மக்களின் கால முனிவர் - கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா

10.12.2006 ஞாயிற்றுக்கிழமை. மாலை 3:00 மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் சாந்தன் அண்ணா. ‘பாலா அண்ணை உம்மை வரட்டாம். பின்னேரம் நாலரைக்கு வரச் சொன்னவர்.’

‘கொஞ்சம் பிந்தினால் பரவாயில்லையா?’ நான் பதிலுக்கு கேட்டேன்.

‘இல்லை நாலரைக்கு வந்தால் நல்லது. ஏன் வேறை ஏதும் வேலை இருக்கா? இப்ப ரிறவிக் இருக்காது தானோ?’ மறுமுனையில் எனது பதிலுக்கு புதிய கேள்வி விரிந்தது.

‘சரி நான் எப்பிடியும் நாலரைக்குள்ள வந்திர்றன்.’ என்று கூறி விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

நேரம் சரியாக மாலை 4:35.

வேகமாக நியூமோல்டனுக்கு சென்று பாலா அண்ணையின் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தினேன். வழமையாக நான் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் வேறு வாகனம் நின்றது. வாகனத்தில் இருந்து இறங்கி பாலா அண்ணையின் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த போதுதான் கவனித்தேன். வழமையாக எனது கையில் இருக்கும் லப்ரொப் பை கையில் இல்லை.

4

தளர்வாக நடந்து சென்று வாயில் புற அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளேயிருந்து வெள்ளை நிறப் பெண்மணி நடந்து வருவது கதவின் கண்ணாடியில் மங்கலாக தெரிந்தது.

அன்ரி வந்து கதவை திறந்தார்.

‘ஹாய் தம்பி’

‘ஹலோ அன்ரி’

அன்ரியின் முகத்தில் சோகத்தின் சாயை. ஆனால் அவரது இளமுறுவலில் மட்டும் மாற்றம் இல்லை. துயரத்தை மறைத்து சிரித்தார்.

நானும் பதிலுக்கு சிரித்தேன். வழமை போன்று மகிழ்ச்சியில் சிரிக்க முடியவில்லை. இறுக்கத்துடன் கூடிய சிரிப்பு. சப்பாத்தைக் கழற்றி விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த போது அங்கு எவரும் இருக்கவில்லை. கடந்த இரண்டு தடவைகளை போன்று வரவேற்பறையில் பாலா அண்ணை அமர்ந்திருப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இருக்கவில்லை. சோபா ஒன்றில் நான் அமர்ந்த போது அன்ரி உள்ளே வந்தார்.

‘தம்பி. பாலா அண்ணை உறங்குகின்றார். உள்ளே போய் பார்த்து விட்டு அழைக்கிறேன். அதிர்ச்சியடைய வேண்டாம்.’
‘ஏன் அன்ரி?’ அதிர்ச்சியுடன் நான் வினவினேன்.

‘இல்லை. அவரது நிலை மோசமாக இருக்கிறது. அதனால் தான் கூறினேன். அவர் கண்விழித்து கதைத்துக் கொண்டிருப்பார். திடீரென உறங்கி விடுவார். அதனால் அதிர்ச்சியடைய வேண்டாம்’ என்று அன்ரி பதிலளித்தார்.

1

சொற்ப நேரத்தில் அன்ரி வந்து அழைத்துச் சென்றார்.

புதிதாக எந்த அறைக்குள்ளும் நான் நுழையவில்லை. புற்றுநோயால் பாலா அண்ணை தாக்கப்படுவதற்கு முன்னர் நான் அடிக்கடி சென்று அமர்ந்து அவருடன் நீண்ட நேரம் சிரித்து, பகிடி விட்டு, அவரது அறிவுரையை கேட்டு, அவரிடம் கதை கேட்டு, வரலாற்றை அறிந்த அதே அறைதான். ஆனால் இப்போது அது அவரது படுக்கை அறையாக மாறியிருந்தது.

