ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 1 அவிழ்க்கப்படும் இன்னொரு முடிச்சு - கலாநிதி சேரமான்

18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்துத் தமிழீழ நடைமுறை அரசை அழித்ததைத் தமது ஆயுதப் படைகள் புரிந்த மிகப்பெரும் சாதனையாகக் கூறிக் கடந்த பதினொரு ஆண்டுகளாக சிங்களம் மார்தட்டி வந்தாலும், உண்மையில் சிங்களப் படைகள் ஈட்டிய யுத்த வெற்றிக்கு அச்சாணியாகத் திகழ்ந்தது இந்தியப் பேரரசு தான்.

சிங்களத்தின் யுத்த வெற்றிக்கு, அமெரிக்காவின் பின்னால் அணிவகுத்து நின்ற மேற்குலகமும், சீனா, இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் காத்திரமான பங்களிப்புக்களை நல்கியிருந்தாலும், இதில் இந்தியா வகித்த அச்சாணிப் பாத்திரத்துடன் அவற்றை ஒப்பிட முடியாது. 5இதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தை 09.02.2020 அன்று புதுடில்லியில் வைத்துச் சிங்களப் பிரதமர் மகிந்த ராஜபக்சவே வழங்கியிருந்தார்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தை சிங்களம் தோற்கடித்ததில் அச்சாணிப் பாத்திரத்தை வகித்த இந்தியப் பேரரசு, தமிழீழ மண்ணில் மீண்டுமொரு ஆயுத எதிர்ப்பியக்கம் தோற்றம் பெறுவதைத் தடுப்பதற்கான எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளைக் கடந்த பதினொரு ஆண்டுகளாக முன்னெடுக்கின்றது.

இவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகள் சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்களப் புலனாய்வுத்துறையினர் என்று குறிப்பிடப்படுவது சிறீலங்கா அரசின் படையப் புலனாய்வுத்துறை (எம்.ஐ), கடற்படைப் புலனாய்வுத்துறை (என்.ஐ), காவல்துறைப் புலனாய்வுத்துறை (சி.ஐ.டி) மற்றும் அரச புலனாய்வுச் சேவை (எஸ்.ஐ.எஸ்) ஆகிய கட்டமைப்புக்களையாகும். இதே போன்று இந்தியப் புலனாய்வுத்துறையினர் என்று இப்பத்தியில் குறிப்பிடப்படுவது வெறுமனவே இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ நிறுவனத்தை மட்டுமன்றி, இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பாக விளங்கும் ஐ.பி நிறுவனம், படையப் புலனாய்வு அமைப்பான ஐ.எம்.ஐ மற்றும் தமிழக காவல்துறையின் புலனாய்வு அமைப்பாக விளங்கும் கியூ பிரான்ஞ்ச் ஆகியவற்றையும் ஆகும்.

நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி, ஈ.என்.டி.எல்.எவ், கருணா குழு ஆகிய ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்தியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கு நிலையில் இல்லாத தற்போதைய சூழமைவில், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறுவதைத் தடுப்பதற்கான எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில், இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து சக போராளிகளைக் காட்டிக் கொடுத்த முன்னாள் போராளிகள் சிலரையும் இந்தியப் புலனாய்வுத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இந்தியப் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வரும் இவ் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் வெறுமனே புலம்பெயர் தேசங்களில் இயங்கும் கே.பி குழு மட்டும் ஈடுபடுத்தப்படவில்லை. இங்கு கே.பி குழு எனக் குறிப்பிடப்படும் கும்பல், பல்வேறு அணிகளைக் கொண்டது. ருத்ரா அணி, விநாயகம் அணி, மனோ-சர்வே அணி என அவற்றை வகுக்கலாம்.

இக் கும்பலை விட ராம்-நகுலன் குழு, தவேந்திரன் குழு, சிரஞ்சீவி மாஸ்டர் குழு, மாத்தையாவின் விசுவாசிகளைக் கொண்ட மாத்தையா குழு, கருணா குழு, பிள்ளையான் குழு எனப் பல குழுக்களும் உள்ளன. இவை புலம்பெயர் தேசங்களில் மட்டுமன்றி தமிழீழத்திலும் இயங்குகின்றன.

