ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 13 - கலாநிதி சேரமான்

இந்தியாவின் சாணக்கியன்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை 18.05.2009 அன்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்த மே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவிடம் இருந்து செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதன் சாரம்சம் இதுதான்: ‘இது வரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நீங்கள் இயங்கி வந்தீர்கள். உங்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் காரணமாக அவ்வாறு நடந்து கொண்டீர்கள். வேறு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கொண்டிருந்த விசுவாசம் காரணமாக அவ்வாறு நடந்து கொண்டீர்கள். எது எப்படியோ, இது வரை காலமும் நீங்கள் முன்னெடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல். இனி அவ்வாறு நீங்கள் செய்ய முடியாது: செய்யவும் கூடாது. ஈழத்தமிழர்களுக்கு எப்படியான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பது இந்தியாவிற்குத் தெரியும். அதனை உரிய நேரத்தில், உரிய விதத்தில் நாங்கள் செய்வோம். எங்களை மீறி நீங்கள் எதைச் செய்ய முற்பட்டாலும் அது சாத்தியமாகப் போவதில்லை. ஏனென்றால் எங்களை விட்டால் உங்களுக்கு இனி யாரும் இல்லை.’

‘இது என்ன புதுக்கதையாக இருக்கின்றது?’ என்று வாசகர்களில் சிலர் நினைக்கக் கூடும்.

ஆனால் 20.05.2009 அன்று கொழும்புக்குப் பயணம் செய்த அன்றைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பொழுது இந்தச் செய்தியைத் தான் தெரிவித்திருந்தார்கள்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு சற்று அப்பால் சென்று தமிழ்நாட்டில் உள்ள அரை சுயாட்சி முறைக்குக் குறைவான தீர்வுத் திட்டம் ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் வழங்கினாலே இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்பதே அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி இந்தியாவின் நிலைப்பாடாகும். இப்படியான தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்குவதில் மகிந்த ராஜபக்ச விருப்பம் கொண்டுள்ளார் என்று 06.05.2009 அன்று புதுடில்லியில் பிரித்தானியப் பிரதமரின் சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவுண் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். யுத்த முடிந்த பின்னர் தமிழ் மக்களுக்கு மகிந்தர் வழங்கக் கூடிய அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக சிறீலங்கா இராணுவம் மட்டுமே இருக்கும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.

இப்படியான கனவுலகில் மிதந்து கொண்டிருந்த இந்தியாவின் அதிகார வர்க்கம், ஈழத்தீவில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் வெடிப்பதையோ அன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் பெறுவதையோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத் தமிழ் அரசியல் கட்சிகள் பரிணமிப்பதையோ விரும்பவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த அன்றைய காலகட்டத்தில் இந்த மூன்று விடயங்களும் நடைபெறாதிருப்பதைத் தடுப்பது இந்தியாவைப் பொறுத்தவரை கடினமான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் யுத்தம் முடிந்த பின்னர் களத்தில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய தளபதிகளான ராம், நகுலன் ஆகியோரை சிறீலங்கா அரசாங்கத்திடம் சரணடைய வைத்ததன் மூலம் ஈழத்தீவில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் வெடிப்பதை கே.பி தடுத்து நிறுத்தினார். அதே போல் வெளிநாட்டில் இருந்த போராளிகளுடன் நயவஞ்சகமான முறையில் பேசி தலைமைச் செயலகம் என்ற பெயரில் காகிதப்புலிக் கட்டமைப்பு ஒன்றையும், உருத்திரகுமாரனின் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக சாம்ராச்சியத்தையும் உருவாக்கியதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் பெறுவதையும் கே.பி. முடக்கினார்.

