புலிகளின் புலனாய்வுப் போர் ஒரு சர்வதேசப் புலனாய்வுப் பார்வை! - அநபாய சோழன்

சென்ற இதழின் தொடர்ச்சி...

விடுதலைப் புலிகளின் புலனாய்வின் அதியுச்சத் திறனில், புலம், களம் என, விடுதலைப் புலிகளின் தேசியப் புலனாய்வு அமைப்பு 1500 பேரிற்கு மேல் இயக்கியுள்ளது.

தனது ஐந்தாவது புலனாய்வுப் பிரிவினை விடுதலைப் புலிகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தனர். இந்த ஐந்தாவது பிரிவை சிறப்பு நடவடிக்கைப் பிரிவாக அமைத்திருந்தனர். இதற்கு எல்லாளன் படை எனவும் பெயரிட்டிருந்தனர்.

uj

மிகவும் பலம் வாய்ந்த எதிரிகளின் இலக்குகள், பெரும் இராணுவ மையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழிக்கும் சக்தி, இந்தப் படையிடம் இருந்தது. உளிவியற் தாக்குதல், எதிரிகளிடம் உள்ளகச் சதிகளை மேற்கொண்டு அவர்களின் பலத்தை உடைப்பது போன்ற உச்சத் திறமைகளும் இந்தப் பிரிவிடம் இருந்தது.

இந்தச் சிறப்புத் தாக்குதல் புலனாய்வு அணியிடம், ஒரு கரும்புலிப் படையும் இருந்தது. இவர்களின் தாக்குதலில், ‘திருமண நடவடிக்கை (OPREATION WEDDING)’, எனும் தாக்குதல் நடவடிக்கை, இந்த அணியின் பலத்தை நிரூபித்தது. கிட்ட நெருங்க முடியாத எதிரியை 1991 இல் இவர்கள் தாக்கி அழித்தமை, பெரும் புலனாய்வின் பெறுபேறாக அமைந்தது.

தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ மக்களிற்கும் ஆபத்தாக அமையும் பெரும் எதிரி இலக்குகள், எதிரிகள் இந்த நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்தப் படையணியின் திறனாய்வில் பெரும் எதிரிகள் அழிக்கப்பட்டனர். கரும்புலித் தாக்குதல்கள் இந்த எல்லாளன் படையணியின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதன் மூலம் பெரிய முக்கிய எதிரிகள் அழிக்கப்படடனர்.

எதிரிகளின் மிக அண்மையிலேயே, புலனாய்வு மற்றும், தாக்குதற்பிரிவுகளை ஊடுருவும் பலம் விடுதலைப் புலிகளின் தேசியப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்தது. எதிரிகளின் பாசறைக்குள்ளேயே ஊடுருவவும், முக்கிய எதிரிகளின் அண்மையில், அவர்களின் இதயப் பகுதியிலேயே தங்கியிருந்து அவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளையும், இந்த சிறப்புப் படையணி, அல்லது எல்லாளன் படையணி எனப்படும் இந்தப் பிரிவு செய்து முடித்தது.

இராணுவ இலக்குகளையும் பொது எதிரிகளையும் அழிக்க, பெரும் இராணுவத் தொடரணிகளை அழிக்கக் கூடிய VBIED (Vehicle-Borne Improvised Explosive Device)  எனும் தொழில் நுட்பம், இலக்குகளை இலகுவாகவும் உறுதியாகவும் அழிக்க, தேசியப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டது.

1991 இல் விடுதலைப் புலிகள் தங்களது இடைநிலை மரபுப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவினை, ஆரம்பித்தனர். இந்தப் படையணியின் முதற் பாரிய தாக்குதலாக, ஆனையிறவுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஆனால் சிறீலங்கா இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கையால், எதிர்பார்த்த வெற்றி முறியடிக்கப்பட்டது. பெரும் இழப்பும் ஏற்பட்டது. ஆனையிறவுத் தளத்தின் முழுமையான தகவல் வரைபடம், இராணுவப் புலனாய்வு ஆகியவற்றின் முழுமை இன்மையே, இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் காரணமாக அறியப்பட்டது.