இக் கும்பல்களோடு இரா.சம்பந்தரின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி, வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி ஆகியவற்றைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும், தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இயங்கும் கல்விமான்கள் மற்றும் தொழிலதிபர்களையும் இந்தியப் புலனாய்வுத்துறை பயன்படுத்துகின்றது.

g

ஈழத்தீவில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறக்கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பு போல் குறியாக இருக்கும் சிங்கள அரசைப் பொறுத்த வரை, இந்தியப் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வரும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் என்பது அதற்குக் கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். இதனால் தான் கடந்த காலத்தில் தமது புலனாய்வுத்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட ஒப்ரேசன் டபிள் எட்ஜ் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட கும்பல்களை இந்தியாவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் பயன்படுத்துவதற்கு சிங்களமும் ஒத்துழைக்கின்றது.  

இவ் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை திரைவிலக்கிக் காட்டும் திகில் தொடராகவே ‘ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை’ என்ற மகுடத்திலான இப்பத்தி கட்டவிழத் தொடங்கியுள்ளது.

இதில் தெய்வீகனின் கொலை தொடக்கம், தமிழீழ தாயகத்தில் ஆயுதப் போராட்டத்தை தொடங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் வெடிமருந்துகளுடன் அடிக்கடி சிங்களப் புலனாய்வாளர்களால் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்கள் உட்பட, மீண்டும் புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் குழப்பங்களை விளைவிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளின் சூட்சுமங்கள் வரை இனி வரும் வாரங்களில் முடிச்சவிழ்க்கப்படும்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான திறவு கோல் இந்தியாவிடம் இருப்பது போன்றும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நிலவும் கேந்திர நலன்சார் முரண்பாடுகளைப் பயன்படுத்தி இந்தியாவை எமது பக்கம் வளைத்து, இந்தியாவின் உதவியுடன் தமிழீழ மண்ணில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தைத் தொடக்கித் தமிழீழத் தனியரசை உருவாக்கலாம் என அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் போலிப் பரப்புரைகளையும் சரி, இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் அரணாக ஈழத்தமிழர்கள் இருப்பார்கள் என்று அண்மைக் காலங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் வெளியிட்டு வரும் கருத்துக்களையும் சரி, ஒப்ரேசன் சாணக்கியா 2.0 என்ற எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் கருத்தியல் பரிமாணங்களாகவே நாம் பார்க்க வேண்டும்.

சரி, தமிழீழ மண்ணில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறுவதைத் தடுப்பதற்கு இந்தியா முன்னெடுத்து வரும் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை எதற்காக ஒப்ரேசன் சாணக்கியா 2.0 என்ற மகுடத்தின் கீழ் வெளிக்கொணர்கின்றோம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இந்தியப் புலனாய்வுத்துறையினரின் வெளியகப் புலனாய்வுக் கட்டமைப்பாக விளங்கும் றோ நிறுவனத்தின் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக விளங்குவது சாணக்கியர் எழுதிய அர்த்த சாத்திரம் ஆகும். சாணக்கியருக்கு கௌடில்யர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. சமஸ்கிருதத்தில் இதன் பொருள் சதிகாரன் என்பதாகும். தவிர, 1968ஆம் ஆண்டு றோ நிறுவனத்தை உருவாக்கிய பொழுது எந்த விதமான சூழ்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்தியாவது பாரதத்தின் எல்லைப்புற எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றிற்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகளின் வெற்றியை உறுதி செய்யுமாறு அந் நிறுவனத்தின் தலைவரான ஆர்.என்.காவோ அவர்களிடம் இந்திரா காந்தி பணித்திருந்தார்.

