வரலாற்றைப் பாதுகாப்போம் - ஆசிரிய தலையங்கம்

இது கார்த்திகை மாதம். விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்திற்காக தங்கள் உயரிய உன்னதமான உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் மகத்தான மாதம். முடியாது என்று தமிழன் எண்ணியிருந்த நிகழ்வையயல்லாம் முடியும் என்று சாதித்துக்காட்டிய மகோன்னதமான மாவீரக் கண்மணிகளின் மாதம்.

எப்போதும், கார்த்திகை மாதம் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்தபடியே கடந்து செல்லும். உலகங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் மாவீரர் நிகழ்வுகள் எழுச்சி கொள்ளும். தடைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடியே,

‘தாயக மண்ணிலும் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...

என்ற மாவீரர்களின் கல்லறைப்பாடல் ஒலிக்கும். ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பெரும் சக்தியாகவும் பலமாகவும் மாவீரர்கள் இருக்கின்றார்கள். மாவீரர் நாளென்பது தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சிகர நாளாக இன்று உருப்பெற்றுவிட்டது.

தமிழ்த் தேசியத்தின் இந்த எழுச்சியும், தமிழர்களின் ஒருங்கிணைவும் சிங்களப் பேரினவாதத்திற்கு எப்போதும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. 2009ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த எழுச்சியைச் சீர்குலைக்கவும், தடுத்து நிறுத்தவும் சாம, பேத, தான, தண்டம் என அனைத்து வழிமுறைகளையும் கையிலெடுத்தது. இதற்காகக் தன் கொலைக் கரங்களைக் கூட சிங்களப் பேரினவாதம் கடல் கடந்து பிரான்ஸ் வரையும் நீட்டியிருந்தது.

ஆனால், சிங்களப் பேரினவாதம் எண்ணியதுபோல் மாவீரர் நினைவுநாள் ஒன்றும் வலுவிழக்கவில்லை. அணைக்க அணைக்க மூசி எரியும் காட்டுத் தீயைப் போல, அது உலகெங்கும் வியாபித்து பற்றிப்படர்ந்துகொண்டே இருக்கின்றது. தாயகத்திலும் முன்னரைவிட எழுச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கடந்த ஆண்டில் விடுதலைப் புலிகள் இருந்த காலங்களில் நடந்ததைப்போன்ற மிகவும் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடந்தேறியதைக் காணமுடிந்தது.

ஆனால் இப்போது இலங்கைத் தீவு மீண்டும் இனப்படுகொலையாளர்களான ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் கைகளில் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் மாவீரர் நாளை தாயகத்தில் இனிவரும் நாட்களில் நினைவு கொள்வது, அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை உயிரச்சுறுத்தல் கொண்டதாகவே இருக்கும்.

அகிம்சை வழியில் போர் தொடுத்து, பன்னிரு நாட்கள் தன்னை நெய்யாக உருக்கி தமிழினத்தின் விடியலுக்கு ஒளி கொடுத்த ஒப்பற்ற தியாக தீபம் திலீபனையே நினைவு கொள்ளவதற்கு தடைவிதித்த ராஜபக்ச இனஅழிப்பாளர்கள், தங்கள் இராணுவத்துடன் போரிட்டு வீரச்சாவைடைந்த மாவீரர்களை நினைந்துருக விட்டுவிடுவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாததுதான். அதற்கான தடைகளை பல்வேறு வடிவங்களிலும் ஏற்கனவே அவர்கள் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால், எந்தத் தடைகளையும் தகர்த்தெறிந்து தங்கள் விடுதலைக்காக வீழ்ந்த பிள்ளைகளை தமிழ் மக்கள் நினைவு கொள்வார்கள் என்பது உறுதி. இருந்தபோதும், இம்முறை இந்நாளை உலகத் தமிழினம் ஒன்றுகூடி விடுதலை முரசறையும் நாளாக பிரகடனம் செய்யும் சூழலை இழந்து நிற்கின்றது. கொரோனா எனும் கொல்லுயிரி ஒட்டுமொத்த மனித இனத்தையும் வேட்டையாடி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் பொது முடக்கத்திற்குள் சிக்கியுள்ள நிலையில் தமிழினத்தின் எழுச்சிமிக்க ஒன்றிணைவு என்பது இந்த ஆண்டில் சாத்தியமற்றதாகியுள்ளது.

