீரர் நாளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்வுக்கு வழக்கும் போல் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. காரணம் மாவீரர் கல்லறையா? தஞ்சையிலா? என்று காவல்துறை, உளவுத்துறை விழித்துக் கொண்டது.

அவர்களின் முதல் நோக்கம், இந்த நிகழ்வை நடக்கவிடக் கூடாது தடுத்து விட வேண்டும். இரண்டாவது நோக்கம், இந்த கல்லறையை அழித்து மறைத்து விட வேண்டும். ‘அனுமதித்தால் அமைதியாக நடக்கும். அனுமதி மறுத்தால் கலவரத்தோடு நடக்கும்’ என்று இயக்குநர் மு. களஞ்சியம் காவல்துறையிடம் பேசியுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மாவீரர் நாளுக்கு முதல்நாள் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.