உள்ளே நுழைந்த போது எனக்கு உண்மையில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே கட்டிலில் இருந்து எழுந்து அமர முற்பட்ட பாலா அண்ணை, மெலிந்து வாடியிருந்தார். சீராக தலையிழுத்து முகம் பளபளக்க, சிரிப்புடன் வரவேற்கும் பாலா அண்ணையின் முகம் காய்ந்து, வரண்டு காணப்பட்டது. ‘வாரும் ஐசே...’ என்று வழமையாக அழைக்கும் பாலா அண்ணை அங்கு இருக்கவில்லை. அன்ரி மட்டும் ‘இதிலை இருங்கோ’ தம்பி என்றார்.

பாலா அண்ணையின் கட்டிலின் வலது புறத்தில் அமர்ந்து அவரைப் பார்த்தேன். என்னை உற்றுப் பார்த்தார். அவரது முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. உடல் உபாதையால் துன்பப்படுவதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ‘கட்டில்ல சாய்ந்து படுங்கோ அண்ணை.’ என்றேன்.

‘சாஞ்சன் என்டா படுத்து நித்திரையாவிடுவன்’ என்று பதிலுறுத்தார்.

என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. அவரது முகத்தைப் பார்த்தேன். அவரும் உற்றுப் பார்த்தார்.

‘சொல்லும் ஐசே’ வழமையாக அவர் தான் தொடர்ந்து கதைப்பார். நான் பதில் சொல்வேன். ஆனால் இன்றைக்கு..... நான் பதில் சொன்னேன்.

‘உங்களை பார்க்க வந்தனான்’

g

‘என்ரை நிலைமை மோசமாகீட்டுது எண்டதை ஒருத்தரும் நம்ப மாட்டீனம். என்ன செய்யிறது ஐசே’ சற்று நேரம் இருந்து என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். சொற்ப நேரத்தில் தலை சுற்ற... ‘அம்மா...’ என்று முனகியவாறு பாலா அண்ணை தலையணையில் சாய்ந்தார். புற்றுநோயால் ஏற்பட்ட உடல் உபாதையால் அவரது உடல் நொந்திருந்தது. வலது கையை சற்று உயர்த்தி கீழே போட்டார். தனது நெஞ்சை தடவினார். மீண்டும் ‘அம்மா’ என்று முனகினார்.

‘போர்த்து விடவா?’ என்று கேட்டேன்.
‘ஓம் ஐசே. குளிருது’ என்று பதில் வந்தது.
கம்பளியை இழுத்து நெஞ்சு வரை போர்த்தி விட்டேன்.
‘குயில்ரையும் இழுத்துப் போர்த்தி விடவா?’ என்று கேட்டேன்.
‘இல்லை கம்பளி போதும்’ என்று பதில் வந்தது.
அப்படியே அவரது வலது புறத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தேன். கண்களை மூடியவாறு நோவால் முனகியவாறு பாலா அண்ணை படுத்திருந்தார். ஒரு நாளும் அந்த நிலையில் அவரை நான் பார்த்ததில்லை. அன்ரி கூறியதை விட நான் அதிர்ச்சியடைந்திருந்தேன்.

பாலா அண்ணையை பார்ப்பதும். கீழே பார்ப்பதுமாக இருந்தேன். எவ்வளவு நேரத்திற்கு அவ்வாறு இருந்தேனோ தெரியாது.  திடீரென பாலா அண்ணை கண்ணை திறந்து என்னைப் பார்த்தார். கண்களில் முன்னர் இருந்த கனிவு இல்லை. அந்தளவிற்கு அவரது கண்கள் சோர்ந்திருந்தன. என்னைப் பார்ப்பதும், கண்ணை மூடுவதும், பின்னர் கண்ணை திறந்து பார்ப்பதுமாக இருந்தார்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் கண்ணை திறந்து, என்னைப் பார்த்து‘வேற சொல்லும் ஐசே’ என்றார்.

எதைச் சொல்வது. வெறும் ‘ம்’ என்ற பதில் மட்டும் என்னிடமிருந்து வந்தது.

‘சாப்பிட முடியுதோ அண்ணை?’ என்று கேட்டேன்.
‘இல்லை ஏலாது’ என்று பதிலளித்தார்.
சொற்ப நேரத்தில் அன்ரி வந்தார்.
‘நான் நிற்பதால் கரைச்சலா?’ என்று கேட்டேன்.
‘இல்லையில்லை. நீங்கள் இருங்கோ. அவர் கண்ணை திறந்து கதைப்பார். கண்ணை மூடிக் கொண்டிருந்தால் பேசாமல் இருங்கோ. ஏன் நீங்கள் போகப் போறீங்களா?’

