மக்களாட்சி முறைமை வெல்ல...

சிந்துவெளி தாண்டிவந்து
எம் சிந்தையைச் சீரழித்த
வண்டவாள வரவில்
வரலாற்றில் பிண்டமான கதைதான்
படித்து உணர்ந்தோமா
உறுதியான உடலாய்
உள்ளத் தெளிவாய்
உயிராய்
தமிழாய் தாய்நிலமாய்
தலைவனாய்
தமிழ் இனஅழிப்பில்
கொன்றொழிக்கப்பட்ட
மக்களின் நினைவாய்
விடுதலைக்காய் தமை ஈகம்செய்த
மானமாவீரர்களின்
நினைவொளியாய்
எம்மிலே இறைந்தொளிர்ந்து
வாழ்வென்னும்
பெரும் கடல்கடக்க
வல்லவழிதானிருக்க
எங்கெங்கோ அலைந்து
வருந்தி உழைத்ததெல்லாம் கொட்டி
வாழ்நாளில் காண்பதென்ன
தொடரும் எம்
விடுதலைப் போராட்ட வரலாற்றில்
புதுடில்லி, சிங்கப்பூர், மும்பை,
முள்ளிவாய்க்கால்வரை நடந்த
கடைந்தெடுத்த கயமைக் கதைகளெல்லாம்
அறிந்துதான் தெளிந்தோமா
அரபு வசந்தம் தொடங்கி
கடந்த பதினொராண்டுகளாய்
தமிழ் உலகில் நடாத்தப்படும்
தகிடு தத்தங்கள்
தறுக்கணிப்பு வேலைகள் பல செய்து
திட்டமிட்ட முறையில்
தமிழின் அழிப்பு
நடைபெறுவதுதான் அறியோமோ
சிரியப்போரோடு
இன்று நடப்பதுதான்
சீர்திருத்த வழிமுறையோ
மக்களாட்சிக் கோட்பாட்டின்
மகோன்னதம் வளர
மன்னாதி மன்னர்கள்
வாக்களிக்கும் அகவையில்
முடிவெடுக்கும் தெளிவில்
வளர்ந்திருக்க வேண்டாமோ
பெற்றோரே பெற்றோரே
கற்றோரே கற்றோரே
சான்றோரே சான்றோரே
சமூக மேம்பாட்டிற்கு உழைப்போரே
இயற்கையைப்பேணி
இளந்தளிர்களெல்லாம்
இன்னலின்றித்தான் வளர
எல்லோரும் உழைப்போமே
இன்பம்சூழ் உலகொன்று படைப்போமே
பட்டம்பெற்ற
சட்டமா மேதைகளின்
கூட்டுத் தலைமைத்துவம்
பட்டமரங்களாய் நிற்பதால்
ஏமாற்றம் அடைந்து நிற்கும்
மக்களின் மனங்களில்
மாமனிதத்துவம் கொண்ட
தலைமைகள் வளர
மண்ணிலே வேலைகள்
நடைபெறல் வேண்டும்
தலைமுறைகளெல்லாம்
தகைமைகொள் கல்விகற்று
பேராற்றல் கொள்ளவேண்டும்
தமிழ்த்துவம் தரணியெங்கும்
தலைமைத்துவம் கொண்டோங்கவேண்டும்

- அராலியூர் கலைமகள் பிரான்ஸ்