தமிழினப்படுகொலையின் அடிப்படையை உடைத்தெறியும் சிங்களப்பேரினவாதத்தின் தொலைக்கரங்கள்! - சோழ.கரிகாலன்

சர்வதேசம் வேடிக்கை பார்த்து நிற்க, இனப்படுகொலையாளர்கள் மீண்டும் சிறீலங்காவின் ஆட்சிபீடத்தில் அமர்ந்து, பெரும் ஆணவத்துடன் இருக்க, தமிழீழ மக்கள் தங்களின் மீதான சிங்கள இனவெறி அரசின் இனப்பபடுகொலையின் நினைவுகளை, பெருத்த வலியுடன் மே18 இல் நினைவுகூறுகின்றனர். தங்களின் காணாமற்போன உறவுகளிற்காகக் கண்ணீர் வடித்து நினைவுகூறுவதா, அல்லது இன்னமும் நம்பிக்கையுடன் காத்து நிற்பதா என்ற கலக்கத்திலும் பல்லாயிரம் மக்கள். புலம்பெயர் தமிழீழ மக்கள் சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டி இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்று, இனப்படுகொலையாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்கள் என்று இன்னமும் எங்களை நம்பி வாழும் எங்களின் உறவுகள்.

ஆனால் நாங்களோ இங்கு அந்த நம்பிக்கைகளை உடைத்து, சிங்களத்தின் இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.

ஐ.நா சபையின் கண்ணாடிகளினூடாக, நின்று கொண்டு தமிழீழத்திற்கும், இனப்படுகொலைக்கான நீதிக்கும், விலைபேசிக் கொண்டு நிறகின்றது ஒரு கூட்டம். மாதம் 25.000 யூரோ கொடுத்தால் தமழழீத்தையும் அதற்கான நீதியையும் 15 வருடங்களில் வாங்கி விடலாம் என்று, வருமானத்திற்காகக் காணொளியில் அரசியல் செய்து கொண்டு நிற்கின்றது ஒரு கூட்டம். காலம் தாழ்த்திக் காலம் தாழ்த்தி, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற தத்துவத்திற்கமைய சிறீலங்கா இனப்படுகொலை அரசை இந்தக் கூட்டம் காப்பாற்றவே தங்களைக் களம் இறக்கி உள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, இனப்படுகொலை என்ற சொல்லையே அழிப்பதற்கு இன்னொரு குழு களம் இறங்கி உள்ளது. பிரான்ஸ் முழுவதும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில், தமிழீழ மக்கள் பேரவை, தமிழீழ இனப்படுகொலைக்கான நீதிகோரும் செயற்பாட்டைத் தொடர்ந்து கொண்டு, மே 18 நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் நிறைவேற்றி வருகின்றனர். சிறீலங்கா, தமிழினத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்குச் சாட்சியாக, செவ்ரோன் மாநகரப் பூங்காவில் அமைந்துள்ள இனப்படுகொலைக் கல்லில் ஆரம்பிக்கும், மே 18 இனப்படுகொலை நாள் அஞ்சலி நிகழ்வுகள், கிளிசி-சூ-புவாவில் அமைந்துள்ள, பட்டினிக்கெதிரான அமைப்பில் பணிபுரிந்தவர்களைக் கொன்றொழித்த மூதூர் படுகொலையின் நினைவுக் கல்லிலும் தொடரப்பட்டுப் பின்னர் ஒரு பொது இடத்தில் ஆரம்பித்து, கள நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.

ஆனால் இவற்றைச் சிதைக்கும் வகையில், இனப்படுகொலை என்ற சொல்லையே மறுதலித்து, செந்நெருப்பு நாளென, எங்களின் இனத்தின் மீதான இனவழிப்பினைச் சிறுமைப்படுத்தும் இழிய செயலை ஒரு குழு ஆரம்பித்துள்ளனர். சார்சல் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த மோசமான செயல், சிறீலங்கா அரசாங்கத்தின் மீதான இனவழிப்புக் குற்றத்தை, மறைக்கும் செயலாகவே அமைந்துள்ளது.

ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முதற்களப் பலியான லெப். சங்கர் அவர்களின் நினைவுக் கல்லில், மிகத் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும், அது மாற்றப்படவே இல்லை. தமிழீழ விடுதலைப் போரின் முதலாவது வித்து சிவகுமாரன் அவர்களே. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற்களப் பலியே லெப்.சங்கர் அவர்கள். இது முதற் தவறாக உள்ளது. அத்துடன் பிரெஞ்சு மொழியில், 'தமிழீழத்தில்' என்ற பதம் தெரிவிக்ப்படாமல், இல்லாமல் சிறீலங்காவில் இரண்டு சமூக இனங்களின் சண்டையில் லெப் சங்கர் கொல்லப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற ஒரு மாபெரும் உன்னதப் போர், சிறுமைப்படுத்தப்பட்டு, இரண்டு சமூகங்களிற்கிடையிலான சண்டையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லும் இனப்படுகொலை என்ற சொல்லையே அழிக்கும், சார்சல் தமிழ்ச்சங்கம் உருவாக்கிய நினைவிடமாகும்.

அடுத்த முக்கிய விடயமாக, இனப்படுகொலை என்ற சொல்லை அகற்றியது மட்டுமல்லாமல், ஒரு இனப்படுகொலை நாளை, எதற்காக ஒரு மாவீரனின் நினைவிடத்தில் ஆரம்பிக்வேண்டும். இதன் பின்னாலும் மாபெரும் காரணம் மறைந்துள்ளது.

இத்தனை காலமாக, மே 18, இனவழிப்புச் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட எங்களின் உறவுகளிற்கான நீதி கேட்கும் நாளகவே, அனவரும் இணைந்து, நீதிக்காகப் பேராடி வருகின்றோம். ஆனால் இந்த இனப்படுகொலை நாளை, செந்நெருப்பு நாள் என்று மறுதலித்து, விடுதலைப் புலிகளின் வீரர்களிற்கான ஒரு நாள் என்று உருவகப்படுத்தவதற்காகவே, இதை ஒரு மாவீரனின் நினைவுக்கல்லில் வைத்து நடாத்த முயல்கின்றனர். இங்கு சிறீலங்காவின் குற்றங்கள் கழுவப்பட்டு, இனப்படுகொலைக்கான நீதியென்ற அடிநாதத்தைச் சிதைத்து, இவர்கள் செய்யமுயல்வது யாரின் நன்மைக்காக? மாவீரர்களிற்கான மாவீரர் தினம் இருக்க, அவ்விடத்தில் எதற்காக மே 18 நிகழ்த்தப்படுகின்றது?
பெருந்தொகையில் தமிழர்கள் வாழும் பகுதியில், இப்டியான ஒரு செயலைச் செய்வது, எங்களிற்கான நீதியை மறுதலிக்கும் செயலாகவே உள்ளது. இதன் பின்னணியில் யாரின் தொலைக்கரம் நீள்கின்றது. யாரின் நன்மைக்காக இந்தச் செயல் நடாத்தப்படுகின்றது?

அதேநேரம், இனப்படுகொலை நாளை ஒருங்கிணைக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உப கட்டமைப்பாகவே, தமிழ்ச் சங்கங்களின் கூட்மைப்பும், அதன் கீழான தமிழ்ச் சங்கங்களும் உள்ளன. இப்டியான ஒரு முரண்பாடான, தமிழினத்திற்கான நீதியைக் கேள்விக்குள்ளாக்கும் செயலைச் செய்யும் ஒரு தமிழ்ச்ஙகத்தின் மீதான நடவடிக்கைகளோ எதிர்வினைகளோ, அதிகாரபூர்வமாக வராதது ஏன் என்ற கேள்வியும் எழுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.