புலனாய்வு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது பற்றிய குறிப்புக்களில், எதிரி நாடுகளின் பலம், பலவீனம் பற்றிய தகவல்களைத் திரட்டுவது மட்டுமன்றி, எதிரி நாட்டு மக்களிடையே போலியான தகவல்களைப் பரப்பி, அதன் மூலம் அவர்களுக்குப் போலியான நம்பிக்கைகளையும் ஊட்டுவதும் ஒற்றர்களின் கடமை என்கிறார் சாணக்கியர். ஒற்றர்களை சம்ஸ்த (ஓரிடத்தில் நிலையாக நிற்போர்), சங்கார (நகர்ந்து திரிவோர்) என இரு வகையாக பகுக்கும் சாணக்கியர், ஒற்றர்களாக இருப்பதற்குப் படை வீரர்களும், கல்விமான்களும் மட்டுமன்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் தகுதி வாய்ந்தவர்கள் என்கின்றார்.

அதிலும் எதிரி நாட்டு மன்னனால் அல்லது அவனது தளபதிகள் - மந்திரிகளால் அவமானப்படுத்தப்பட்டோர், பொருளாதர இழப்புக்களுக்கு ஆளானோர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சிறையில் இருந்து வெளிவந்த கைதிகள், வறுமையில் வாடுவோர் மற்றும் தனிப்பட்ட ஒழுக்கத்தில் பலவீனம் கொண்டோர் போன்றவர்களை ஒற்றர்களாகப் பயன்படுத்துவது அதிக பயன் தரும் என்கிறார் சாணக்கியர்.

இவர்களை விட துறவிகள் (இக்காலச் சாமியார்கள்), வணிகர்கள், குடிசைக் கைத்தொழில் புரிவோர், சமையல்காரர்கள், முடி திருத்துநர்கள், பிச்சைக்காரர்கள், விலைமாதுக்கள், செவிடர்கள், முட்டாள்கள் எனப் பல தரப்பட்டோரை ஒற்றர்களாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் அர்த்த சாத்திரத்தில் சாணக்கியர் அவர்கள் விரிவாக எடுத்து விளக்கியுள்ளார்.

இவ்வாறு சாணக்கியர் வகுத்த யுக்திகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட றோ நிறுவனம் முன்னெடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஒன்றின் பெயர் ஒப்ரேசன் சாணக்கியா. இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட காஸ்மீர் பிராந்தியத்தில் 1991ஆம் ஆண்டு றோ தொடங்கிய இந் நடவடிக்கை ஈட்டிக் கொடுத்த வெற்றிகள் ஒன்றிரண்டல்ல.

இந் நடவடிக்கையை றோ தொடங்கியதன் முக்கிய நோக்கம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காஸ்மீர் மாநிலத்தை ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடுவித்து, அதனை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிஸ்புல் முஜாகதீன் என்ற ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதாகும். இதற்காக சுதந்திரப் போராளிகள் போன்று பாசாங்கு செய்து, 1991ஆம் ஆண்டு காஸ்மீர் மாநிலத்தில் களமிறங்கிய றோ புலனாய்வாளர்கள், தம்மை ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பின் போராளிகளாக அடையாளப்படுத்திக் கொண்டதோடு, தமது போராட்டத்திற்கு நிதி திரட்டும் போர்வையில் காஸ்மீரில் உள்ள செல்வந்தர்களை இலக்கு வைத்துக் கொள்ளை, உடமைகளை எரித்தல், பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துதல் போன்ற நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்கான பயிற்சிகளை இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட், றோ புலனாய்வாளர்களுக்கு வழங்கியது.

இக்காலப் பகுதியில் ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பிற்கும், காஸ்மீரை இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து, பாகிஸ்தானின் இன்னொரு மாநிலமாக அல்லாது இறைமையுள்ள தனிநாடாக உருவாக்குவதற்காகப் போராடி வந்த ஜம்மு கா~;மீர் விடுதலை முன்னணிக்கும் (ஜே.கே.எல்.எப்) இடையில் வெடித்த மோதல்களில், ஜே.கே.எல்.எவ் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட றோ புலனாய்வாளர்களின் ஒரு பிரிவினர், இவ்வாறு கொல்லப்பட்ட ஜே.கே.எல்.எப் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களை தம் வசப்படுத்தி இந்திய புலனாய்வுத்துறையின் ஒற்றர்களாக மாற்றினர்.