இந்த வேளையில் தமிழினமும் இந்த ஆண்டை மெளனமாகவே கடந்து செல்லவேண்டுமா? அல்லது மாற்றுவழிகளில் இந்த ஒன்றிணைவை சாத்தியப்படுத்துவதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இணைய வலைத் தளங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் உலகத் தமிழினம் இந்த நாளை எழுச்சிமிக்க நாளாக மாற்றியமைக்கும் அதேவேளையில், தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்கும் மாவீரர்களின் கனவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு காவிச் செல்லும் பெரும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தை சிங்கள தேசம் முழுமையாக கபளீகரம் செய்வதற்கு முனைந்து வருகின்றது. தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பது, பெளத்த விகாரைகளை நிறுவுவது, தமிழ் மொழியைச் சிதைப்பது என்பவற்றுடன், தமிழர்களின் வரலாற்றை மறைத்தும், புதிய வரலாற்றை தமிழர்களுக்களுக்குள் திணிக்கும் கைங்கரியத்திலும் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான நினைவுச் சின்னங்களையும் மாவீரர்களின் கல்லறைகளை இடித்தழித்து, தமிழீழத் தாயகத்தில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நடந்ததற்கான சிறிய தடயங்களைக் கூட விட்டுவைக்காமல் சிங்களப் பேரினவாதம் துடைத்தழித்திருக்கின்றது.

அத்துடன், தமிழீழப் போராட்ட நூல்கள், தமிழீழப் போராட்டக் காணொளிகள், ஒலிப்பதிவுகள், நிழற்படங்கள், ஆவணங்கள் என எவற்றையும் தமிழ் மக்கள் வசம் வைத்திருக்க முடியாதவாறு தடைகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி அவற்றைப் பேணிக் காத்துவிடாது தடுத்திருப்பது மட்டுமல்ல, இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழீழம் தொடர்பான, விடுதலைப் புலிகள் தொடர்பான அத்தனை காணொளிகளையும், ஒலிப்பதிவுகளையும், ஆவணங்களையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை அழித்துவிடுவதற்கான வழிகளையும் செய்துள்ளது. தொடர்ந்தும் செய்து வருகின்றது.

ஓரினத்தின் வரலாற்றை அழிப்பதென்பது அந்த இனத்தை அழிப்பதற்கு சமமானது. இந்தப் பாரிய இனஅழிவில் இருந்தும் தமிழர்களை மீட்டெடுக்கவேண்டிய பெரும் வரலாற்றுப்பணி தமிழர் கரங்களிலேயே தங்கியுள்ளது.

‘வரலாறு எனது வழிகாட்டி’ என்றவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். அடுத்து வரும் தலைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை, இந்த விடுதலைப் போராட்டத்தின் கண்கண்ட சாட்சிகளாக வாழும் இந்தத் தலைமுறையே செய்தாகவேண்டும். ஈழத் தமிழினத்தின் வரலாற்றைப் பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு இந்தத் தலைமுறையிடமே தங்கியுள்ளது.

இந்த வரலாற்றுத் தவறைத் தமிழினம் இழைத்தால் அடுத்து வரும் தலைமுறைகள் தவறான வரலாறுகளையே படித்தறியவேண்டிய அவலநிலை ஏற்படும்.

எனவே,

* தமிழர்களின் வரலாறுகளைப் பாதுகாக்க பலமான கட்டமைப்புக்களை தமிழர்கள் வாழும் நாடுகளெங்கும்  தமிழ் மக்கள் நிறுவவேண்டும்.

* வரலாற்றை எந்தத் திரிபுகளுமின்றி பதிவு செய்வதற்கும், தங்கள் வரலாற்று அனுபவங்களை ஆதாரங்களுடன் நூல்களாகவோ, காணொளி வடிவங்களிலோ மிக விரைவாகப் பதிவுக்கு கொண்டு வருவதற்கும் தமிழர்கள் உறுதிகொள்ளவேண்டும்.

* தமிழர்கள் தங்கள் வசமுள்ள ஈழத் தமிழர் தொடர்பான வரலாற்று நூல்களையும், ஆவணங்களையும் முடிந்தவரை இலத்திரனியல், காணொளி வடிவங்களாக மாற்றி, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும். முடிந்தவரை அவற்றை உலகெங்கும் உள்ள நூலகங்கள், ஊடகங்கள் மற்றும் ஆவணக் காப்பங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.

ஏற்கனவே போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் போரின் நினைவுகளும் தரவுகளும் நினைவுத் திரைகளில் இருந்து மறையத் தொடங்கிவிடும். அதற்கு முன்பாக இந்தப் பெரும் பணியைத் தமிழினம் செயற்படுத்தத் தொடங்கவேண்டும். தற்போதுள்ள நிலையில், வாழும் இந்தத் தலைமுறையால் அடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடியது இந்த வரலாறுகள் மட்டும்தான். இந்த வரலாறுகள்தான் அவர்களுக்கான எதிர்கால விடியலுக்கான  ஆதாரங்கள்.

‘வரலாற்றைத் தொலைத்த இனம் வரலாற்றில் வாழமுடியாது.’ இந்த மாவீரர் நாளில், ‘வரலாற்றைப் பாதுகாப்போம்’ என உறுதி எடுத்து, எல்லோரும் ஒன்றுபட்டு இதற்காக உழைக்க முன்வருவோம்.