அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும் - பிலாவடிமூலைப் பெருமான்

வணக்கம் பிள்ளையள்.

என்னடா கன நாளாகக் கிழவனைக் காணவில்லை என்றதும் ஆளைக் கொரோனா கொண்டு போட்டுது என்று எல்லோரும் நினைச்சிட்டியளோ?

உந்தக் கொரோனாவுக்குப் பயந்து நான் வீட்டை விட்டு வெளிக்கிட்டு மாசக் கணக்கு பிள்ளையள். ஆரம்ப நாட்களில் நான் யன்னலைக் கூடத் திறந்து எட்டிப் பார்க்கிறதில்லை என்றால் நினைச்சுப் பாருங்கோவன்.

என்ரை கூட்டாளிமார் கொஞ்சப் பேர் எனக்கு ரெலிபோன் அடிச்சும் பார்த்தைவையள். எனக்கோ ரெலிபோனுக்குள்ளால் கொரோனா பரவி விடும் என்று பயம். எதுக்கு வீண் வில்லங்கம் என்று நானும் தொலைபேசி அழைப்புக்களை எடுக்காமல் விட, கடைசியில் நான் மண்டையைப் போட்டுட்டேன் என்று ஆரோ கதையைக் கட்டி விட்டிட்டாங்கள்.

பிறகென்ன? மனித வைரஸ் பிலாவடிமூலைப் பெருமானைக் கொரோனா வைரஸ் கொன்று விட்டிட்டுதாம் என்று கொஞ்சப் பேர் தலைகால் தெரியாமல் கூத்தாடினவையளாம். எல்லாம் என்ரை நக்கல் நளினக் கதையளாலை கொதிச்சுப் போயிருந்த ஆட்கள் தான் பிள்ளையள். இப்படியே போனால் எனக்கு எட்டுச் செலவு செய்கிறதாகச் சொல்லி இறைச்சியும், சோறும் சமைச்சு தண்ணியடிச்சுக் கூத்தடிப்பாங்கள் என்று நினைச்சுப் போட்டுத் தான் இப்ப வெளிக்கிட்டு வந்திருக்கிறன் பிள்ளையள்.

3

அதை விடப் பிள்ளையள் கிட்டடியில் உந்த சுமந்திரன் என்ற விசரன் கதைச்ச விசர்க் கதையைக் கேட்டுப் போட்டு, விசர் பிடிச்சுப் போய் இனியும் சும்மா இருக்கேலாது என்று தான் வெளிக்கிட்டு வந்தனான்.

தேச சுதந்திரத்திற்காக எங்கடை பெடி, பெட்டையள் எல்லாம் தங்கடை உயிரைக் கொடுத்துப் போராடேக்குள்ளை, கொழும்பிலை இருக்கிற தன்ரை சிங்களக் கூட்டாளிமாரோடை பைலா போட்டுக் கொண்டிருந்தவர் உவர்.

உவருக்கெல்லாம் தமிழரின்ரை உரிமைப் போராட்டம் பற்றி ஏதாவது தெரியுமே? ஆனாலும் என்ன, அடுப்பேறிய சட்டிக்கு காய்கிறதைத் தவிர வேற வழியில்லை என்கிற மாதிரி, தன்னையும் ஒரு சிங்களவனாக நினைச்சுக் கொண்டு வாழ்ந்த சுமந்திரனிட்டை இருந்து எங்கடை விடுதலைப் போராட்டம் பற்றி நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது தான் பிள்ளையள். அதுக்காக எங்கடை பிள்ளைகளின்ரை தியாகத்தையும், எங்கடை தம்பியை – எங்களுக்கெல்லாம் முகவரியைப் பெற்றுத் தந்த எங்கடை தேசியத் தலைவரை – இவர் கொச்சைப்படுத்தேக்குள்ளை நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது பிள்ளையள்.

சுமந்திரனின்டை விசர்க் கதையளுக்கு சும்மா பதில் கருத்து எழுதிப் போடுகிறாதாலையும், அவரைக் கண்டிக்கிறதாலையும் எதுவும் நடக்கப் போகிறதில்லை. இல்லையென்றால் எங்கடை விசைப்பலகை வீரர்கள் சிலபேர் முகநூலில் சக்கர வியூகம் வகுத்து நாலு கருத்துக்களை எழுதிப் போட்டு ஏதோ குருசேத்திர களம் கண்டது மாதிரி நாங்களும் இருக்க ஏலாது பிள்ளையள். உதுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் எங்கடை தம்பி அன்ரன் பாலசிங்கம் இல்லாமல் போய் விட்டாரே என்கிறது தான் எனக்கு மிகப்பெரிய கவலை பிள்ளையள்.