‘இல்லை அன்ரி. நான் இப்பிடியே இருக்கிறன்’ என்று பதிலளித்தேன்.
விளக்கை அணைத்து விட்டு அன்ரி வெளியில் சென்றார். பாலா அண்ணையின் மேசை விளக்கு மட்டும் அவரது இடது பக்கத்தில் எரிந்து கொண்டிருந்தது. திடீரென கண்ணை திறந்து என்னைப் பார்த்த பாலா அண்ணை, ‘ஐசே இப்பிடி இஞ்சாலை வாரும்’ என்று என்னை தனது இடது பக்கத்திற்கு அழைத்தார்.

மறு பக்கத்திற்கு நடந்து சென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தேன். அவரும் அந்தப் பக்கமாக திரும்பி என்னைப் பார்த்தவாறு இருந்தார். நானும் அவரது முகத்தை வெறித்து பார்த்தவாறு இருந்தேன்.

அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவருக்கு பிடிக்காது. ஏதாவது சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாள் சொன்னார் ‘சில பேர் என்னை சந்திக்க வேணும் எண்டு வருவினம். ஆனால் ஒண்டுமே கதைக்க மாட்டினம். வளர்த்த நாய் பார்த்த மாதிரி வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருப்பினம்.’ அப்போது அது எனக்கு பகிடியாக இருந்தது. ஆனால் இப்போது நானும் அதே பாணியில் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவரை மீண்டும் பார்த்தேன். எனது முன்னால் பாலா அண்ணை இருக்கவில்லை. அனந்த சயனத்தில் திருமால் படுத்திருந்தார். முழங்கையை கட்டிலில் ஊன்றியவாறு, கையை தலைக்கு அணையாக வைத்து, புத்த பெருமான் ஞான சயனத்தில் இருப்பது போன்று பாலா அண்ணை சாய்ந்திருந்தார்.

அப்போது, 2002 ஜூலை மாதம் அளவில் பாலா அண்ணை எனக்குக் கூறிய வசனம் ஒன்று நினைவுக்கு வந்தது. ‘பற்றே துன்பத்திற்கு காரணம். எவன் இன்பத்தின் மீதும், துன்பத்தின் மீதும் பற்றுக் கொள்ளாமல் விடுகின்றானோ... அவனுக்கே துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். இது புத்தர் சொன்ன தத்துவம். ஆனால் சிங்களவர்கள் ஏதோ செய்கிறார்கள்!’

ஞான சயனத்தில் இப்போது பாலா அண்ணை ஆழ்ந்திருந்த போது, இந்தச் சொற்கள் எனது நினைவுக்கு வந்தன. திடீரென விழித்தெழுந்த பாலா அண்ணை, ‘சொல்லும் ஐசே. மன நிலவரத்தையும், களநிலவரத்தையும் சொல்லும்‘’ என்றார்.
மன நிலவரத்தை எப்படிச் சொல்வது? எதைச் சொல்வது? பெரிய கேள்வி எனது மனதிற்குள் தொக்கி நின்றது.

‘கள நிலவரம் மோசமாயிருக்கு அண்ணை. இண்டைக்கு மட்டக்களப்பில் கடும் சண்டை நடந்தது. வாகரை, படுவான்கரை எல்லாம்.... செல் அடிச்சுப் போட்டான். பத்தொன்பது சனம் செத்துப் போச்சு’ என்றேன்.

அதிர்ச்சியுடன் என்னை விழித்துப் பார்த்தார் பாலா அண்ணை. ‘ச்சீ’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும் அவரது வாயில் இருந்து உதிர்ந்தது. முகத்தில் வேதனை படர்ந்து காணப்பட்டது. நான் தொடர்ந்தேன்.

‘கடுமையான சண்டையண்ணை. பத்துப் போராளியளும் வீரச்சாவு’ என்றேன்.
பாலா அண்ணையின் புருவங்கள் சுருங்கி விரிந்தன. கண்களில் துன்ப சாயையும், முகத்தில் வேதனையும் பரவியிருந்தது.

