கொரோனாவைக் காரணமாக்கி மறுக்கப்படும் மாவீரர் நினைவேந்தல் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர்ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசிய தலைவர் அவர்களினால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

உலக நாடுகளில் இடம்பெற்ற போர் நடவடிக்கையின் போது போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். இவர்களை நினைவு கூறுவது மாத்திரமல்லாது, அவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவிப்பதும் விடுதலைப் போராட்டத்தில் மிகமுக்கியமான வரலாற்றுக் கடமையயன்பதை தேசிய தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர் தாயகமான வடகிழக்கில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும். அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

மாவீரர்களின் நினைவேந்தல் மாதமாக நவம்பர் மாதம் தொடங்கியதும் தென்னிலங்கையில் ஆட்சி செய்யும் பேரினவாத போர்க்குற்றங்களைப் புரிந்த சிங்கள ஆட்சியார்கள் தமிழர் தாகயப்பகுதியில் அதன் படைகளை ஏவிவிட்டு தமிழர்களுக்கு எதிரான நெருக்கடிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இன்றையகாலகட்டத்தில் உலகத்தை ஆட்டிவிக்கும் தொற்றுக் கிருமியினால் மில்லியன் கணக்கில் பொதுமக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் சிறீலங்காவிலும் அதன்தாக்கம் அதிகரித்துக் கொண்டுவரும் நிலையிலும் தென்னிலங்கையில் சில நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது. இந்தநோய்த்தாக்கத்தை காரணமாக வைத்துக் கொண்டு தாயகப்பகுதியில் தியாகிகளின் நினைவேந்தலை தடுப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த திட்டங்களை வகுத்துள்ளது.

வைரஸ் பரவலுக்கு முன்னரும் மாவீரர்களின் நினைவேந்தலை செய்வதற்கு கட்டுப்பாடுகளையும், அச்சுறுத்தல்களையும் விடுத்து தடுக்க முற்பட்ட பதிவுகள் உள்ளன. அந்தவகையில் இன்று நோய்த்தாக்கத்தின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்கு இதனை ஒரு துரும்பாக பயன்படுத்துவர். எவ்வாறாயினும், தென்பகுதியில் முக்கியமான நிகழ்வுகளை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான தமிழீழப்படைகளின் மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர். இந்திய படைகள் சிறீலங்காவில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனு"?டிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தற்பொழுது சிறீலங்காவின் அதிபராக பதவியேற்று இருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு தாயகப்பகுதியில் உள்ள துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ் மக்கள் செறிந்துவாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரத்தின் படி யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை காவல்துறை பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி,  எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறீலங்காவின் தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையில் யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், இவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு தென்தமிழீழத்திலும் நடைவெறவுள்ள மாவீரர்களின் நிழ்வுகளை தடுப்பதற்கு சிறீலங்கா காவல்துறை நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

சிங்கள அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை இனப்படுகொலையில் முடித்துவைத்து பதினொரு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப் புலி அமைப்பை தடை செய்த நாடுகள் மீள்பரீசிலனை செய்து அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கான முனைப்புக்களை முன்னெடுத்துள்ளது. இது சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல நெருக்கடி
களை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் இதற்கான முதற்கட்டத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவும் சில கசிவுகளை விட்டுள்ளது. இவ்வாறு உலக நாடுகள் புலிகள் மீதான தடையை மீள்பரீசிலனை செய்யும் கட்டத்திற்கு வந்துள்ளது. காரணம் இலங்கைத் தீவில் ஒரு மனிதப்படுகொலை இடம்பெற்றுள்ளதை மெதுமெதுவாக ஆராய முற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

அதுமாத்திரமல்ல, சிறீலங்காவில் ஆட்சிக்குவந்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலராக கடமையாற்றி இனப்படுகொலையை அரங்கேற்றிய ஒருவர் தற்போது நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் கோத்தாபாய ராஜபக்ச ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட சில சட்டதிட்டங்களை நிராகரித்துள்ளமை, சிறீலங்காவின் சீன சார்ந்த வெளிநாட்டுக் கொள்கைகள் போன்ற பல காரணங்களினால் உலக நாடுகள் சிறீலங்கா மீது அதிருப்தியைக் கொண்டுள்ளது.

எது எப்படியிருந்தாலும், எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு தமிழர்கள்  யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது. மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறவேண்டும். எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி மாவீரர் தின நிகழ்வை வழமைபோன்று நடத்த அணிதிரளவேண்டும்.