மாவீரர் நினைவேந்தல்கள் உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

விடுதலைக் கனலை நெஞ்சில் சுமந்து விடியலைத் தேடிப் புறப்பட்ட வீரக் குழந்தைகளை தமிழீழ தேசம்  நன்றியுடன் நினைத்து வணங்கும் மாவீரர் வாரத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றது. வையகத்தின் மடியில் துயிலும் வேங்கைகளின் வானுயர்ந்த வீர தீரங்களை போற்றிப் புகழும் நாள்களில் தமிழர்கள் பயணிக்கின்றனர். கொரோனா என்றகொடிய அரக்கன் ஆட்டிப் படைக்கின்ற போதிலும் தமிழ்க் குழந்தைகள் மாவீரத் தெய்வங்களை மனனம் செய்கின்றனர்.

தற்போதைய கொரோனா காலத்தைப் போல, போரும் அதன் வலிகளும் தமிழர் மனங்களை வாட்டி வதைத்து, அவர்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய போதிலும் அந்தப் போர்க்காலம் மிக உன்னதமானதாக இருந்தது. ஒருபுறும் உயிரிழப்புகள், சொத்தழிவுகள் நடைபெற்ற போதிலும் அக்காலம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொற்காலமாகவே இருந்தது. காரணம், தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன், அவர்களின் பாதுகாப்பில் இருந்தமையாகும். தமிழீழ தேசியத் தலைவரின் காலத்தில் வாழ்கின்றோம் என்ற பெருமையுடன் மக்கள் வாழ்ந்த காலம் அது.

தமக்காக களத்தில் போராடி வீரச்சாவடைந்த மாவீர்களின் வித்துடல்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தி அவர்களை உரிய மரியாதையுடன் விதைகுழியில் விதைக்கின்ற நிகழ்வுகளை மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதினர். அதை பெருமையாக உணர்ந்தனர். போருக்கு செல்லும் தமது மகனையோ கணவனையோ பெண்கள் வீரத்திலகம் இட்டு அனுப்புவதும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் போர் புரிந்தார்கள் எனக் கேட்டு மகிழ்ச்சியடைவதும் சங்க காலத்து பெண்களின் மரபு. ஆதித்தமிழரின் அந்த போர் மரபுகளை தமிழீழ மக்கள் அப்படியே பின்பற்றினார்கள் எனக் கூறினால் அது மிகையல்ல.

ஒரு போராளியைக் காட்டிலும் போரில் காவியமான மாவீர்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரே நாடு எனில் அது தமிழீழம் மட்டுமே ஆகும். உலகில் எத்தனையோ போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இலட்சக்கணக்கான போர் வீரர்கள் மடிந்திருக்கின்றார்கள். எனினும், அவர்களுக்கு ஆங்காங்கே ஒரு நினைவுச் சின்னங்களைத் தவிர வேறெதுவும் இல்லை.

ஆனால், துயிலும் இல்லங்களில் வீரர்களை உறங்கவைத்த ஒரே மக்கள் தமிழீழத்து தமிழர்கள்தாம்.  அறப்போரில் வீர மரணத்தை தழுவிக்கொண்ட எந்தவொரு மாவீரரின் வித்துடலையும் களத்தில் கைவிட்டு வராமல் அவற்றை சக புலி வீரர்கள் தமது தோள்களில் ஏந்தி வந்து உரிய கெளரவத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைத்த புனிதமான செயல் தமிழீழத்தில் மட்டுமே நடைபெற்றது. முதல் புலிவீரன் மடிந்த நவம்பர் 27 ஆம் திகதியை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தி அதை ஆண்டுதோறும் பெரும் எழுச்சியுடன் அனுட்டிப்பதும் தமிழீழ தேசத்தில் மட்டும்தான்.

உலகத் தமிழர் போற்றித் துதிக்கும் மாவீரர் நினைவு வாரம் தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது. தமிழீழ மக்களின் நிம்மதியான வாழ்விற்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தங்கள் இன்னுயிர்களை உவந்தளித்த அந்த புனிதர்களை நினைவுகூரும் நாள்களில் தமிழர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த அந்த நினைவுகளை சற்று மீட்டுவது தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்து தற்போது இளைஞர்களாக இருப்பவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போர் தொடர்பான வெளிப்படுத்தல் அவசியம். தமிழ் மக்களின், தமிழீழ விடுதலைப் புலிகளின், தமிழீழ தேசியத் தலைவரின் அதி உன்னத அர்ப்பணிப்புகள் தொடர்பாக இவர்களுக்கு எடுத்துரைப்பதும், அவர்கள் ஊடாக இதை அடுத்த சந்ததிக்கு கடத்துவதும் காலத்தின் கட்டாயம்.

‘எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு’ என தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போல தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய உண்மைகளும் தியாகங்களும் அடுத்த சந்ததிக்கு புனைவுகள் இன்றி கடத்தப்பட வேண்டும். தமிழீழ மாவீரர்கள் தொடர்பாக தமிழரின் அடுத்த சந்ததிக்கு தெளிவு இருக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது உலகின் ஏனைய நாடுகளில் நடைபெற்ற போர்களைப் போல அன்றி அசாத்திய துணிச்சல்களைக் கொண்டிருந்தது. அந்த துணிச்சல்களை நிகழ்த்தியவர்கள்தான் மாவீரர்கள். அவர்களின் தியாகங்களுக்க மதிப்பளித்து தமிழீழ தேசம் அவர்களைக் கெளரவப்படுத்தியது. நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ஏழு நாள்கள் தமிழீழ மாவீரர் நினைவு வாரம் என தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நாள்களில் தாயகம் எழுச்சிக்கோலம் பூண்டிருக்கும். தாயகத்தில் ஒவ்வொரு கிராமப்புறங்களில்கூட மாவீரர் நினைவுப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அப்பிரதேசத்தை சேர்ந்த மாவீர்களின் திருவுருவப்படங்களை வைத்து மக்கள் வணக்கம் செலுத்துவர்.