வலது பக்கமாக துவண்டு படுத்தார். மீண்டும் எனது பக்கம் திரும்பி.
‘அரசாங்கத்தின் ஸ்ரற்றஜி (தந்திரோபாயம்) என்ன?’ என்று கேட்டார்.
சிங்கள அரசாங்கத்தின் கொடிய தந்திரோபாயங்களை ஊகிக்கும் வல்லமை பொருந்திய ஒரு மகா அரசியல் மதியூகியிடம் நான் என்ன பதில் சொல்வது? இருந்தும் சாக்குக்கு சொன்னேன்.

‘ஒரே செல் அடிக்கிறான். சனங்கள் சாகுது. இடம்பெயர்ந்து போகுதுகள். அங்காலை பக்கமும் செல் விழ சிங்கள குடியேற்றங்களில் இருந்து சிங்களவங்கள் ஓடுறான்கள். ஆனால் எங்கட சனம் தான் சாகுது.’ என்றேன்.
சிங்களவர்கள் இடம்பெயர்வதை பற்றி பாலா அண்ணை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. தமிழீழத்தை ஆக்கிரமித்த சிங்களவர்கள் ஓடுவது தவறில்லை என எனது மனதில் தெளிவாகப்பட்டது.

‘எங்கடை சனங்களை நினைக்க கவலை’ என்று பாலா அண்ணை வேதனைப்பட்டார்.
பின்னர் கண்ணை மூடி ஏதோ யோசித்தார். மீண்டும் கண்ணை திறந்து என்னைப் பார்த்தார். பிறகு கண்ணை மூடி விட்டு சொற்ப நேரத்திற்கு பின்னர் ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தார். அவரது ஞானக் கண்ணில் ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே ஓடியது. நானும் அவரைப் பார்ப்பதும், பின்னர் நிலத்தை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தேன்.

திடீரென என்னைப் பார்த்து ‘வேற சொல்லும் ஐசே’ என்றார்.
‘இல்லை அண்ணை. நீங்கள் வடிவாய் சாஞ்சு படுங்கோ. நான் மற்றப் பக்கத்துக்கு வாறன்’ என்றேன்.
திரும்பவும் வலது புறத்திற்கு சென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்த போது, கண்ணை மூடிக் கொண்டு பாலா அண்ணை படுத்திருந்தார்.

திடீரென கண்ணை விழித்து என்னைப் பார்த்தார்.
‘எப்ப ஐசே உங்கட கொண்டாட்டம்?’ என்று கேட்டார்.
அவர் கேட்பது எனக்கு புரிந்தது. எமது ஊடகத்தின் கடந்த இரண்டு வருட நிறைவு விழாக்களில் சிறப்பு அதிதியாக பாலா அண்ணையும் அன்ரியும் பங்கு பற்றியிருந்தார்கள். ஜூன் மாதம் 2007 நடைபெறும் அடுத்த வருட விழாவிற்கு அவர் வரமாட்டார் என்பது இப்போது புரிந்தது. ஆனாலும் பதிலளித்தேன்.

‘நேற்று எங்கடை இசை நிகழ்ச்சி ஒண்டு நடந்தது.’
‘ஆ...’ என்று கூறி விட்டு பாலா அண்ணை கண்ணை மூடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு பின்னர் திடீரென கண்ணை திறந்து ‘என்ன பாட்டு ஐசே பாடினியள்’ என்றார்.
‘ரீ.எல்.மகாராஜன் வந்திருந்தவர். வேறு இடங்களில் இருந்து ஆக்கள் வந்தவையள்’ என்றேன்.
என்னைப் பார்த்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு எமது ஊடகத்தின் வருடாந்த நிறைவு விழாவில் மாதினி சிறீஸ்கந்தராசாவின் கர்நாடக இசைப் பாடலையும், அதன் பின்னர் இந்த வருடம் நடைபெற்ற நிகழ்விலும் வேறு பாடல்களையும் பாலா அண்ணை விருப்புடன் இரசித்தது எனது நினைவுக்கு வந்தது.

