ஆசிரியர் தலையங்கம் - உலகிற்கோர் முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் பேரழிவை தமிழினம் கடந்து பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் ஒப்பிடமுடியாவிட்டாலும், உயிரிழப்புக்களும் பொருளாதார இழப்புக்களும் என்று தமிழினம் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தை, இன்று உலகம் இன்னொரு வடிவில் சந்தித்துக்கொண்டிருக்கின்றது.

2009 இன் ஆரம்பம் தொடக்கம் மே 18 வரைக்கும் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு மேலாக, சந்தித்த பேரழிவுகள் தமிழினம் தன் வரலாற்றில் என்றும் சந்தித்திராதவை, நிகழ்ந்த கொடூரங்கள் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாதவை. பொருளாதாரத் தடைகளையும், மருத்துவத் தடைகளையும் விதித்துவிட்டு தமிழினத்தை ஓடஓட விரட்டிவிரட்டி வேட்டையாடியது சிங்களப் பேரினவாதம்.

யார் உயிரிழப்பார்கள், யார் தப்பிப்பழைப்பார்கள் என்ற நிலை தெரியாத அகோரமான நாட்கள் அவை. தங்கள் உறவுகளைக் காத்துவிட வேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் வீதிகளில் இரவு, பகல் பாராது ஓய்வின்றிப் போராடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மனிதப் பேரழிவைத் தடுக்கவேண்டிய உலகம், கைகட்டி வேடிக்கை பார்த்திருந்தால்கூட தமிழினம் தன் பலம்கொண்டு தன்னைத் தற்காத்திருக்கும். மாறாக, இந்தப் பேரழிவுக்கு சிங்களப் பேரினவாத்துடன் தோளோடு தோள் நின்றது.

4

மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் இணைந்து ஆடிய தமிழின அழிப்பு நரபலி வேட்டைக்கு உலகம் முண்டுகொடுத்து வரலாற்றின் பெரும் பழியைச் சுமந்துநிற்கின்றது. உலகின் எந்தவொரு மூலையிலும் மனிதப் பேரழிவு நடந்தால் அதனைத் தடுத்துநிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்புமிக்க ஐ.நா. கூட அதற்குத் துணைபோனது வேதனையின் உச்சம். ஓர் இனத்தை அழித்துவிட்டு, தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டத்தை அழித்தொழித்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டது சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல, இந்த உலக வல்லாதிக்கமும்தான்.

ஆனால், காலச்சக்கரத்தின் சுழற்சியில் இன்று உலகமே இன்னொரு பேரழிவுக்கு முகம் கொடுத்து நின்கின்றது. கொரோனா கொல்லுயிரி மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக ஒட்டுமொத்த உலக வல்லாதிக்கமும் மூச்சடங்கி முடங்கிக்கிடக்கின்றது. மனிதப் பேரழிவுகள் ஒருபுறம், பொருளாதார பேரழிவுகள் மறுபுறம் என நிமிர்ந்தெழுவது எப்படியென்று தெரியாது முழு உலகமுமே விழிபிதுங்கி நிற்கின்றது.

2009 இன் ஜனவரி தொடக்கம் மே மாதம் வரைக்கும் நாள்தோறும் இந்த உலகிற்கு சாவுக் கணக்கைக் கொடுத்துக்கொண்டிருந்தது தமிழினம். இப்போது அதே மாத காலப்பகுதிகளில் இந்த உலகம் நாள் தோறும் சாவுக் கணக்கை அறிவித்துக்கொண்டிருக்கின்றது. காயமடைந்து உயிர்பிழைக்கக்கூடிய தமிழர்கள்கூட, மருந்துகளின்றியும், மருத்துவமனைகள் இன்றியும் காப்பாற்ற வழியின்றி உயிரிழந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று, மருத்துவமனைகள் இருந்தும் மருந்துகள் இருந்தும் காப்பாற்றமுடியாது உலகெங்கும் மனிதர்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்பாவித் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனஅழிப்பில் உயிரிழந்ததுபோலவே, கண்ணுக்குத் தெரியாத எதிரியின் அழிப்பிலும் அப்பாவிப் பொது மக்களே பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழின அழிப்புப் போரின் முடிவில் யார் தப்பிப் பிழைப்பார்கள் என்ற ஏக்கம் நிறைந்திருந்ததுபோலவே, இந்தப் பேரழிவின் முடிவில் யார் உயிரிழிப்பார்கள், யார் தப்பிப் பிழைப்பார்கள் என்ற பெரும் ஏக்கமே உலகெங்கும் நிறைந்திருக்கின்றது.
     
