ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 12 - கலாநிதி சேரமான்

பிரித்தானியத் தடைநீக்க நாடகத்தில் இந்தியாவின் அரூப கரம்!

சிறீலங்காவைத் தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடகு வைப்பதற்கு ஒருக்காலும் இந்தியா தயங்காது என்று கடந்த தொடரில் குறிப்பிட்டிருந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் இந்தியா வலியுறுத்தியிருக்கின்றது.

ஆனாலும் இதனையிட்டு நாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனென்றால் தமிழீழ விடுதலைப் புலிகளை 28.02.2001 அன்று பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தமைக்குக் காரணமாக இருந்ததே இந்தியா தான்.

பிரித்தானியாவில் ஏறத்தாள 1978ஆம் ஆண்டிலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கி வந்துள்ளது. தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன் முதலாவதாக சயனைட் உட்கொண்டு வீரச்சாவெய்திய வீரவேங்கை பகீன் போன்றவர்கள் உட்படப் பல மூத்த போராளிகள் பிரித்தானியாவில் இருந்து இந்தியா போய் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் தான். ஆனாலும் அக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா தடை செய்யவில்லை.

1983ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கினி மினி கூலிப்படையைக் களமிறக்கி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்திற்கு அன்றைய பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சரின் அரசாங்கம் உதவி புரியத் தொடங்கிய பொழுது கூட தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானிய தடை விதிக்கவில்லை.

பிரித்தாளுவதில் பெயர் போன பிரித்தானியா, ஒரு புறம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது ஆயுதப் படைகளுக்கு உதவி புரிந்தவாறு, மறு புறத்தில் பிரித்தானியாவில் இருந்தவாறு நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபடுவதற்கு உதவுவதாகக் குற்றம் சுமத்திய சிங்கள அரசியல்வாதிகளும் உண்டு.

28.02.2001 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் விடயத்தில் பிரித்தானியாவின் கொள்கை மிகவும் விசித்திரமாகவே இருந்தது. தமது நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படும் வரை அவர்களுக்கு எதிராகப் பிரித்தானிய மண்ணில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்பது தான் 1980களில் பிரித்தானியாவை ஆட்சி செய்த மார்கிரட் தட்சர் அம்மையாரின் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதே நிலைப்பாட்டைத் தான் அவரின் முதிசம் சுமந்து பிரித்தானியப் பிரதமராகப் பதவியேற்ற ஜோன் மேஜரும் கைக்கொண்டார். அதாவது மார்கிரட் தட்சர் அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் தான் தளபதி கேணல் கிட்டுவால் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் நிறுவப்பட்டது.

10.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், பிரேமதாசா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து நான்காம் கட்ட ஈழப் போர் வெடித்த பொழுது இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னின்று மேற்கொண்டதும் பிரித்தானியா தான். இதற்காக தளபதி கிட்டுவுடன் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் பல சுற்றுச் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்கள். கொழும்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் சிக்கல் இருந்தால், இலண்டனில் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்யலாம் என்றெல்லாம் அன்று தளபதி கிட்டுவிற்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

கடைசியில் இதே பிரித்தானிய அரசாங்கம் தான் தளபதி கிட்டுவின் வதிவிட அனுமதியை நீடிக்க மறுத்து, அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலையும் தோற்றுவித்தது. அன்று தளபதி கிட்டு பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலைப் பிரித்தானியா தோற்றுவித்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு 1996ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையார் கோரிய பொழுது, மார்கிரட் தட்சர் அம்மையாரின் காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பாடிய அதே பல்லவியைப் பாடிய அன்றைய பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மல்க்கம் ரிப்கிண்ட், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்வது, அவர்கள் வெளிப்படைத் தன்மையின்றி இயங்கும் சூழலுக்கே வழிவகுக்கும் என்றார்.

இவ்வாறு நடந்து கொண்ட பிரித்தானியா, 2000ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியா பிரயோகித்த அழுத்தத்தை அடுத்தே 28.02.2001 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது. 09.10.1997 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளை பில் கிளின்ரனின் அமெரிக்க அரசாங்கம் தடை செய்த பொழுது கூட அதன் வழித்தடத்தைப் பின்பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா நடக்கவில்லை.

இத்தனைக்கும் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளின்ரனின் வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவபராகத் திகழ்ந்தவர் அன்றைய பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயர். அப்படிப்பட்ட ரொனி பிளேயரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ரொபின் குக் அவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு 2000ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்திய பொழுது, உடனேயே அதற்கான நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசாங்கம் இறங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரித்தானியா தடை செய்த பின்னர் தன்னால் பிரித்தானியாவில் இருந்தவாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் சமாதான முயற்சிகளில் ஈடுபடுவது சாத்தியமாகாது என்று தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எச்சரித்த பொழுது, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தமது தடை இருக்கும் என்று அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் பதிலளித்தார்கள்.

