செய்திகளும், எழும் கேள்விகளும் - மாயவள்

3செய்தி: சிறீலங்கா என்ற தீவின் புராதன காலப் பெயர் ஈழம் என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் பத்திரிகையின் பயணக் கேள்விக் கொத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழும்கேள்வி: இந்த வரலாற்று உண்மை எத்தனை தமிழர்களுக்குத் தெரியும்?

....

செய்தி: அமெரிக்காவிற்கு 200 மில்லியன் முகக் காப்பு அங்கிகளை சிறீலங்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.

எழும்கேள்வி: சீன உற்பத்திப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்திருப்பதால் சீனாவில் தயாராகும் முகக் காப்பு அங்கிகளை அங்கிருந்து இறக்குமதி செய்து அவற்றை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் திரிகோண வாணிபத்தில் சிறீலங்கா இறங்கி விட்டதோ?

....

செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எழும்கேள்வி: தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இன அழிப்பே இல்லை என்று ஒரு தசாப்தமாக அடித்துக் கூறி வரும் தனது பட்டத்து இளவரசர் சுமந்திரனுக்கு எப்பொழுது போதிசத்துவர் ஞான உபதேசம் செய்வாரோ?

....

செய்தி: மகளிர் தினத்தன்று கப்டன் அங்கயற்கண்ணியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செய்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு சிவஞானம் சிறீதரன் தூபமிடுகின்றார் என்று மாரிமுத்து ராஜா என்ற கிளிநொச்சிவாசி சிறீலங்கா காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

எழும்கேள்வி: சிவஞானம் சிறீதரனை போல் தமிழினத்திற்குத் துரோகம் இழைப்பதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காண்பிப்பதற்கு இன்னும் எத்தனை பேர் தான் கிளம்பப் போகின்றார்களோ?

....

செய்தி: ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் தலைவரும், ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக விளங்குபவருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் புதிய இந்தியத் தூதுவர் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

எழும்கேள்வி: சூளைமேட்டுப் படுகொலை தொடர்பாக விசாரிப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பாரோ?

....

செய்தி: கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை எரியூட்டுவது இஸ்லாமிய மரபுப்படி ஹராம் (பாவம்) என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

எழும்கேள்வி: தென்தமிழீழத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் ஒட்டுக்குழுவினரும் கொன்று குவித்தும், உயிருடன் ரயர் போட்டு வீதிகளில் எரியூட்டியதும் இன்னமும் ஹக்கீமின் பார்வையில் ஹராமாக (பாவமாக) தென்படவில்லையோ?