தமிழீழ விடுதலையை குறியீடு செய்து நிற்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தமிழீழ தேசத்தைத் தாண்டி சர்வதேசம் வரை வியாபித்து, தமிழ் மக்களின் உரிமைக் குரலை உயர்த்தி நிற்கின்றது. இந்த உயர்வுக்கும் தமிழர்களின் தலை நிமிர்வுக்கும் காரணமான காவிய நாயகர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதத்தில் நாம் கால் பதித்திருக்கின்றோம்.

சேர, சோழ, பாண்டியர்களுக்கு பின்னர், பண்டாரவன்னியன், எல்லாளன், சங்கிலியனுக்கு பின்னர் குக்கிராமத்து இனம் போன்று இருந்த தமிழினத்தை உலகின் மூலை, முடுக்கு எங்கும் அறியவைத்திருக்கின்றார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள்.உலகத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில், முப்படை கொண்டு, மரபுவழிப் போர் புரிந்தவர்கள் என்ற பெருமையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைநாட்டியிருக்கின்றனர்.

கடற்படை, தரைப்படை, விமானப்படை போன்ற முப்பெரும் படைக் கட்டமைப்புக்களுடன் தமிழீழத்தின் வான், கடல், தரைப் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். உலகின் சகல வல்லாதிக்க சக்திகளுக்கும் முகம்கொடுத்து, தனியயாரு விடுதலை அமைப்பாக, தனித் தேசமான தமிழீழத்தில் நின்று போராடிய பெருமைக்குரியவர்கள் புலிகள்.

தமிழனை அடிமைப்படுத்த நினைத்தவர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, அதற்கு முதுகெலும்பாக நின்று, எதிரிகளைக் கொன்று குவித்து, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடவைத்து மண்ணுக்குள் வித்தாகிப்போன மாவீரர்களே அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்கள்.

தமிழர்களின் விடுதலை வேட்கையை, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கும் அவர்களின் வேணவாவை உலகின் காதுகளுக்கு எடுத்துச் செல்ல, எடுத்துச் சொல்லக் காரணமாக இருந்தவர்கள் மாவீரர்கள். ‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணித்தார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆத்மீக அறைகூவலாக அமைந்துள்ளது’ என்ற தமிழீழ தேசியத் தலைவரின் கூற்று மாவீரர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.

உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன என்றார் தேசியத் தலைவர். இந்தக் கருத்து பொய்மை அல்ல. உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று உருவாகியதும் இல்லை. வளர்ந்ததும் இல்லை. நிலைபெற்றதும் இல்லை. மக்கள் ஆதரவைப் பெற்றதும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஏனைய சில இயக்கங்களைப் போன்று பொழுதுபோக்குக்காக, மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காக, சேர்ந்து குடித்துக் கும்மாளமடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது அல்ல. ரவுடித்தனம் செய்வதோ, ஹீரோயிசம் காட்டுவதோ இந்த இயக்கத்தின் நோக்கமாக இருக்கவில்லை.

அப்பளுக்கற்ற, யாருக்கும் விலைபோகாத, தமிழ் மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் விடுதலை ஒன்றையே தமது இலட்சியமாக வரித்துக்கொண்டது. தமிழ் மக்கள் அனுபவித்த வேதனைகள், அவர்களின் வலிகளை நேரடியாக பார்த்து உணர்ந்த, கேட்டு உணர்ந்த தலைவர், எமது மக்களின் வலிகளுக்கு காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்கும் அப்பால், தமிழர்களுக்கு பாதுகாப்பான ஒரு தேசத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்பித்தார்.

ஏற்கனவே, பல இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இளைஞர்கள், பொதுமக்கள், கல்விமான்கள், துறைசார் அதிகாரிகள் தங்களை இணைத்துக்கொள்வதற்கு தலைவரின் நேர்த்தியான செயற்பாடுகள் காரணமாக அமைந்தன. அந்தச் செயற்பாடுகளே எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு போராளிகளைத் தூண்டியது.

தமிழீழம் ஒன்றே இலக்கு என்ற தாரக மந்திரத்துடன் புலிகள் இயக்கம் பயணித்தது. அது சுகமான பயணம் அல்ல. தலைவர் உட்பட ஒவ்வொரு போராளிகளும் தமிழீழ விடுதலைக்காக கடினமான பாதைகளால் பயணித்தனர். உலகின் ஒப்பற்ற கெரில்லா இயக்கம் என்ற பெயரைப் பெற்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கெரில்லா இயக்கமாக இருந்தபோதே முதலாவது மாவீரனை இழக்கவேண்டி ஏற்பட்டது. 2 ஆம் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் என்ற போராளி முதன் முதலில் தமிழீழ விடுதலைக்காக களப்பலியானார். அவரது நினைவு தினமே மாவீரர் தினமாக உருப்பெற்றது.

