தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும்போதுதான் தமிழர் தேசம் தலை நிமிரும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

உலகத்தை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த தமிழர்கள் இன்று ஏனைய இனங்களால் அடிமைகொள்ளப்படும் இனமாக மாறியிருக்கினறனர். உலகுக்கே பாடம் கற்பித்த தமிழர்களுக்கு இன்று வேற்றினத்வர்கள் அறிவுரை கூறவருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் அசைக்க முடியாத கட்டுமானங்களை ஏற்படுத்தி இன்றும் நீடித்து நிலைக்
கவைத்திருக்கும் தமிழர்களுக்கு இன்று சிங்கள தேசம் தொழில்நுட்ப அறிவுரைக்கின்றது. இது காலத்தின் கொடுமை. தமிழினத்திற்கு தனிப்படை இல்லாத வறுமை.

உலகின் எந்த மூலையிலும் தமக்கென ஒரு நாடு இல்லை என கவலைகொண்ட தமிழினம் அதற்கென பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. குந்தி இருக்க ஒரு குடிநிலம் வேண்டும் என்பதற்காக அளப்பரிய அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வருகின்றது. தமிழரின் முன்னோர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வீரத்திற்கு முன்பாக உலகின் இப்போதுள்ள எந்தக் கொம்பனும் வாலாட்ட முடியாது என்ற பெருமை தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.

ஆதி காலத்திலேயே வானியல், சாஸ்திரம், கட்டடவியல் போன்ற பல்துறை விற்பன்னர்களாக இருந்த தமிழர்கள் தேசியத் தலைவரின் காலத்திலும் பல்துறை விற்பன்னர்களாகவே இருந்தனர். சிறிலங்கா அரசாங்கமே வைத்திருக்காத நீர்மூழ்கி கப்பலை புலிகள் வைத்திருந்தார்கள், போராட்ட ஆரம்ப காலத்தில் பசீலன் ‡ 2000, குரப்பா- 5000, ஜொனி மிதிவெடி, பல்குழல் துப்பாக்கி போன்ற பல நவீன ஆயுதங்களை தமிழீழத்தில் தாங்களாவே தயாரித்து ஈழத்துப் போர்க்களத்தில் பயன்படுத்தியவர்கள் புலிகள்.

ஆனால், போராட்டத்திற்கு பின்னர், இன்று தாயகத்தில் சிறப்பான ஒரு அபிவிருத்தியை முற்கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் அரைகுறை வேலைகளைச் செய்கின்றது. உரிய திட்டங்களை வகுக்காமல் பலவீனமான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. மிக விரைவில் அழிவடையக்கூடிய கட்டுமானங்கள், மக்களை அவலங்களுக்குள் தள்ளக்கூடிய செயற்றிட்டங்களையே சிங்கள அரசு தமிழர் பிரதேசங்களில் செயற்படுத்துகின்றது.

இதுவும் ஒரு அடக்குமுறை யுக்தி. உறுதியற்ற, பலவீனமான அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது,  வருடாவருடம் மழை காலங்களில் தமிழர்கள் அவலங்களை பற்றியே சிந்திப்பார்கள், அவர்களிடம் இருந்து போராட்ட உணர்வையும், சுய சிந்தனை உணர்வையும் மழுங்கடிக்கலாம் என சிங்களம் கருதுகின்றது. தமிழர்களை நிம்மதியாக வாழ விடுகின்ற போது அவர்கள் உரிமைகள் தொடர்பாக சிந்திப்பார்கள். ஆக்கிரமிப்பு எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள். இவர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கு அரைகுறை அபிவிருத்தியும் ஒரு வழி என சிங்கள தேசம் கருதுகின்றது.

அண்மையில் தமிழர் தாயகத்தில் புரெவி புயல் மற்றும் பெருமழை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் சிங்கள தேசத்தால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். அபிவிருத்தி தொடர்பாக தமிழ் அதிகாரிகளை முடிவெடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. வீதி அபிவிருத்தியாக இருப்பினும், கட்டுமான அபிவிருத்தியாக இருப்பினும் தென்னிலங்கையில் இருந்து வரும் பொறியியலாளர்களே இறுதி முடிவுகளை எடுக்கின்றனர். இதில் தமிழின அடக்குமுறை அரசியல் பின்பற்றப்படுகின்றது.

குறிப்பாக, யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தென்னிலங்கை அரசாங்கத்தின் நிதியிலும் வடக்கு மாகாண அரசாங்கத்தின் நிதியிலும் இவை இடம்பெற்றன. முறையான திட்டமிடல் இன்றி இந்த கட்டுமானங்கள்  மேற்கொள்ளப்பட்டமையால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. யாழ். புறநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகள் இன்றி இரவல் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலேயே வசிக்கின்றனர். தங்களுக்கு வீடு வழங்குமாறு தொடர்ந்தும் அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து கல்லுண்டாய் வெளியில், கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அரச காணியில் 50 வரையான வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.