இந்த முறியடிப்பினை, முழுமையான அனுபவத்தின் பாடமாக, விடுதலைப் புலிகள் எடுத்துக் கொண்டனர். புதிய வேவும், இராணுவத் தந்திரோபாயத் திறனும் அவசியத் தேவையாகக் கருதப்பட்டன. இந்தப் பட்டறிவு, இராணுவத்தின், இராணுவ முகாம்களின் முழுமையான கட்டமைப்பு, அவர்களின் பலங்கள், பலவீனங்கள் என்பனவற்றை வேவு பார்ப்பதும், அதற்குரிய தாக்குதற் திட்டங்களை வகுப்பதும், அதன் மூலம் வெற்றி பெறுவதும்,  புலிகளின் அதியுச்சப் பலத்தில் முக்கியமான ஒன்றாக அதன் பின்னரான தாக்குதல்களில் நிரூபிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பலம் எப்படி உருவாக்கப்பட்டது. யாரிடம் இந்தப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இதற்காக தேசியத் தலைவரிற்கு நெருக்கமானவர்களும், மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களுமான தினேஸ் மாஸ்ரர் மற்றும் சசி மாஸ்ரர், ஆகிய படை நடவடிக்கை திட்டமிடல் பட்டறிவாளர்கள், தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டனர்.

இவர்களால் ஒரு சிறப்பு வேவுப் படையணி உருவாக்கப்பட்டது. இவர்கள் எதிரிகளின் காலடிகளில் மறைந்திருந்து வேவுபார்க்கும் திறனுள்ளவர்களாக உருவாக்கப்பட்டனர். நீண்டகாலம் கூட, எதிரிகளின் அரணுக்குள்ளேயே உருமறைத்து இருந்து, முழுமையான தகவல்களைத் திரட்டக் கூடிய வகையில் இந்தச் சிறப்பு வேவுப் படையணி உருவாக்கப்பட்டது. இவர்களிற்கு மிகவும் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி மூலம் சிறப்பு வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன.

உலகின் மிகவும் சிறந்த வேவுப் படையணி மற்றும் எதிரிக்குள் ஊடுருவும் புலனாய்வு அணிகளில் ஒன்றான பிரான்சின் சிறப்பு வேவுப் படையான 13e RDP (13e régiment de dragons parachutistes) இன் கடுமையான சிறப்புப் பயிற்சிகளுடன், விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப் படையினரின் பயிற்சிகளை, பிரான்சின் இராணுப் புலனாய்வு மற்றும் இராணுவ யுக்தி இதழின் பத்தி ஆரிசியர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தினைச் சேர்ந்த, இராணுவ வரலாறு மற்றும் தொலை நோக்கு மையத்தின் நிறுவனர் Adrien Fontanellaz  ஒப்பிட்டுள்ளார். இவர் பல இராணுவ ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வேவுப் புலிகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு, இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கேட்பதுடன், முக்கிய இராணுவக் கேந்திர மையங்களிற்குள் தங்களது புலனாய்வாளர்களை உள்ளிறக்கும், அல்லது உள்ளிருக்கும் ஒருவரைத் தங்களின் உளவாளியாக மாற்றும் உளவியற் திறமைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்த இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம், மிகவும் பலமான ஒரு எதிரியின் இலக்கும் அவனது நடவடிக்கையும், அவனின் அடுத்த நிலை அதிகாரியின் நடவடிக்கைகளும்,  உடனடியாக அறியப்பட்டன. உடனடியாக வேவுப் படையணியும், புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் படையணியும், ஊர்காவற்துறையில் இருந்து புறப்பட இருக்கும் இந்த முக்கியமான எதிரியை அழித்தாழிக்க ஊர்காவற்துறையின் வழித்தடம் நோக்கி விரைந்தனர். இங்கு தாக்கப்பட இருந்த அந்த எதிரி யார். தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய அடுத்த பெரும் புலனாய்வுப் பிரிவு என்வென்பதனையும், அடுத்த இதழில் பார்ப்போம்.

அதுவரை வேவுப் புலிகளிகளுடன் நீங்களும் ஊர்காவற்துறை வழித்தடத்தில் காத்திருங்கள்...

(தொடரும்)