திடீரென சொன்னார்:
‘நிலைமை மோசம் தான். ஆனால் என்னைப் பற்றி நான் யோசிக்க ஏலாது. மக்களுக்கும் ஒண்டும் சொல்ல ஏலாது.’
அந்த வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன. அவர் தனது நிலையை குறிப்பிட்டாரா அல்லது மக்களின் நிலையைப் பற்றிக் குறிப்பிட்டாரா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தன்னைப் பற்றி கவலைப்படுவதை அவர் விரும்பவில்லை. தனக்கு நேரப் போகும் கதியை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அதனையிட்டு அவர்கள் கவலை கொள்ளவில்லை. ஆனால் மக்களை பற்றி ஆழமாக சிந்தித்தார். புற்றுநோய் வடிவில் கூற்றுவன் வந்து தன்னை அழைக்க முற்படுவது அவருக்கு வேதனையை அளித்தது. தமிழீழத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை. மக்களுக்காக அவர் தனது பலத்தையும் ஆளுமையையும் பிரயோகிப்பதற்கு கூற்றுவன் இடமளிக்க விரும்பவில்லை. அதுவே அவரது மனதை வதைத்தது.

அப்போது, 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சொன்ன வார்த்தைகள் எனது நினைவில் வந்தன.
‘நான் சாகிறதுக்கு முதல் எங்கட சனத்தின்ர பிரச்சினையை தீர்க்கலாம் எண்டால்... ச்சீ... சிங்களவன் இறங்கி வாறான் இல்லையே. நான் சாகிறதுக்கு இடையில எங்கட சனத்துக்கு ஒரு விடுவு வந்திட்டால்...’

அன்று பேச்சுவார்த்தை அரங்கில் ராஜதந்திர வித்தையில் இறங்கிய போதும் மக்களைப் பற்றியே பாலா அண்ணை சிந்தித்தார். இன்று கூற்றுவன் வாசலில் நின்று அழைக்கும் போதும், மக்களைப் பற்றியே பாலா அண்ணை சிந்தித்தார். அன்றும் சரி இன்றும் சரி அவரது ஆழ் மனதில் தமிழீழ மக்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையே வியாபித்து நின்றது. அந்த மக்களை மீட்பதற்கு தனது மூளையை - ராஜதந்திர அறிவை - சாணக்கியத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றே அவர் சதா யோசித்தார். அவரது மனதில் பெரும் ஏக்கம் தங்கியிருந்ததை இப்போது என்னால் உணர முடிந்தது.

பாலா அண்ணையை நான் பார்த்த போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். கைகள் இரண்டும் நெஞ்சின் மேல் இருந்தன. திடீரென அவரது உடலில் எந்த விதமான அசைவுகளும் வரவில்லை. எனக்கு நெஞ்சில் பகீர் என்றது. ஒரு கணம் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனேன். நான் அருகில் இருக்க அவரது உயிர் பிரிந்து விட்டதா? என்று திணறினேன். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

பாலா அண்ணை நிம்மதியாக மூச்சுவிட்டார். எனது உடலிலும் மீண்டும் மூச்சுத் திரும்பியது. அப்போது மூளையில் திடீரென பொறி தட்டியது. நாளாந்தம் இவ்வாறு எத்தனை தடவைகள் அன்ரி திகிலடைந்திருப்பார்? தனது அன்புத் துணைவர் பாலா போய்விட்டாரா என்று நினைத்து பதறியிருப்பாரா என்று எண்ணிக்கொண்டேன்.

அன்ரியின் மனம் என்ன பாடுபடும் என்பதை அப்போது என்னால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிந்தது.
நேற்றுக் கூட அன்ரியுடன் தொலைபேசியில் கதைத்த போது அவரது துயரம் வெளிப்பட்டது.
மீண்டும் கண்களை விழித்து என்னைப் பார்த்த பாலா அண்ணை.
‘சரி ஐசே. போட்டு வாரும். திரும்பவும் எனக்கு நிலைமை சரிவந்தால் கூப்பிடுவன்’ என்றார்.
அவரது சொற்களில் நம்பிக்கை இருக்கவில்லை. வழமையாக விடைபெறும் போது, ‘அடிக்கடி வாரும் ஐசே. ஏதும் விசேசம் எண்டால் அடிச்சுக் கதையும் ஐசே. செய்தியள் வந்தால் உடனை அடிச்சுச் சொல்லும். கீப் இன் ரச்’ என்று கூறுவார்.