பூவும், பிஞ்சும், காயும், கனியும் என எந்த வயது வேறுபாடுமின்றி நரவேட்டையாடியது சிங்களம். உலகின் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை மட்டுமல்ல, தடைசெய்யப்பட்ட இரசாயனவியல் ஆயுதங்களையும் கொண்டுவந்து கொட்டி பேரழிவை ஏற்படுத்தியது. அவற்றை மறைப்பதற்கு இன்றுவரை சிங்களப் பேரினவாதத்துடன் இந்த உலகமும் துணைநிற்கின்றது. ஆனால், இன்று, கொரானாக் கொல்லுயிரிக் கிருமி ஒரு இரசாயனவியல் தாக்குதலா? இயற்கையாக நேர்ந்துவிட்ட பேரவலமா? என்பதைக்கூட உறுதிப்படுத்தமுடியாமல் குழம்பித் திணறுகின்றது உலகம்.

மகிந்தவினதும், கோத்தபாயவினதும் கூட்டு இனப்படுகொலைக்கு உதவிய உலகம், இன்றும் மீண்டும் அதே அவர்களின் கூட்டு ஆட்சிக் காலம் தொடங்கியவுடன் இந்த அவலத்தை எதிர்கொண்டிருப்பது இயற்கையின் விசித்திரம்.

மகிந்தவும், கோத்தபாயவும் இன்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் இனிவரும் நாட்களில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள் சாதாரணமானவையாக இருக்கப்போவதில்லை. கொரோனா கொல்லுயிரியின் தாக்குதலில் இருந்து பொருளாதார ரீதியாக இந்த உலகம் மீண்டெழ இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையென்பதைக்கூட கணிப்பிடமுடியாமல் உலகம் திணறுகின்றது. தானே மீண்டெழ முடியாது திண்டாடப்போகும் உலகம், மற்றவர்களுக்கு உதவ முன்வரும் என்பது வெறும் நாடகமாகவே இருக்கும்.

உலகின் பொருளாதார உதவியையும், அவர்கள் வழங்கும் கடன்களையும் மட்டும் நம்பியே நாட்டை வழிநடத்தும் சிங்களப் பேரினவாதத்திற்கு இந்தப் பொருளாதார அவலம் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏன் இப்படியானவொரு காலத்தில் ஆட்சியில் அமர்ந்தோம் என்று மகிந்தவையும், கோத்தபாயவையும் கதிகலங்க வைக்கும்.

அறவழியில் நின்று தங்கள் உரிமைக்காகப் போராடியவர்கள் தமிழர்கள். ஆனால், அறத்தை மறந்து அநீதியின் வழியில் சிங்களத்துடன் கைகோர்த்து நின்று தமிழினத்தை அழித்தது உலகம். அறம் தமிழர்களுக்கு இரண்டு வகை. அறத்தின் வழியில் நின்று போலராடுவது. அடுத்து, அறத்தின் வழியில் நிற்காத எதிரியை அறம் பாடிக் கொல்லுவது. முள்ளிவாய்க்காலில் நின்ற தமிழர்களும், உலகெங்கும் வாழ்ந்த தமிழர்களும் மகிந்தவையும் கோத்தபாயவையும் நோக்கி பாடிய அறம் கொஞ்சமல்ல. இது, நீதியின் பக்கத்தில் நின்றுகொண்டு அநீதிக்கு எதிராகப் பாடப்பட்ட அறம். அந்த அறம் வீண்போகாது. எதிரியை அழிவை நோக்கித்தள்ளி, நீதியை ஒருநாளில் வழங்கியே தீரும்.