இதே போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கிய இரா.சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிணமிப்பதைத் தடுத்து நிறுத்தினார். இதில் மூன்றாவது விடயத்தில் இந்தியாவிற்கு ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால் அப்பொழுது சம்பந்தருக்கு எழுபத்தாறு வயது. முதுமை வந்து விட்டாலே நோய், தள்ளாமை, மூளைத் தளர்ச்சி, ஞாபக மறதி என ஒருவரின் இயல்பான செயற்பாடுகள் பாதிப்பிற்கு ஆளாகி விடும். எனவே அன்றைய காலகட்டத்தில் ஓரளவு உசாராக சம்பந்தர் இருந்தாலும், ஒரு தசாப்தம் கடந்து இதே போன்று அவரால் இருக்க முடியுமா என்பதில் இந்திய அதிகார வர்க்கத்திற்கு சந்தேகம் இருந்தது. இன்று பதினொன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், நடைதளர்ந்து, மூளை பேதலித்து, நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய பிரக்ஞையே இன்றியிருக்கும் தனது எண்பத்தெட்டாவது வயதை நெருங்கும் சம்பந்தர் அவர்களைப் பார்க்கும் பொழுது, இந்தியாவின் கணிப்பில் தவறு இருந்த
தாகக் கூற முடியாது.

எனவே சம்பந்தருக்கப் பிறகு தமது தாளத்திற்கு ஆடக் கூடிய தமிழ்த் தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. அதற்காக முதலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு இந்தியா வலைவீசிப் பார்த்தது. ‘சம்பந்தருக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும் ஆளுமை உங்களுக்கு உண்டு? என்று அவருக்கு ஆசை வார்த்தை காட்டும் முயற்சிகள் திரைமறைவில் தொடங்கின. ஆனால் சிங்கத்தின் குகையில் நின்று சீறிய சிறுத்தையான மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வாரிசான கஜேந்திரகுமார் இதற்கெல்லாம் கிறங்கிப் போகவில்லை. தமிழீழ தேசியத் தலைவரிடம் பூகோள அரசியல் கற்ற அவர், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக நின்றார். அதனால் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியும் சென்றார்.

அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரும், அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனை இந்தியா குறிவைத்தது. சம்பந்தருக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகும் கனவில் மிதந்து கொண்டிருந்த சுரேஸ் பிரேமசந்திரனுக்கும் இந்தியா வீசிய வலை புளகாங்கிதத்தை அளித்தது.

ஆனால் அதற்குத் தடையாக 2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் மேற்கொண்ட அரசியல் பிரவேசம் அமைந்தது. தனக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுரேஸ் பிரேமச்சந்திரன் அரியாசனம் ஏறுவதை விட, அவ்விடத்தில் சுமந்திரன் அமர்வதையே சம்பந்தன் விரும்பினார். அதனால் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறிச் சுமந்திரனைத் தனது பட்டத்து இளவரசராக சம்பந்தர் வளர்க்கத் தொடங்கினார். சுமந்திரனும் தனது பங்கிற்குப் பங்காளிக் கட்சிகளை ஓரம்கட்டித் தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தத் தொடங்கினார்.

மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சுமந்திரனின் விவகாரத்தில் நழுவல் போக்குடனேயே இந்திய அதிகார வர்க்கம் நடந்து கொண்டது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தைக் கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை தனது வாரிசாக சுமந்திரனை சம்பந்தர் வளர்த்தெடுக்க முற்பட்டது பெரிய பிரச்சினையாகத் தென்படவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வா சித்தாந்தத்தில் ஊறிப் போன இன்னொரு தொகுதி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை ஒரு கிறிஸ்துவரான, அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதபோதராக மாறி விடும் சுமந்திரன், சம்பந்தரின் வாரிசாக மாறுவது அவ்வளவு தித்திப்பான செய்தியாக அமையவில்லை.

இவ்வாறான பின்புலத்தில் தான் 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சம்பந்தர் களமிறக்கினார். நெற்றியில் திருநீறும், குங்குமமும் சூடி வலம் வந்த விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம், 2014ஆம் ஆண்டு டில்லியில் ஆட்சிக் கட்டில் ஏறிய பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வா அதிகார வர்க்கத்தை மிகவும் குளிர்ச்சிப்படுத்தியது.