ஆனால் இந்த முறை அந்த வசனம் வரவில்லை.
திடீரெனக் கேட்டார் ‘உம்மட அப்பாவுக்கு சுகமோ ஐசே.’
‘ஓம் அண்ணை’ என்றேன்.
புற்றுநோயின் வலியால் துடித்த போதும், அவர் என்னையும் மறக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகளையும் அவர் மறக்கவில்லை.
சற்று நேரம் அமர்ந்து விட்டு எழுந்தேன்.
‘சரி அண்ணை வாறன்’ என்றேன்.
உடனே தனது கையை நீட்டினார். நான் அறிந்த மட்டில் இத்தனை நாட்களில் இரண்டு தடவைகள் மட்டும் பாலா அண்ணை என்னிடம் கைகுலுக்கி உள்ளார். ஒருமுறை தனிப்பட்ட பிரச்சினை ஒன்றினால் நான் சோர்ந்திருந்த போது எனக்கு அறிவுரை ஊட்டி, உற்சாகப்படுத்தும் வகையில் கைகொடுத்து வழியனுப்பினார். மற்றும் ஒரு தடவை மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த போது எனக்கு கைகொடுத்து வழியனுப்பினார்.

ஆனால் இம்முறை பிரிவின் வேதனை அவரது கைகுலுக்கலில் தெரிந்தது. அவரது கையை இறுகப் பற்றிக் கொண்டேன். எழுந்திருக்க முற்பட்டார். அவரால் முடியவில்லை. ‘தூக்கி விடும் என்றார்.’ ஒரு கையால் பாலா அண்ணையை தூக்க முற்பட்டேன். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. மறு கையை கொடுத்து அவரைப் பிடித்து தூக்கினேன். பாலா அண்ணை கட்டிலில் நிமிர்ந்து அமர்ந்த போது அன்ரி ஓடி வந்தார்.

‘பாலா அண்ணை எழும்பப் போறாராம்’ என்றேன்.

‘எங்கை போகப் போகின்றீர்கள்?’ அன்ரி பதிலுக்கு கேட்டார்.

பாலா அண்ணையிடம் இருந்து பதில் வரவில்லை. என்னை ஆழமாக பார்த்தார். நானும் அவரைக் கனிவோடு பார்த்தேன்.
‘சரி அண்ணை வாறன்’ என்றேன்.

அவரிடமிருந்து பதில் வரவில்லை. தலையை மட்டும் அசைத்தார். பின்னர் கட்டிலில் சாய்ந்து படுத்தார். அன்ரி பக்கத்தில் நின்றார். பாலா அண்ணை என்னை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஆயிரம் சூரியன்களை என்னால் உணர முடிந்தது. தாங்க முடியாத பார்வை. அந்தப் பார்வையின் அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு வெறித்த பார்வை. அந்தப் பார்வையில் பொதிந்திருந்த அர்த்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவரது முகமும், பார்வையும், உடல் நிலையும் எனது மனதில் ஆழமாக ஒளிப்பதிவாகியிருந்தன. அவரது வழமையான வாஞ்சையான பார்வையில் இப்போது அளவிட முடியாத துயரம் பொதிந்திருந்தது. சிந்தனை புரையோடி நின்றது.

செய்வதறியாது அங்கிருந்து அகன்றேன். பாலா அண்ணை மட்டும் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். வெளியில் வந்து வரவேற்பறையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடி விட்டு வெளியில் புறப்படுவதற்கு தயாரானேன்.

மாலை 5:40 மணி.

