சுட்டுவிரல் ஐ.நா வரையும் நீளும் - ஆசிரிய தலையங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாத அரசிற்கு பிரித்தானியாவின் கீனி மீனி (Keenie Meenie) என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் உதவிய வியடம் கடந்த சில வாரங்களாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்புப் படையான SAS இன் சிறப்பு விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது கீனி மீனி சேவை (Keenie Meenie Service - KMS) என்கின்ற தனியார் கூலிப்படை. உலக நாடுகளில் நடக்கும் போர்களில், இராணுவ நடவடிக்கைகளில் ஒடுக்குமுறைகளில் சேவையை வழங்கி, தங்கள் பொருளாதாரத்தை வளர்க்கும் ஒரு தனியார் நிறுவனம் இது.

பிரித்தானிய ஊடகவியலாளர் ஃபில் மில்லர் (Phil Miller) கடந்த சில மாதங்களின் முன் ‘கீனி மீனி: போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர் (Keenie Meenie: The British mercenaries who got away with war crimes)’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார். சேமிப்பக காட்சிகள், பிரித்தானிய உளவுத்துறைக் கோப்புகள், ஓய்வு பெற்ற தூதுவர்கள், முன்னாள் KMS கூலிப்படையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோரின் ஆதாரங்களைப் பெற்று வெளிவந்த இந்த ஆவணப் படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பில் மில்லர் மற்றும் லூ மெக்னமாரா ஆகியோரால் இயக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தில் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடாத்திய இனப்படுகொலையில், இந்த பிரித்தானிய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து பல ஆதாரங்கள் வெளிவந்திருந்தன.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்த கேள்விகளை இந்த ஆவணப்படம் எழுப்பியிருந்தது. 1983ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன விடுதலைப் புலிகளை அழிக்க பிரித்தானியாவின் உதவியை நாடினார். ஆனால், தாம் நேரடியாக இதில் ஈடுபடுவது, தங்கள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதிய பிரித்தானியா, சிறீலங்காவிற்கு அடையாளம் காட்டிய நிறுவனம்தான், இந்தக் கீனி மீனி என்று கூறப்படுகின்றது. 

யேமன், ஓமான் போன்ற நாடுகளில் இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட இப்படையினர் கிளார்ச்சியாளர்களை வீழ்த்துவதில் பெற்றிருந்த வெற்றி அனுபவங்களை தெரிந்துகொண்ட ஜெயவார்த்தன, தமிழின அழிப்பிலும் அவர்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின அழிப்பில் முன்னின்று செயற்பட்ட சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படைக்கு கீனி மீனி ஆரம்ப பயிற்சிகளை வழங்கியது மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தில் வான்வழித் தாக்குதல்களிலும் இவர்கள் நேரடியாக ஈடுபட்டார்கள் என்பதையும் ஆவணப்படம் வெளிப்படுத்தியது. அத்துடன் மட்டும் நின்றுவிடாது, அப்பாவி மக்களை படுகொலை செய்வதற்கு போத்தல்களில் கைக் குண்டுகள் வைத்து வெடிக்கை வைத்தது போன்ற பல்வேறு படுகொலை வடிவங்களையும் இவர்கள் கையாண்டதை, இந்நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த பிரித்தானிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ஹோல்வார்டி விளக்கியிருந்தார்.