மாவீரர் நினைவுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடங்களும் வீதிகளும் தமிழீழத் தேசிய வர்ணங்களான சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு விடியல் மற்றும் மாலை வேளைகளில் அங்கு நீர் தெளிக்கப்பட்டு அப்பிரதேசம் எழுச்சிக்கோலம் பூண்டிருக்கும். மாவீர்கள் வணக்க பாடல்களும் தமிழீழ எழுச்சி கானங்களும் அங்கு ஒலித்துக்கொண்டிருக்கும்.

தினமும் அங்கு மாலை வேளைகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள் நடைபெறும். மாணவர்களும் இளைஞர், யுவதிகளும் போராட்டம் பற்றிய கவிதைகளை வாசிப்பதும், மாவீரர் புகழை எடுத்துரைப்பதும் அந்த நிகழ்வுகளில் அரங்கேறும். போராளிகளும் தளபதிகளும் பொறுப்பாளர்களும் அங்கு தமிழீழ விடுதலை தொடர்பான எழுச்சி உரைகளை ஆற்றுவர். போரில் நலிந்துபோயிருந்த மக்களுக்கு இந்த நிகழ்வுகளும் உரைகளும் புத்தெழுச்சியைக் கொடுத்தன. மாவீரர் நினைவு வாரத்தின்போது தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகளை இப்போது நடத்த முடியுமா என்ற ஏக்கமும் கவலைகளும் தமிழ் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. தாயகத்தில் கொலைகாரர்களான கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி அமைந்துள்ளமை தாயகத்தில் உள்ள தமிழர்களையும் கொரோனா தொற்றுநோய் தாக்கத்தால் புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டுள்ள முடக்க நிலையும் இதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

எனினும், எந்த தடை வரினும் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுட்டித்தே தீருவோம் என்பதில் தமிழீழ மக்கள் உறுதியாக இருக்கின்றனர். தாயகத்தில் ஆங்காங்கே மாவீரர்கள் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சிங்களப் படையினர் மற்றும் காவல்துறையினரின் அச்சுறுத்தல்கள், அராஜகங்களுக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள் புதுப் பொலிவு பெறுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் போன்றோர் நேரடியாக களத்தில் நின்று இப்பணிகளை முன்னெடுக்கின்றனர்.

இதே போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடர்ளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் துயிலும் இல்லங்களில் நின்று இப்பணிகளை முன்னெடுக்கின்றனர்.எனினும், 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்கு முடியுமா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு சிங்களக் காவல்துறையினர் தடைகளைப் போட்டனர். ஒவ்வொரு காவல்துறைப் பிராந்தியத்திலும் தேடித் தேடி நீதிமன்றங்கள் ஊடாக நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், இறுதி நாளில் தென்மராடசியில் நினைவேந்தலை முன்னெடுத்தது தமிழர் தரப்பு. இதேபோன்று 27 ஆம் திகதி எந்த தடைகள் வந்தாலும் ஏதோவொரு மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள் என்பதில் தமிழர் தரப்பு உறுதியாக இருக்கின்றது.

தாயக மக்கள் உறுதியாக இருப்பது போல, புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர் தமிழீழ மக்களும் உறுதியாக உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மாவீரர்களை பூசிக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் மக்களும் அமைப்புக்களும் காட்டும் ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கின்றது.

கொரோனா காரணமாக நடமாட்டங்கள் முற்றாக கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் தத்தமது வீடுகளில் மாவீரர்களை பூசிக்கத் தயாராகி வருகின்றனர். சிங்களப் படைகளுக்கு எதிராக தீரமுடன் போராடி காவியமானதமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்களை தாம் எப்படியாயினும் நினைவேந்துவார்கள் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர் என அறிய முடிகின்றது.

மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, அவர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்கள் ஆயிரமாயிரமாக எழுச்சி பெற்று எமது தேசத்தை மீட்பார்கள் என்ற தமிழீழ தேசியத் தலைவரதும் மக்களினதும் எண்ணப்பாட்டுக்கு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள மக்கள் செயல் வடிவம் கொடுக்கவிருக்கின்றனர். வீடுகளில் மாவீரர் தினத்தை அனுட்டிப்பவர்கள் அதை சமூக வலைத்தளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் வெளிப்படுத்துவது ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும். சிங்கள தேசத்திற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியமாக அமையும். புலம்பெயர் நாடுகளின் அரசுகளுக்கு தமிழ் மக்களின் உண்மைகள் புரியவைக்கப்படும்.

மாவீரர் தினம் என்பது ஆடம்பரத்திற்காகவோ, பகட்டுக்காகவோ செய்யப்படுவது அல்ல. அது தமிழ் மக்களின் உணர்வு. மாவீரர்கள் தமிழீழ தேசத்தின் சொத்து. அவர்கள் தமக்காக போராடவில்லை. சிங்கள தேசம் தமிழர்களை அழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக களமாடி மடிந்தார்கள். சிங்கள தேசம் கூறுவதைப் போன்று அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை விதிக்கவேண்டிய அவசியமே இல்லை என்பன போன்ற பல செய்திகளை உலக வல்லரசுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

இதனால், தாயகத்து மக்கள் துயிலும் இல்லங்களிலும், முடக்கப்பட்ட புலம்பெயர் தேசத்து உறவுகள் தமது வீடுகளிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாராகுங்கள். ‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அது ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியயழுப்பிவிடுகின்றது’ என்பது தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனை.

தலைவரின் கூற்றுப்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் மாவீரர் நினைவேந்தல்கள் உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் என நம்புவோம்.