புலிகள் கெரில்லா இயக்கமாக இருந்தபோது களப்பலியாகிய மாவீரர்களுக்கு உரிய மரியாதை அளித்தனர். பின்னர் மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக வளர்ந்த பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களை உருவாக்கி மாவீரர்களை விதைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை உலகம் வித்தியாசமானவர்களாக நோக்குவதற்கும், உலக மக்களின் பார்வையில் புலிகள் இடம்பிடிப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது மாவீரர்களுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை. உலகில் எந்தவொரு இராணுவமோ, விடுதலை அமைப்போ உயிரிழக்கும் தமது போர் வீரர்களுக்காக தனி இடம் அமைத்து அவர்களை விதைப்பதில்லை. அவர்களை நினைவுகூர்வதில்லை. அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதில்லை.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய மரபை உலகுக்கு அறிமுகம் செய்தனர். தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கு, அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி, நீண்டகாலப் போராளி, குறுகிய காலப் போராளி என்று வகைபிரித்துக் கூறாமல் அனைவருக்கும் மாவீரர் என்ற கெளரவம் வழங்கினர். அவர்களை விதைப்பதற்கு என தமிழர் தாயகத்தில் துயிலும் இல்லங்களை அமைத்தனர்.

தமிழீழ தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ், மாவீரர்களை நினைவுகூர தமிழீழ மாவீரர் தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. அது காலப்போக்கில் தமிழீழத்தின் தேசிய நிகழ்வாக பரிணமித்தது. உலகத் தமிழர்களை விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்ப்புக்கொள்ள வைத்தது.

மாவீரர்கள் காலத்தால் அழியாத காவியச் சிற்பிகள் ஆனார்கள். ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தில் மட்டுமே தமிழீழ தேசியத் தலைவர் கொள்கை விளக்க உரை ஆற்றினார். அந்த உரைக்காக உலகமே ஏங்கியிருந்தது. ஒரு மாவீரர் தினம் நிறைவடைந்தால் அடுத்த மாவீரர் தினத்திற்காக தமிழினமே காத்திருக்கும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் மெளனிக்கும் வரை தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி உலகில், தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் தமிழீழ மாவீரர் தினம் எழுச்சியாக அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர் தினம் என்றால் தமிழர் தேசம் புத்தெழுச்சி பெறும். எதிரியிடம் இருந்து தமிழ் மக்களையும் தமிழர் தேசத்தையும் காத்த அந்த வீரர்களை விதைத்த கல்லறைகளுக்குச் சென்று மலர்தூவி, தீபமேற்ற தமிழர் தேசமே தயாராகும்.

அந்த நாள், கார்த்திகை 27 இல், மாலை 6 மணி தொடக்கம் தலைவரின் உரை நிறைவடையும் வரை மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெறுவதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கும்போது மனங்கள் விம்மி அழும். மாவீரர்களைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின், எதிரியைச் சிதறடித்து உறங்கும் வீரர்களின் கல்லறைகளைக் கட்டி அழும் அந்த நொடிப் பொழுதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

மழைத் தூறல்களுக்கு மத்தியிலும் எரியும் தீபங்களின் ஒளியில் மாவீரர்கள் வந்து கதை பேசிச் செல்வதை அந்த இடத்தில் நின்றால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். அந்த மணித்துளியில், அங்கு நிற்கும் அனைவரின் மனங்களுக்குள்ளும் இனம்புரியாத உணர்வுகள் இளையோடும். அத்தனைபேரின் மனங்களும் விடுதலை நோக்கிய உறுதி எடுப்பதை பக்கத்தில் நிற்பவரே அறிந்துகொள்ள முடியாது. அனைவரும் வெளியே அமைதியாக ஆனால், உள் மனதில் ஆக்ரோசமாக நிற்பதை எழுத்துக்களால் வடிக்க முடியாது.

‘மாவீரர்கள், புனிதமான இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ என தேசியத் தலைவர் அடிக்கடி கூறுவார்.

மாவீரர்களின் தியாகங்களை, மாவீரர் தினத்தின் மகத்துவத்தை எமது இன்றைய இளைஞர், யுவதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாவீரர்களின் தியாகங்களை, அவர்களின் அர்ப்பணிப்பை, அவர்களின் வீர வரலாற்றை எதிர்காலம் மறந்துவிடக்கூடாது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் இருந்து அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிங்களப் படை இடித்து அழித்தது. கோப்பாய் உள்ளிட்ட சில துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களில் படைமுகாம்களைக் கட்டினர் சிங்களப் படையினர்.

உலகப் போர் விதிகளுக்கு முற்றிலும் மாறான விதத்தில் போர் செய்த சிங்களப் படை, அந்த விதிகளை, போர் மரபுகளை மீறி, போரில் ஈடுபட்ட வீரர்களின் கல்லறைகளுக்கு மதிப்பு, மரியாதை செலுத்தாமல் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டது.எனினும் சில துயிலும் இல்லங்கள் பற்றைகள் மண்டிக் காணப்பட்டன. அந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவாக்கப்பட்டுள்ளன. அங்கு இம்முறை மாவீரர்களுக்கு தீபமேற்றி வணக்கம் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சில அரசியல் கட்சிகள் தனித்தனியாக வணக்க நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன. ஆனால், அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு, அவர்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்காக வெயில், மழை, பனி, குளிர் என்று பாராமல் உணவை மறந்து, உறவுகளைத் துறந்து, உயிரைத் துச்சமென மதித்து, எதிரிக்கு முன் நின்று சமராடிக் காவியமானவர்களின் நினைவேந்தல் நேர்த்தியாக நடைபெறவேண்டும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கெளரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கும் மாவீரர்களும் அவர்களின் கல்லறைகளும் தமிழீழ விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. அந்தக் கல்லறைகளில் உறங்கும் வீரர்களின் இலட்சியக் கனவுகள் நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.