முடிவல்ல ஆரம்பம். எது?

வலி  சுமந்த மாதத்தில்,
மனம் முழுவதும் வலிகளைச் சுமந்து  கொண்டு,
பா  எழுத வரிகளைத் தேடுகிறேன்,
என் மீது  எனக்கு கோபம்  பொங்கி எழுகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்,
என்று கூக்குரல் கொடுத்தாயே, கூவித்திரிந்தாயே,
பதினொரு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.
நீ என்ன செய்தாய்? என்ற கேள்வி,
என்னை முள்ளாய்க் குத்துகிறது.

வல்லரசுகளோடு நேருக்கு நேர் நின்று போர் புரிந்த - உன் சகோதர சகோதரிகள்
பிறந்த  வீரமண்ணில்  பிறந்த நீ,
இன்று வரை என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என் மனச்சாட்சி, என்னைக் கேள்விக்கு  மேல் கேள்வி  கேட்கிறது.
என் முன்  நானே, தலைகுனிந்து நிற்கின்றேன்.

மக்களின் ஓலச்சத்தம் இன்னும் என் கேட்கிறது.
இரத்த ஆறு ஓடியது,
கண் முன்னே தெரிகிறது.
இது கனவு அல்ல....
உண்மை  என்று,
தொண்டையில்  இருந்து வந்த  கேள்வி,
என் தொண்டையுள்ளே சிக்கித் தவிக்கிறது.

தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டம்,
மே மாதம், வலி சுமந்த மாதம்,
பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டன. - நீ என்ன  செய்து கொண்டிருக்கிறாய் என்று,
படுகொலை  செய்யப்பட்ட மக்களும்,
வீரச்சாவடைந்த எம்  சகோதரர்களும்,
என்னிடம் கனவிலும், நினைவிலும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்,
பதிலின்றி தலைகுனிந்து நிற்கின்றேன் நான்.

- கவிப்பிரியன்.