தாம் கூறியபடியே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்குப் பின்னரும் பிரித்தானியாவில் அவ் இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகப் பாலா அண்ணை இயங்குவதற்கு இடமளித்தார்கள். பாலா அண்ணையைக் கைது செய்யுமாறு சிங்கள இனவாதிகள் குத்திமுறிந்த பொழுதெல்லாம் கடைசி வரை அதனைப் பிரித்தானிய ஆட்சியாளர்கள் அசட்டை செய்யவில்லை. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுள்ள தடை என்பது கறையான் அரித்த புத்தகம் போன்றது.

இயங்கு நிலையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிறுத்திப் பதினொன்றரை ஆண்டுகள் எட்டி விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு 2000ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவை இந்தியா கோரிய பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிக அளவு நிதிப்பங்களிப்பு வழங்குவோராகப் பிரித்தானியத் தமிழர்கள் மாறியிருந்தார்கள். அந்த ஆண்டில் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களும், கனடாவில் வாழும் தமிழர்களும் வழங்கிய நிதியை விட அதிக அளவு நிதியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பிரித்தானியத் தமிழர்கள் வழங்கியிருந்தார்கள்.  அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு பிரித்தானியாவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் அழுத்தம் போட்டார்கள்.

அதன் விளைவாக கிழக்கு இலண்டன் கத்தரின் வீதியில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் முகவரி மல்லாவிக்கு மாற்றப்பட்டது. பிரித்தானியாவில் பொது இடங்களில் தமிழீழ தேசியக் கொடியைக் கொண்டு செல்லவோ, ஏற்றவோ முடியாத நிலை தோன்றியது. அதற்குப் பதிலாக வெறும் சிவப்பு, மஞ்சள் கொடிகளே பொது இடங்களில் பறக்க விடப்பட்டன. மாவீரர் நாள் என்ற பெயரில் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத நிலையில், ‘தேசிய நினைவெழுச்சி நாள்’ என்று மாவீரர் நாள் பெயர் மாற்றத்திற்கு உள்ளாகியது. பிரித்தானியாவில் களத்தில் பத்திரிகை வெளிவருவதும் நின்று போனது. இலண்டனில் தமிழீழத்தின் தூதரகம் என்று வர்ணிக்கப்பட்ட ஈழம் இல்லம் வெறிச்சோடிப் போனது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாகக் கருதப்பட்ட ஐக்கிய தமிழர் ஒன்றியமும் செயலிழந்தது.

இன்று பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்தாலும், தமிழீழ தேசியக் கொடியைப் பொது இடங்களில் கொண்டு செல்வதற்கும், பறக்க விடுவதற்கும் கெடுபிடிகள் இல்லை. மாவீரர் நாள் என்ற பெயரில் நினைவெழுச்சி நிகழ்வு நடத்துவதற்கும் அனுமதி உண்டு. அதை விட ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்குப் பிரித்தானியா அகதித் தஞ்சம் வழங்கியுள்ளது. பலர் பிரித்தானிய குடியுரிமையும் பெற்றுள்ளார்கள். இதே பிரித்தானிய அரசாங்கம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பின் பிரமுகரை 2007ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. அவரது வதிவிட உரிமையை இரத்துச் செய்து சிறீலங்காவிற்கு நாடுகடத்த முற்பட்டது. இன்றும் கூட பிரித்தானியக் குடியுரிமை பெற முடியாதவராகவே அவர் உள்ளார். அதே போல் 28.02.2001 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் இல்லத்தில் பணிபுரிந்த இரண்டு செயற்பாட்டாளர்கள் இன்றும் கூட பிரித்தானியக் குடியுரிமை பெற முடியாத நிலையிலேயே உள்ளார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கையாண்ட குற்றத்திற்காக யேர்மனியில் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் போராளி ஒருவர் பிரித்தானியா வந்து குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தான் தமிழீழவிடுதலைப் புலிகள் தொடர்பாகப் பிரித்தானியா கையாளும் நூதனமான கொள்கை.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்தாலும் சரி, நீடிக்கா விட்டாலும் சரி இவ்வாறான நூதனமான கொள்கையைத் தான் பிரித்தானியா கடைப்பிடிக்கப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால், தடையால் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு ஒரு வேளை நிவாரணம் கிடைக்கலாம். அதேநேரத்தில் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு அகதித் தஞ்சமும், குடியுரிமையும் வழங்கிய பிரித்தானிய அரசாங்கம் நினைத்தால் தமது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்களுக்குத் தடை நீக்கம் இன்றியே நிவாரணம் வழங்கவும் முடியும். அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானியாவில் உள்ள தடை கறையான் அரித்த நூல் போன்றது எனக் குறிப்பிட்டேன். அப்படியே பேசாமல் விட்டிருந்தால் கறையான் அரித்த நூல் போல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியத் தடையும் காலப் போக்கில் காணாமல் போயிருக்கும்.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது எதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வழக்கை அமெரிக்காவில் இருக்கும் விசுவநாதன் உருத்திரகுமாரன் கையிலெடுக்க வேண்டும்? அமெரிக்காவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஒரு கல்லைத் தானும் நகர்த்த முடியாத உருத்திரகுமாரன் எதற்காகப் பிரித்தானியத் தடையைக் கையிலெடுத்து நர்த்தனமாட வேண்டும்? அதாவது ‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாத ஒருவர் எதற்காக வானம் ஏறி வைகுண்டம் போக முற்பட வேண்டும்?’ இதற்கான பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என்று பிரித்தானியாவிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கையில் தான் உள்ளது.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? இது என்ன, மொட்டந் தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம் (இங்கு மொட்டந் தலை என விளிக்கப்படுவது ஒரு உவமையே தவிர, அது கடந்த பதினொரு ஆண்டுகளாகக் கனவுலகில் தமிழீழம் அமைத்து கானல்நீரில் காகிதக் கப்பலோட்டி வரும் உருத்திரகுமாரனின் தலைமுடி உதிர்ந்து போனது பற்றிய எள்ளிநகையாடல் அல்ல).