அதுமாத்திரமின்றி இந்தியப் படையின் இலங்கை வருகையின் பின்னர், தமிழின அழிப்பிற்கு இந்திய அமைதிப் படையினரும் இந்த கீனி மீனியினரின் சேவையை இரகசியமாகப் பெற்றுக்கொண்டிருந்துள்ளனர் என்பதையும் இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்தியது. அதாவது இலங்கைத் தீவில் மிகமோசமான இனப்படுகொலை நடைபெற்ற 1983 முதல் 2009 வரையான சுமார் 25 ஆண்டுகள் இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் அரச வன்முறைகளில் பிரித்தானியாவிள் பங்களிப்பைப் புரிந்துகொள்ள கீனி மீனி உதவும் என இந்த ஆவணப்படத்தை உருவாக்கிய பில் மில்லர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது, பில் மில்லர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானிய காவல்துறை போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, கீனி மினி நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் பிரித்தானிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால், தமிழின அழிப்பில் ஐ.நாவும் மிக முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளதை யார் கேள்வி எழுப்புவது. இனப்படுகொலை மிக உச்சம்பெறத் தொடங்கியவேளை, அந்தப் போரைத் தடுத்து நிறுத்தவேண்டியது அல்லது அந்தப் போரை நேரில் இருந்து கண்காணித்திருக்க வேண்டிய ஐ.நா., தன் பொறுப்பில் இருந்து விலகியதுமட்டுமல்ல, அந்த மக்களைக் கைவிட்டு வெளியேறியதன் மூலம் சிறீலங்காவின் சாட்டியமற்ற இனப்படுகொலைக்கு துணையும் புரிந்துள்ளது. இதற்காக ஐ.நா வை எந்த நீதிமன்றின் முன் நிறுத்தவது.

இந்தக் கேள்விகளுக்கு இடையில்தான், இலங்கை போன்ற நாடுகளில் நடந்த இனப்படுகொலை ஐ.நாவின் தோல்வி என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தான் எழுதி வெளியிட்டுள்ள ‘உறுதியளிக்கப்பட்ட நிலம் (A Promised Land)’ என்ற தனது ஜனாதிபதி ஆட்சிக்கால அனுபவம் குறித்து எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா. உருவாக்கப்பட்டதன் நோக்கங்களை நூலில் புகழ்ந்துள்ள பராக் ஒபாமா, ஆனால் அது தனது உரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடந்த இன ரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கு ஐ.நா. வின் உறுப்பு நாடுகளில் கூட்டு முயற்சிகளோ வழிமுறைகளோ இருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதாவது இலங்கையில் நடந்தது ஒரு இனரீதியான பிரச்சனை என்பதை இவர் தனது நூலில் உறுதிப்படுத்தியிருக்கின்றார். இவரது கருத்தானது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை மேலும் வலுப்படுத்தியிருப்பதுடன், சர்வதேச விசாரணையின் தேவையையும் உணர்த்தியிருக்கின்றது.

இறுதிப் போரின்போது நேரில் நின்று சுமார் பன்னிரண்டு நாடுகள் சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தியதாகக் கூறப்படுகின்ற நிலையில், விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள் என்றுதான் இன்றுவரை ஐ.நாவும், சில வல்லரசு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், அண்மையில் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த சமரசிங்க, தமிழீழத் தேசியத் தலைவர் தப்பித்தவிடுவார் என்ற காரணத்திற்காகவே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பாட்டுப் பகுதிக்குள் இருந்த மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச சர்வதேச நாடுகளுக்கு கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒருவரை அழிப்பதற்காக ஒன்றரை இலட்சம் வரையான மக்களை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்காவனர்களை காணாமல்போகச் செய்து, பெருமளவான மக்களை படுகாயப்படுத்தி நடைப்பிணங்களாக்கியது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்று சர்வதேச ரீதியில் குற்றம்சாட்டிய அதே சிங்களம், இப்போது தங்கள் வாயாலேயே தாங்கள்தான் மக்களை வெளியில் வரவிடவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்போது எழும் கேள்வி, இவ்வாறான ஏராளமான ஆதாரங்களை தமிழர்கள் தம் கைவசம் வைத்துக்கொண்டு, தமது உரிமைக்கும், நீதிக்குமான போராட்டத்தை ஏன் தாமதப்படுத்துகின்றார்கள், எவ்வாறு அடுத்த கட்டங்களுக்கு முன்னகர்த்திச் செல்லப்போகின்றார்கள் என்பதுதான்.