அரிச்சந்திரன் பதில்கள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு அரிச்சந்திரனும் பயந்துவிட்டாரா..?
- மதிவதனன் சங்கரப்பிள்ளை பிரான்ஸ்

சிங்களப் பேரினவாதத்தின் அச்சுறுத்தலைவிட, கொரோனா ஒன்றும் அத்தனை பேரச்சுறுத்தலாக எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்குள் 0இருந்தால் உங்களைத் தாக்கமாட்டேன் என்றது கொரோனா. சொன்னதுபோலவே, வீட்டுக்குள் வந்து அது தாக்கவில்லை. வெளியில் சென்று வந்தவர்களையே அது தாக்கியது. அவர்களாலேயே வீட்டில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாதுகாப்பு வலயத்திற்குள் வந்தால் உங்களைத் தாக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு, அந்தப் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்துத்தானே அதிக தமிழர்களைக் கொன்றொழித்து சிங்களப் பேரினவாதம்.

உணவுதான் மருந்தென்றது கொரோனா. ஆனால், மருந்துக்குக்கூட உணவு கிடைக்கவிடாமல் பட்டினி போட்டுக் கொன்றொழித்தது சிங்களம்.

நோய் தாக்கினாலும் அதில் இருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு 15 நாட்கள் வரை அவகாசம் தந்தது கொரோனா. ஆனால், உயிர் தப்புவதற்கு ஒரு நொடியைக்கூட வழங்காமல் இரவும் பகலும் என 24 மணி நேரமும்,தப்பிபதற்கு ஒற்றை வழிகூடக் கிடைத்துவிடாமல் கடல், வான், தரை என முப்படைகளையும் கொண்டு தமிழ் மக்களைத் தாக்கியழித்ததே சிங்களம். இப்போது சொல்லுங்கள் கொரோனாவிற்கு பயப்படும் அளவிற்கு அது என்ன சிங்களப் பேரினவாதத்தைவிட அத்தனை கொடூரமானதா?
 
முள்ளிவாய்க்கால் இராணுவ முற்றுகை வலயத்திற்குள் இருந்து தலைவர் தப்பிச்சென்றிருப்பார் என்பதை இனியும் நம்பவேண்டுமா? அந்த முற்றுகை வலயத்திற்குள் இருந்து தப்பித்தான் செல்லமுடியுமா?

- க.முரளிதரன் பொபினி பிரான்ஸ்

தேனீக்களின் வாழ்க்கை முறையும், தகவல் பறிமாற்றமும் மிகவும் ஆச்சரியத்திற்குரியவை. மனிதர்கள் நம்பமுடியாத அளவிற்கும், வியக்குமளவுக்கும் தேனீக்களிடம் மதிநுட்பம் மிகுந்திருக்கின்றது. மனிதர்களின் உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு அளப்பரியது. தேனீக்கள் இல்லையென்றால் மனித இனமே பூமியில் வாழமுடியாது எனும் அளவிற்கு இந்தப் பூமிப்பந்தின் இயங்கியல் விதி இருக்கின்றது. இந்தத் தேனீக்களில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம், அது கட்டும் தேன் கூட்டின் இரகசியமும் அதிலுள்ள ராணித் தேனிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும்.

d

ராணித் தேனியைப் பாதுகாத்து, தமது தலைமுறைகளை பாதுகாப்பதுதான் தேன்கூட்டிலுள்ள ஏனைய தேனீக்களின் தலையாய கடமை. தேன் கூட்டில் ஏகப்பட்ட நுழைவாயில்கள் இருப்பதை காணலாம். அந்தக் கூட்டுக்கு ஆபத்து நேருமாயின் அதில் இருந்து ராணித் தேனீயைக் காப்பாற்றிச் செல்வதற்காக அந்தக் கூட்டில் இரகசியப் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மனிதர்களால் கூடக் கண்டறிவது முடியாத காரியம். அந்தளவுக்கு மதிநுட்பத்துடன் அந்த இரகசியப் பாதை கூட்டில் அமைக்கப்பட்டிருக்கும். ஆபத்து நேரும்போது ராணித் தேனி அங்கிருந்து தப்பிச்சென்றுவிடும். 

s

தேனீக்களுக்கே இத்தனை திறமை இருக்கும்போது, முப்பது ஆண்டுகளில் முப்படைகளையும் கட்டியமைத்து, உலகே வியந்து பார்த்த விடுதலைப் புலிகளிடம் எத்தனை திறமைகள் இருந்திருக்கும்! 

sமணலாற்றுக் காட்டிற்குள் தான் தலைவர் இருக்கின்றார் என்று உறுதியாகத் தெரிந்தபின்னர்தான் இந்திய இராணுவம் அந்தக் காட்டை முற்றுகைக்குள் கொண்டுவந்தது. நித்திகைக்குளத்தில் பாரிய இராணுவத்தளம் அமைத்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையை களத்தில் இறக்கி, மணலாற்றுக்; காட்டை முழுமையாக சுற்றிவளைத்திருந்தது. செக்மேற் நடவடிக்கை முதல், பல்வேறு பெயர் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் தமது சிறப்புப் படைகளைக் கொண்டு இலங்கைத் தீவை விட்டு இந்தியப் படைகள் வெளியேறும் வரைக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து. இடைக்கிடையே, தலைவரைக் கொன்றுவிட்டதாக செய்திகளும் வெளியிட்டு, தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அந்த முற்றுகை வலயத்திற்குள் இருந்துதான் முன்னரைவிட இன்னும் பெரும் பலத்தோடு தலைவர் எழுந்து வந்தவர் என்பது உலகறிந்த வரலாறு.

முற்றுகை வலயத்திற்குள் இருந்து தப்பிச்செல்வதற்கும், தாக்குப்பிடிப்பதற்கும் ஏன் முற்றுகை வலயத்தை தகர்த்தெறிவதற்கும் விடுதலைப் புலிகளுக்கு யாரும் கற்றுத்தரத் தேவையில்லை. விடுதலைப் புலிகளின் அனுபவங்களைத்தான் இன்று உலகின் பல இராணுவங்களும் தமக்கான பாடமாகக்கூடப் படிக்கின்றன. ஆயுத வழிப் போராட்டத்தை விரும்பியவரல்ல தலைவர். தமிழர்களின் விடுதலையை விரும்பியவர். எனவே, அந்த விடுதலையைப் பெறுவதற்காக எந்தவொரு முடிவையும் எடுக்கும் நிலையிலேயே முள்ளிவாய்க்காலில் தலைவர் இறுதிவரை உறுதி தளராது நின்றிருந்தார். அங்கிருந்து தப்பிச்செல்ல வேண்டுமா அல்லது இறுதி வரை போராடுவதா என்ற முடிவை அவரே எடுத்திருப்பார். இங்கு முற்றுகை வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்லமுடியுமா? என்ற சந்தேகத்திற்கு இடமில்லை. அதேவேளை, நம்புவதா? வேண்டாமா? என்பது அவர் அவர்கள் மனநிலையைப் பொறுத்தது.