சாராம்சத்தில் சம்பந்தருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் பாரிய வயது வேறுபாடு கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இரண்டு பேரையும் பொறுத்தவரை ஒரு வயோதிபர் மடம் தான். ஆனாலும் சம்பந்தரை விட ஆறு வயது இளையவர் என்ற வகையில் இடைக்கால ஒழுங்கில் சம்பந்தருக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக விக்னேஸ்வரன் வருவதை இந்தியா விரும்பியது.

பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான நாற்காலிச் சண்டையில் மாவை சேனாதிராஜாவின் பக்கம் சம்பந்தர் சாய்ந்ததும், அதன் விளைவாக விக்னேஸ்வரனுக்கும், சம்பந்தருக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலும் வாசகர்கள் ஏற்கனவே அறிந்தவை தான்.

இச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிது காலம் ஆனந்தசங்கரியின் உதயசூரியன் சின்னத்தில் தனது அரசியல் வாழ்க்கையை மேம்படுத்த முற்பட்டார்.

அந்தோ பாவம். அவரது அந்த முயற்சியும் மண்கவ்விப் போக, விக்னேஸ்வரனின் பக்கம் தாவித் தனது அரசியல் வாழ்வு அந்திம நிலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் முற்பட்டார். இதற்கிடையில் சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன். ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியே அதிருப்தியாளர்களின் பட்டாளத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் இணைத்துக் கொள்வதற்கு விக்னேஸ்வரன் முற்பட்டார்.

இதற்கு இந்தியாவும் திரைமறைவில் ஆசீர்வாதம் வழங்கியது. விக்னேஸ்வரன் தரப்பும் கஜேந்திரகுமாரும் இணைந்து கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான வலுவான தலைமையாக இரண்டு பேரும் எழுச்சி கொள்ளலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்ட இந்தியத் தரப்பு முற்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் கஜேந்திரகுமார் மசியவில்லை. விக்னேஸ்வரனோடு கூட்டுச் சேர வைத்துத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அழிப்பதற்கான சதி நடைபெறுவதாக கஜேந்திரகுமார் ஊகித்தாரோ தெரியவில்லை. அதனால் இந்தியா விரித்த வலைக்குள் அவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விழவில்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சுமந்திரனின் அரசியல் வாழ்க்கையின் அந்திம காலம் தொடங்கியிருப்பதைக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. சுமந்திரனைக் கட்டிப் பிடித்தவாறு எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்ற துடிப்பு சிறீதரனுக்கு இருந்தாலும், அவரை அடுத்த தமிழ்த் தலைவராக வளர்த்தெடுப்பதில் இந்தியாவிற்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது.

இவ்வாறான பின்புலத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வளர்த்தெடுப்பதற்கான பிரயத்தனங்களில் இந்திய புலனாய்வுத்துறை இறங்கியுள்ளது. சாணக்கியனின் அரசியலோடு அவரது பெற்றோரின் பூர்வீகத்தை முடிச்சுப் போட்டு இனவாதத்தை கிளப்புவது இப்பத்தியின் நோக்கமல்ல. மாறாக அவரது அரசியலைப் பற்றியே இப்பத்தி பேசுகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குப் பின்னர், சி.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்த படியாக, சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி இப்பொழுது அதிகம் உரையாற்றுபவராக சாணக்கியனே திகழ்கின்றார். வெறும் முப்பது வயது நிரம்பிய இளைஞரான சாணக்கியன், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக விளங்கியவர். அவர் பிள்ளையானின் நண்பரும் கூட.

இவ்வாண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அதன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சாணக்கியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அதிகம் தமிழ்த் தேசியம் பேசுபவராகத் திகழ்கின்றார்.

சமநேரத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அதிக நேரத்தை செலவழிப்பவராகவும் சாணக்கியனே காணப்படுகின்றார். இவரது நடவடிக்கைகள், தமது விலாங்கு அரசியலை விஞ்சிக் காணப்படுவதாக, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், சிங்களக் கட்சிகளுக்கும் இடையில் அடிக்கடி தாவிக் கொண்டிருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதங்கப்படும் அளவில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் மத்தியில் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அதைப் பற்றி சாணக்கியன் கவலைப்படுவதாக இல்லை.

(தொடரும்)