ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை அமெரிக்க உறவைத் தடுக்கும் சதியா? - விவேகன்

கடந்த ஜனவரி மாதம் ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட, ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானி (Qassem Soleimani) ஈராக் தலைநகர் பக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டபோதே ஈரானுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையே போர் வெடிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஈரானை எப்படியாவது போருக்குள் இழுத்து அவர்களின் பல்லைப் பிடுங்கவேண்டும் என்பதற்கும் அப்பால், அவர்களின் பலத்தை முதலில் பீரட்சித்துப் பார்க்கவேண்டும் என்பது சில வல்லரசுகளின் பெரும் எதிர்பார்ப்பு. இதற்காக வலிந்துகட்டி ஈரானை போருக்குள் இழுத்துவிட ஈரானின் பரம வைரி நாடுகளான இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக முயன்றுவருகின்றன.

‘அமெரிக்காவானது வளைகுடாப் பிராந்தியத்தை தீப்பற்றி எரிவதற்குத் தயாரான தீப்பெட்டியாக மாற்றி வருவதாக’ ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவத் ஸரீப் கருத்து வெளியிட்டு சில மாதங்களுக்கு பின்னர்தான் குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதுபோன்று இந்தப் படுகொலை வளைகுடாவை மட்டுமல்ல அதனையும் கடந்து உலகளவில் போர்ப் பதட்டத்தை உண்டாக்கியிருந்தது. இரு நாடுகளும் போருக்கான தயார்படுத்தல்களையும் முன்னெடுத்தன. ஆனால், அவ்வாறு எவையும் நிகழ்ந்துவிடவில்லை.

pm

ஆனாலும் ஈரானை விடுவதாக இல்லை. ஏற்கனவே, பொருளாதாரத் தடைகளால் பலவீனமடைந்திருக்கும் ஈரானை வலுக்கட்டாயமாகப் போருக்கு இழுத்து, எப்படியாவது அந்நாட்டை பலமிழக்கச் செய்து, அதன் அணுஆயுத உற்பத்தியை தடுக்கவேண்டும் என்பது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பெரும் கனவாக இருக்கின்றது. அந்தக் கனவை அடைவதற்காக இப்போது இன்னொரு படுகொலையை ஈரானில் நிகழ்த்தியுள்ளது.

ஈரானின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அணு விஞ்ஞானியான மோசென் பக்ரிசடே (Mohsen Fakhrizadeh) என்பவர் ஈரானில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக? 2010 மற்றும் 2012க்கு இடையில் நான்கு ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த அணு விஞ்ஞானியின் படுகொலை மத்திய கிழக்கில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய நம்பிக்கைக்குரியவர் என்றும் கூறப்படுகின்றது. ஈரானிய பாதுகாப்பு அமைச்சின் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவரான மொசென் பக்ரிசடே, கடந்த 27ம் திகதி காரில் சென்றுகொண்டிருந்தபோதே குறிசூட்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

அணு ஆயுதங்களை உருவாக்குவதற்காக ஈரான் 1989ம் ஆண்டு தொடங்கி, 2003ம் ஆண்டு வரை செயற்பட்ட (2003ல் கைவிடப்பட்டது) ‘அமட்’ என்ற திட்டத்தின் தலைவராக மோசென் பக்ரிசடே இருந்தார். ‘திட்டம்-III’ என்றழைக்கப்
படும் அணுசக்தி திட்டத்துக்கும் அவர் தலைவராக இருந்தார். அந்தத் திட்டம் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான முயற்சி என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், அதனை ஈரான் மறுத்துவந்தது. இந்நிலையிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரை இலக்குத் தவறாமல் கொல்வதற்கு மேம்பட்ட கமெரா மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பனவற்றை பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைகோள் கட்டுப்பாட்டு ஸ்மார்ட்சிஸ்டம் பொருத்தப்பட்ட இயந்திர துப்பாக்கி மூலம் (Artificial intelligence and a machine gun equipped with a “satellite-controlled smart system) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் இராணுவத்தின் சிரேஸ்ட தளபதியயாருவரை மேற்கோள்காட்டி செய்தி சேவைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோசென் பக்ரிசடே படுகொலை செய்யப்பட்டவேளை பயங்கரவாதிகள் எவரும் அந்த பகுதியில் காணப்படவில்லை என ஈரானின் புரட்சிகர காவல்படையின் பிரதி தளபதி அலிபடாவியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. அணு விஞ்ஞானி தனது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவேளை நவீன கமெராவை பயன்படுத்தி ஆயுதமொன்று அவரை இலக்குவைத்தது என ஈரானின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இயந்திர துப்பாக்கி வாகனமொன்றின் மேல் பொருத்தப்பட்டிருந்தது. செய்மதி மூலம் அது இயக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்மதி மூலம் இயக்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து 13 துப்பாக்கி வேட்டுகள் எங்கள் விஞ்ஞானியை நோக்கி பாய்ந்தன என்றும் தெரிவித்துள்ள ஈரானின் இராணுவ அதிகாரி, விசேட செயற்கை நுண்ணறிவு நடவடிக்கையின் போது முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது காரில் 25 சென்றி
மீற்றர் இடைவெளியில் அருகில் இருந்த விஞ்ஞானியின் மனைவி காயமடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது தந்தையின் படுகொலை ‘உண்மையான ஒரு போர் போன்றது’ என்று கொல்லப்பட்ட மொசென் பக்ரிசடேவின் இரு புதல்வர்களும் கூறியுள்ளனர். அத்துடன், படுகொலை நடந்த நாளில் பக்ரிசாடேவின் பயணம் குறித்து அவரது பாதுகாப்பு குழுவினரால் எச்சரிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.

இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் மீது ஈரான் பகிங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. 2018ல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் பணிப்பாளர் மோசென் பக்ரிசடே என பகிரங்கமாக அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஈரான், அமெரிக்காவின் ஒப்புதலுடன் இந்த படுகொலையை இஸ்ரேல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

தங்களது அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசடே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி, அதற்கு தக்க பதிலடி வழங்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, இஸ்ரேல் அனுப்பிய கூலிப் படையினர்தான் விஞ்ஞானி மோசென் பக்ரிசடே படுகொலை செய்துள்ளனர். இதற்கு தக்க பதிலடி தருவோம். எனினும், இந்த விவகாரத்தில் அவசரகதியில் முடிவெடுக்க மாட்டோம். மோசென் பக்ரிசடே படுகொலை செய்யப்பட்டதால் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களில் இருந்து பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சரும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை, இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘த நியூயோர்க் ரைம்ஸ்’ நாளிதழும் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மோசென் பக்ரிசடேவின் படுகொலை ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனுக்கு, ஈரான் அணுசக்தி விகாரத்தில் சிக்கலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படுகொலைக்கு ஈரான் எதிர்வினையாற்றினால் அது அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் இதன் காரணமாக புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பிடோனால் ஈரானுடன் இணக்கத்தை ஏற்படுத்துவது கடினமாகிவிடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஈரான் அணுசக்தி ஒப்பந்ததில் அமெரிக்காவை மீண்டும் இணைக்கப் போவதாக ஜோ பைடன் கூறியிருந்தார். இதனை இஸ்ரேல் விரும்பவில்லை. அத்துடன், ஈரான் அணுக்தி ஒப்பந்ததில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு முன்னர் அதுதொடர்பாக வளைகுடா நாடுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சவூதி இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹானும் வலியுறுத்தியிருந்தார். வளைகுடா நாடுகளுடனும் ஆலோசனை நடத்தி, தங்களது கருத்துகளைக் கேட்ட பிறகே தங்களது முடிவை அமெரிக்கா முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய ஆலோசனைகளுக்குப் பிறகு ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால்தான், அந்த ஒப்பந்தம் நிலைத்து நிற்க முடியும்.

இதற்கு முன்னர் வளைகுடா நாடுகளுடன் ஆலோசிக்காமலேயே வல்லரசு நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன் விளைவாக நம்பிக்கையின்மை ஏற்பட்டது. மேலும், பிராந்தியம் சந்திக்கும் உண்மையான பிரச்னைகளை அந்த ஒப்பந்தம் அலட்சியம் செய்துவிட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.?

இவ்வாறு ஈரானுடன் ஜோ பிடோன் நெருங்குவதைத் தடுப்பதற்கு, இந்த விவகாரத்தில் அவருக்கு சிக்கலை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மோசென் பக்ரிசடே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். அதாவது, ஈரானுடன் அமெரிக்கா உறவை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக நடந்த படுகொலை இது என்கின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்கா அதன் போர் கப்பல்களை வளைகுடாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு ஆதரவாக இப் போர் கப்பலகள் அனுப்பப்படுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஈரான் விஞ்ஞானி கொல்லப்படுவதற்கு முன்பே போர் கப்பலை அனுப்பும் முடிவை அமெரிக்க எடுத்துவிட்டதாகவும், ஆனாலும் இது ஈரானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாகவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் தனது முன்னணி அணு விஞ்ஞானியைக் படுகொலை செய்ததற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கும் என்பதை உலக நாடுகள் பெரும் அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஈரானின் பதலிடி வளைகுடாவில் நெருக்கடியை ஏற்படுத்தினால், எண்ணைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஈரான் அவ்வாறெல்லாம் செய்துவிட முடியாதளவிற்கு அந்நாட்டைச் சுற்றி வளைத்து அமெரிக்கா தனது படை பலத்தால் பெரும் இராணுவ அரணை அருகிலுள்ள அனைத்து நாடுகளிலும் கட்டியயழுப்பி வைத்துள்ளது.