அத்தோடு ஹிஸ்புல் முஜாகதீன் போராளிகள் போன்று பாசாங்கு செய்து றோ புலனாய்வாளர்கள் மேற்கொண்ட கொள்ளை, சொத்து எரிப்பு, பாலியல் வன்புணர்ச்சி ஆகிய நாசகார நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோரை அணுகிய இதே பிரிவினர், இவர்களையும் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஒற்றர்களாக மாற்றியமைத்தனர். இதனால் காஸ்மீரின் பெரும்பாலான கிராமங்கள் சாணக்கியர் வரையறுத்த சம்ஸ்த, சங்கார ஆகிய வகைகளைச் சேர்ந்த ஒற்றர்களால் நிறையத் தொடங்கின.

இது காஸ்மீரில் போராளிகள் யார், அவர்களின் ஆதரவாளர்கள் யார், இந்திய ஒற்றர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியாத அளவிற்கு அங்குள்ள மக்களிடையே பெரும் குழப்பம் உருவெடுக்க வழிகோலியது.

அத்தோடு நின்று விடாது போராளிகள் போன்று ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பிற்குள் ஊடுருவிய றோ புலனாய்வாளர்கள், 1991ஆம் ஆண்டின் இறுதியில் அவ் அமைப்பை இரு இயக்கங்களாகப் பிளவுபடுத்தினர். இதில் முஸ்லிம் முஜாகதீன் என்ற பெயரில் பிளவடைந்த இயக்கத்தின் தலைவர் 1993ஆம் ஆண்டு கைது செய்யப்பட, அவ் அமைப்பு செயலிழந்து போனது.

மறுபுறத்தில் மொகமட் யூசூப் பர்றே என்ற காஸ்மீரிய சட்டமன்ற உறுப்பினரை வசப்படுத்திய இந்தியப் புலனாய்வாளர்கள், காஸ்மீரிய சுதந்திரப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு என்று அவரது தலைமையில் இக்வான் உல் முஸ்லிமீன் என்ற ஒட்டுக்குழுவை உருவாக்கி, அதன் மூலமும் ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பை பலவீனப்படுத்தினர். இன்றும் காஸ்மீரில் ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பு இயங்கினாலும், 1988ஆம் ஆண்டு அவ் அமைப்பு தோற்றம் பெற்ற பொழுது இருந்த வீரியத்துடன் இப்பொழுது அது இல்லை எனலாம்.

இது தான் காஸ்மீரில் முன்னெடுக்கப்பட்ட ஒப்ரேசன் சாணக்கியா நடவடிக்கை இந்தியப் பேரரசுக்கு ஏற்படுத்திக் கொடுத்த பெறுபேறாகும்.

18.05.2009 உடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கு நிலைக்கு இல்லாமல் போன பின்னர் தமிழீழ மண்ணில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறாமல் இருப்பதைத் தடுப்பதற்கு சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இந்தியப் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வரும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை, சாரம்சத்தில் ஒப்ரேசன் சாணக்கியாவின் பல பரிமாணங்களைக் கொண்டது. இதனால் தான் இவ் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை ஒப்ரேசன் சாணக்கியாவின் இரண்டாவது வடிவமாக நாம் கருத வேண்டும். ஆயினும் ஒப்ரேசன் சாணக்கியாவின் முதலாவது நடவடிக்கையில் இருந்து இரண்டாவது நடவடிக்கை பல விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது எனலாம். ஏனெனில் முதலாவது நடவடிக்கையின் மையப்புள்ளி காஸ்மீராக இருந்தது என்றால், இரண்டாவது நடவடிக்கை மூன்று மையப்புள்ளிகளைக் கொண்டுள்ளது. அவை தமிழீழம், தமிழகம், மேற்குலக தேசங்கள் ஆகியவையாகும். இதனாலேயே இந் நடவடிக்கை ஒப்ரேசன் சாணக்கியா 2.0 என அழைக்கும் தகுதி பெறுகிறது.

(தொடரும்)