பாலா அண்ணையின் அறையில் இருந்து அன்ரி வெளியில் வந்து என்னைப் பார்த்துக் கையசைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார். வாசலில் இருந்தவாறு பார்த்தேன். பாலா அண்ணை கட்டிலில் படுத்திருக்க அவரது கால்கள் மட்டும் தெரிந்தன. மீண்டும் ஒரு தடவை உள்ளே சென்று விடைபெறலாமா என்று நினைத்தேன். ஆனால் அம்பு போல் எனது மனதில் தைத்திருந்த அவரது பார்வை எனது நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. திரும்பச் சென்றால் அழுது விடுவேன் எனப் புரிந்தது. பாலா அண்ணைக்கு அழுவது பிடிக்காது. வெளியில் சென்று வீதியில் நின்று வீட்டைப் பார்த்தேன். இதுநாள் வரை என்னைப் பீடிக்காத பிரிவின் துயரம் இப்போது வாட்டியது.

வழமையாக கோடை காலமாக இருந்தால் பாலா அண்ணை வெளியில் வந்து வாசலில் நின்று என்னை வழியனுப்புவார்.  நானும் கையசைத்து செல்வேன். ஆனால் இம்முறை பாலா அண்ணை இல்லை. கதவு சாத்தப்பட்டிருந்தது. வாகனத்தில் ஏறியமர்ந்து மீண்டும் அவரது வீட்டை வெறித்துப் பார்த்தேன். வழமையாக வரவேற்பறைக்குள் நடந்து செல்லும் பாலா அண்ணையை இப்போது வெளியில் உள்ள கண்ணாடியால் பார்க்க முடியவில்லை. வாயில் கதவும் சாத்தப்பட்டுக் கிடந்து. வீட்டை வெறித்துப் பார்த்தவாறு வாகனத்தை செலுத்த ஆரம்பித்தேன். மனதுக்குள் ஒரு நெருடல். பாலா அண்ணை உயிருடன் இருக்கும் போது இந்த வீட்டிற்கு நான் வருவது இதுவா இறுதித் தடவை? எனது மனதில் பதிலளிக்க முடியாத கேள்வி எழுந்தது.

வாகனத்தை முன்னே செலுத்திச் சென்று மீண்டும் பாலா அண்ணையின் வீட்டுப் பக்கமாக வந்து, பார்வையை வாசலை நோக்கி செலுத்தினேன். இப்போதும் பாலா அண்ணை இல்லை. ஆனால் அவர் கட்டிலில் இருந்தவாறு என்னை வெறித்துப் பார்த்தது மனதில் நிழலாடியது. அத்தோடு சில நாட்களுக்கு முன்னர் அவர் என்னிடம் கூறிய வசனம் ஒன்றும் நினைவுக்கு வந்தது.

‘நானும் உம்மட அப்பா மாதிரித்தானே? என்ன ஐசே’
நெஞ்சில் இருந்து பெருமூச்சை இறைத்தவாறு வாகனத்தை செலுத்திச் சென்று ஏ-3 சாலையில் ஏறிய போது, வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. இதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் இப்போது தனிமையில் பீறிட்டுக் கொண்டு வெளி
யில் வந்தது. ஏ-3 சாலையில் திரும்பி றோஹாம்ப்ரன் பக்கமாக திரும்பியபோது சிந்தனையில் மின்னல் தாக்கியது.

‘இனி உன்னை எப்போது பார்ப்பேன்’ என்று மனதிற்குள் கூறியவாறு பாலா அண்ணை என்னை வெறித்துப் பார்த்தது போல இருந்தது.

வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. வீதியில் ஆங்காங்கே நீர் தேங்கிக் கிடந்தது. எனது கண்களில் இருந்தும் கண்ணீர் தூறிக் கொண்டிருந்தது. எனது வாகனத்தின் கண்ணாடிகளில் விழுந்த மழை நீரை அதில் பொருத்தியிருந்த கருவிகள் துடைத்து விழுத்திக் கொண்டிருந்தன. எனது கண்களில் வடிந்த நீரை விரல்கள் அகற்றிக் கொண்டிருந்தன. தமிழீழத்தின் ராஜகுருவை, மதியுஞரை, சாணக்கியரை - அரசியல் மதியூகியை, தமிழீழ அரசின் முதலாவது முதன்மை ராஜதந்திரியை, இனி எப்போது நான் பார்ப்பேன்?

என்னைப் போன்று இப்போது எத்தனை பேர் பாலா அண்ணைக்காக அழுது கொண்டிருப்பார்கள்? நினைத்த போது மீண்டும் கண்ணீர் சுரந்தது.