இப்பிரதேசம் மழை வெள்ளம் தேங்கும் இடம் என்பது அதிகாரிகளுக்கு தெரியாத விடயம் அல்ல. வருடாந்தம் கடும் மழை காலத்தில் இங்கு கடல் போல தண்ணீர் தேங்குவதும் மாசி, பங்குனி மாதங்கள் வரை இப்பகுதியில் தண்ணீர் நிற்பதும் வழமை. ஏற்கனவே, இப்பகுதியில் முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் 15 வரையான வீடுகளை அமைத்து திருவாவடுதுறை கிராமம் என பெயர் சூட்டியிருந்தார். ஆனால், மழை வெள்ளம், இயற்கை அனர்த்தம் காரணமாக சில வருடங்களிலேயே மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறிவிட்டனர்.

இந்த அனுபவ அறிவு மற்றும் தண்ணீர் தேங்கும் தொழில்நுட்ப அறிவு எதுவும் இன்றி ஐம்பது வரையான குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு யாழ்.மாவட்டச் செயலக அதிகாரிகள் முடிவெடுத்தனர். பல்துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்பட்டன என யாழ்.மாவட்டச் செயலகம் கூறுகின்றது. இந்த வீடுகளில் ஒரு மழை காலத்திற்குக்கூட வசிக்க முடியாமல் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக இந்த மக்கள் வெளியேறினர். இந்த வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

மக்களின் உடமைகளைக்கூட அங்கு வைக்க முடியவில்லை. அனைத்தையும் எடுத்துக்கொண்டு மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. இப்போதுவரை அங்கு மக்கள் மீளக்குடியமர முடியவில்லை.

இதேபோன்று, யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் மழை வெள்ளம் ஆக்கிரமித்தது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழ நின்ற மழை வெள்ளம் அது குளம் போலவே காட்சியளித்தது. இதேபோன்று யாழ்.மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பல வீடுகளுக்குள் இரவோடிரவாக மழை வெள்ளம் புகுந்தது. வயதானவர்கள் கட்டில்கள், வாங்குகளில் ஏறி அமர்ந்திருக்கவேண்டிய அவலம் ஏற்பட்டது.

நல்லூர் சுற்று வீதிகள் உட்பட பல வீதிகளால் மக்கள் போக்குவரத்து செய்ய முடியவில்லை. எங்கும் ஒரே வெள்ளக்காடாக காட்சியளித்தது. நல்லூர் பிரதேச செயலர் பிரிவு, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவு, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு போன்ற இடங்களில் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று, யாழ்ப்பாணம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் தேசம். இங்கு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களோ, நன்னீர் ஆறுகளோ இல்லை. ஆகையால் நிலத்தடி நீரை சேமிக்கவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உண்டு. இதற்காக பெருமளவு நிதியில் பல இடங்களில் மண் அணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றினாலும் உரிய பயன் கிட்டவில்லை என கவலை வெளியிடப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி வரை அமைக்கப்பட்ட உவர் நீர் தடுப்பணை கடல் அலைகளால் உடைத்தெறியப்பட்டமை தொடர்பாக அப்பிரதேசத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் கவலையடைந்திருக்கின்றனர். அது தொடர்பாக அப்பிரதேசத்திற்குரிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அந்த அணைக்கட்டு உரிய தொழில்நுட்ப அறிவுடன் அமைக்கப்படவில்லை எனவும் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியிருக்கின்றார். அண்மையில் பெய்த கனமழை காரணமாக அணைக்கட்டின் ஒன்றரை கிலோமீற்றர் வரையான பகுதி சேதமடைந்துள்ளது. இதனுVடாக நன்னீர் கடலுக்குள் சென்றவண்ணம் இருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் எத்தனையோ தமிழ் பொறியியலாளர்கள் இருந்தும் அவர்களின் ஆலோசனைகள் பெறப்படாமல் சிங்களவர்களின் ஆலோசனைகளின் பேரிலேயே அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இது ஒற்றையாட்சியால் இழைக்கப்படும் அநீதி. இந்த நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். தமிழர்களின் தேசக்கட்டுமானம் எப்படி அமையவேண்டும் என்பதை தமிழர்களே தீர்மானிக்கவேண்டும். அப்போதுதான் தமிழர்கள் எந்தக் காலத்திலும் நிம்மதியாக வாழ முடியும். தமது தலைவிதியை தமிழர்களே தீர்மானிக்கும்போதுதான் தமிழர் தேசம் தலை நிமிரும்.