இன்றைக்குத் தம்பி பாலா உயிரோடை இருந்திருந்தால் எந்த நாயாவது எங்கடை தலைவர் பிரபாகரனைப் பற்றியோ, இல்லாட்டி எங்கடை சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ குரைச்சிருக்க முடியுமே? எல்லாரும் வாலைச் சுருட்டிக் கொண்டு எங்கடை தம்பி பிரபாகரனுக்குப் பின்னால் பவ்வியமாக எல்லே நின்றிருப்பீனம். எல்லாம் எங்கடை தலையெழுத்துப் பிள்ளையள்.

ஆனாலும் பிள்ளையள் அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும் என்று அந்த நாட்களில் எங்கடை ஆச்சி சொல்கிற மாதிரி, வருகின்ற தேர்தலில் சுமந்திரனைத் தோற்கடிச்சு எங்கடை சனம் வீட்டுக்கு அனுப்ப வேணும். அதோடை பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீனின்ரை மனிச வடிவங்களாக இருக்கிற வீட்டுச் சின்னக்காரங்கள் எல்லோரையும் எங்கடை சனம் வீட்டுக்கு அனுப்போணும்.

ஆடுகிற பல் விழுந்து விடுகிறதே மேல் என்கிற மாதிரி இனி உந்தத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இனியும் தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கிறதில் எந்தப் பிரயோசனமும் இல்லை பிள்ளையள்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்கிற மாதிரித் தான் இப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ரை நிலைமை இருக்குது. கிழட்டுச் சம்பந்தராலை நடக்க முடியவில்லையாம். ஆளுக்கு இடைக்கிடை மாறாட்டமும் ஏற்பட்டு விட்டதாம். அண்டைக்கு இப்படித் தான் முன்னாள் எம்.பிமாரோடை மகிந்த ராஜபக்ச நடத்தின கூட்டத்தில் மெதமுலானை மாத்தாயாவிட்டை கடிதம் ஒன்றைக் குடுக்கிறதுக்கு என்று எழும்பின சம்பந்தர், தான் எங்கே போகிறேன், என்ன செய்யப் போகிறேன் என்று இடையில் குழம்பிப் போய் நின்றவராம். உடனே உந்த விசரன் சுமந்திரன் தான் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடி, கிழட்டுச் சம்பந்தரைக் கைத்தாங்கலாகப் பிடிச்சுக் கொண்டு மெதமுலானை மாத்தையாவிட்டை கூட்டுக் கொண்டு போய் கடிதத்தைக் குடுக்கிறதுக்கு உதவி செய்தவராம்.

போகிற போக்கைப் பார்த்தால் எங்கடை கிழட்டுச் சம்பந்தர் மாறாட்டம் முத்திப் போய், கருணாநிதி மாதிரி சக்கர நாற்காலியில் குறட்டை விட, தனக்குத் தானே செயல்தலைவர் பதவி குடுத்து திருத்த முடியாத கழுதைகளை – நான் திமுகவைச் சொன்னேன் - ஸ்ராலின் மேய்ச்ச மாதிரி எங்கடை கூத்தமைப்புக்காரைக் கொஞ்ச நாளைக்கு உந்த விசரன் சுமந்திரன் ஏய்ச்சுக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

எது எப்படியோ, எங்கடை சனம் விழிப்புணர்வு பெற்று உந்தச் சுமந்திரனுக்கும், கூத்தமைப்புக்காரருக்கும் தகுந்த பாடம் புகட்டுகிறது என்று முடிவு செய்தால், பிறகு யாரும் ஆணி பிடுங்க முடியாது பாருங்கோ.

எங்கடை தேசியத் தலைவரையும், எங்கடை மாவீரர்களையும், எங்கடை விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தின சுமந்திரனுக்கும், அவருக்கு ஆலவட்டம் பிடிக்கிற கூத்தமைப்புக்காரருக்கும் எங்கடை சனம் குடுக்கிற அடியில் தான் எல்லாம் இருக்குது. அதுக்குப் பிறகு எண்ணெய்யை தடவிப் போட்டுக் குப்பர விழுந்து புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்கிற மாதிரித் தான் இவையளின்ரை கதை இருக்கும்.

ஏதோ, நான் சொல்லிப் போட்டேன். எல்லோரும் விளங்கி நடந்தால் சரி.

வேறை என்ன பிள்ளையள்? வரட்டே?