ஆனால் உண்மை அது தான். இன்றைய சூழலில் சிறீலங்காவைத் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் எந்தப் பிடிமானமும் இல்லை. அதேநேரத்தில் நீண்ட காலமாகவே இந்தியாவின் கைப்பாவையாக இயங்குபவர் உருத்திரகுமாரன். அவருக்கும் இந்தியாவின் உள்ளக உளவு அமைப்பான ஐ.பி. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எம்.கே.நாராயணனுக்கும் உள்ள நெருங்கிய உறவு உட்பட சிங் என்ற இந்திய இராசதந்திரியை இரகசியமாகப் பல தடவைகள் நியூயோர்க்கில் உருத்திரகுமாரன் சந்தித்தமைக்கான மின்னஞ்சல் ஆதாரங்கள் என இந்தியாவின் கைப்பாவையாக அவர் இயங்குவதைக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஈழமுரசு வெளிக்கொணர்ந்தமை வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அப்படிப்பட்ட உருத்திரகுமாரன் எடுத்திருக்கும் பிரித்தானியத் தடைநீக்க நாடகம் தான் சிறீலங்காவைத் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கு இப்பொழுது இந்தியாவிற்குக் கிடைத்துள்ள பிடிமானமாகும். தடை நீக்க வழக்கை உருத்திரகுமாரன் தொடுத்திருக்காவிடின், தடை அப்படியே இருந்திருக்கும். இந்தியாவிற்கும் சிறீலங்காவுடன் பேரம் பேசுவதற்குப் பிடிமானம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் தடை நீக்க வழக்கை உருத்திரகுமாரன் தொடுத்ததன் விளைவாக இன்று சிறீலங்காவின் அரசியல் வட்டாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீக்கப்பட்டு விடுமோ என்ற சலசலப்பு ஏற்பட்டு விட்டது. உடனே இது தான் சந்தர்ப்பம் என்று களமிறங்கியிருக்கும் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என்று பிரித்தானியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் சிறீலங்காவிடம் இந்தியா கூறும் செய்தி இது தான்: ‘உங்களுக்காகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடருமாறு பிரித்தானியாவிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். நீங்கள் கேட்ட பொழுதெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யாத பிரித்தானியா, நாங்கள் கேட்ட பின்னர் தான் 2001ஆம் ஆண்டு தடையைக் கொண்டு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என்று இப்பொழுது நீங்கள் கோரியிருந்தாலும் கூட, உங்களுக்காகத் தடையைப் பிரித்தானியா நீடிக்கப் போவதில்லை.

ஏனென்றால் நீங்கள் ஒரு சுண்டங்காய் நாடு. ஆனால் நாங்கள் சொன்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைப் பிரித்தானியா நீடித்தே ஆக வேண்டும். ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியிருக்கும் பிரித்தானியாவிற்கு தென்னாசியாவில் மிகப்பெரும் நாடாக விளங்கும் எங்களின் பரந்த சந்தை தேவைப்படுகின்றது. பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவில் உள்ள தங்களின் பரந்த சந்தையை இழப்பதற்குப் பிரித்தானியா விரும்பாது. இந்த விடயத்தில் உங்களுக்கு சீனா ஒரு பொழுதும் உதவாது. அப்படித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு பிரித்தானியாவிடம் சீனா கேட்டாலும் அதைப் பிரித்தானியா கணக்கில் எடுக்கப் போவதில்லை. ஏனென்றால் பிரித்தானியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் உள்ளது. ஆனால் எங்களின் விடயத்தில் அப்படி அல்ல. எனவே யாரின் பக்கம் நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.’ இது தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டாம் என்று பிரித்தானியாவிடம் இந்தியா கோரியிருப்பதன் சூட்சுமமாகும்.

இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கை என்ற பெயரில் விசுநாதன் உருத்திரகுமாரன் ஆடிய நாடகம், இந்திய உளவுத்துறையின் ஒப்ரேசன் சாணக்கியா 2.0 நடவடிக்கையின் ஓர் அங்கம் எனக் கூறின் மிகையில்லை.

இதை தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை விடயத்தில் பிரித்தானியாவில் இனிக் கட்டவிழப் போகும் சம்பவங்கள் பட்டவர்த்தனமாக்கும் எனலாம்.

(தொடரும்)